திருச்செங்கோடு தொடர்ச்சியாக ஜாதிய ரீதியான வெறுப்புணர்வுகள் மிகுந்த ஊராக பெயரெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய மாதொருபாகன் நூலை எழுதிய பெருமாள் முருகன் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். அந்நூலில் விடுதலைக்கு முன்பு பெண்களின் இழிநிலையையும், மூடநம்பிக்கைகளையும் பெருமாள் முருகன் விரித்துரைத்திரந்தார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்துத்துவ சக்திகளும், ஜாதிய சக்திகளும் சேர்ந்து ஜாதிய ரீதியாக அவரை கடுமையாக அவமானப்படுத்தி, மிரட்டி அவர் அத்தோடு எழுதுவதையே நிறுத்தி விட்டார்.

இங்கு தான் வேறு உயர் ஜாதிப் பெண்ணைக் காதலித்தார் என்ற ஒரே காரணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ் என்கிற தலீத். அதைக் கொலை போல் காட்ட ரயில் தண்டவாளத்தின் மேல் அவரது பிணத்தை வீசிச் சென்றனர் ஜாதி வெறியர்கள்.

இந்த கொலை வழக்கை சரியாக விசாரித்து குற்றவாளிகளைப் பிடிப்பவதற்காகவே தலித் சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணுப் பிரியா நியமிக்கப்பட்டார். நாலாபக்கமும் இருந்தும் அவருக்கு நெருக்குதல்கள் வந்ததாக கூறுகிறார்கள். உண்மையான குற்றவாளிகள் மீது காக்கியின் கரங்கள் படிந்து விடாமல் விஷ்ணுப்பிரியா நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் கூறுகிறார்கள். சாதிய குற்றவாளிகளை நெருங்கவிடாமல் நெருக்குதல்கள் அதிகமாகவே விஷ்ணுப் பிரியாவும் தூக்கில் தொங்கிவிட்டார்.

இப்போது விஷ்ணுப் பிரியாவின் மரணம் சி.பி.ஐயிடம் விடப்படாமல் தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டியே விசாரிக்கிறது. ஜாதியக் கொடுமைகள் இன்னும் ஒழிந்தபாடில்லை. நேற்று கடலூரில் கல்லூரியில் படித்து வந்த தனது பேத்தி வேறு ஒரு தாழ்ந்த சாதிப் பையனை காதலித்து அவனுடன் ஓடிப் போனதால் மனம் கொதித்து, பேத்தியென்றும் பாராமல் கழுத்தையறுத்துக் கொன்றிருக்கிறார் வீராசாமி என்கிற அந்த ஊர் நாட்டாமை.

Related Images: