ஹெல்மெட் கட்டாயமாக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் பரிந்துரைத்தார். இந்த வழக்கு விசாரணை நடவடிக்கைகள் புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் டி.வி.திரை வைத்து நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் இப்படி வழக்கு ஒளிபரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரையில் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அப்போது, நீதிபதிகளையும் விமர்சனம் செய்தனர். மேலும் ஹெல்மெட் உத்தரவுக்கு எதிராக 12 தீர்மானங்களை நிறைவேற்றினர். நீதித்துறையில் ஊழல் மலிந்திருப்பதாலேயே இது போன்ற அரக்கத்தனமான சட்டங்கள் வருகின்றன என்று தங்களது போராட்டத்தை நீதித்துறையின் ஊழலையும் எதிர்த்து நீடித்தனர். அதனால் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் தர்மராஜிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தர்மராஜ், தலைவர் என்ற பொறுப்பில் தீர்மானங்களில் கையெழுத்திட்டதாகவும் தனிப்பட்ட முறையில் அவற்றை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி தமிழ்வாணன், “மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், செயலாளரும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினால் பரிசீலிக்கப்படும். இல்லாவிட்டால் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட பேரமர்வு விசாரணைக்கு மாற்றலாம்” என்று பரிந்துரைத்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சி.டி.செல்வம், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்றார்.

கட்டாய ஹெல்மெட் சட்டம் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஊழல் செய்வதை தூண்டுகோலாக இருக்கிறது. வாகனங்களில் செல்வோர் சாலை வரி கட்டுகிறார்கள். ஆனால் சாலைகளோ படுமோசமாக உள்ளது. அதனை சீரமைக்க எந்த அரசும் முன்வரவில்லை.

பெரும்பாலான சாலை விபத்துகள் மதுவினால்தான் ஏற்படுகின்றன. நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கின்ற டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பிக்காதது ஏன்? காரணம் அதில் புரளும் லாபம். மதுவினால் ஏராளமான விபத்துக்களும், உயிர்ப்பலிகளும் ஏற்படுகிறது. அதனை தடுக்க நீதித்துறை தவறிவிட்டது. நாடெங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனை தடுக்க நீதித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திலும் ஊழல் மலிந்து தான் கிடக்கிறது.

ஹெல்மெட் அணியும் சட்டத்தால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக அருகில் கடைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர், திருவிழாவிற்கு செல்வோரை, அவசரத் தேவையாக செல்வோரை காவல்துறையினர் மடக்கிபிடித்து அடிக்கடி வசூல் செய்கின்றனர். லஞ்ச ஊழலில் மலிந்திருக்கும் நீதிமன்றத்தால் மக்களுக்கு சார்பாகச் செயல்பட முடியாது.

Related Images: