நேதாஜி குடும்பத்தை கண்காணித்த இந்திய அரசு !!

இன்று பெரும் போராளியாக இந்திய நாடு கொண்டாடும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தை இந்தியா சுதந்திரம் அடைந்த பின் தீவிரவாதிகளைக் கண்காணிப்பது போல் இந்திய உளவுத்துறை கண்காணித்து வந்தது இன்று வெளியான நேதாஜி பற்றிய ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

போர்மோசா (தற்போதைய தைவான்) நாட்டில் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த விமான விபத்தில், இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணித்தார் என்று 22ம் தேதி டோக்கியோ ரேடியோவில் அறிவிப்பு வந்தது. நேதாஜியின் இருப்பு பற்றி அதற்குப் பின் தகவல் இல்லை. அவர் விமான விபத்தில் இறந்தார் என்பதை யாரும் நம்பவில்லை.

மேற்கு வங்க அரசு இன்று நேதாஜி பற்றி வெளியிட்ட 12ஆயிரம் பக்கங்கள் வரையுள்ள 64 வகை ஆவணங்களில் இதுகுறித்த தகவல் உள்ளது. 1948 முதல் 1968ம் ஆண்டு வரை நேதாஜியின் குடும்பம் தொடர்ச்சியாக இந்திய உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டிருக்கிறது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் டாக்டர்.லில்லி அபேக், நேதாஜியின் சகோதரர் சரத் சந்திரபோசுக்கு எழுதிய கடிதத்தில், “1946ம் ஆண்டுவாக்கில், ஜப்பானை சேர்ந்த சில தகவல்கள், நேதாஜி உயிரோடு இருப்பதை உறுதி செய்கின்றன. இந்தியாவுக்கும் எங்கள் நாட்டுக்கும் இடையே உள்ள நல்ல ராஜாங்க நட்பை கருத்தில் கொண்டு, என்னால் முழு விவரத்தையும் தெரிவிக்க இயலவில்லை” என்று கூறியுள்ளார்.

1949ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி லில்லி நேதாஜி சகோதரருக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், “உங்களுக்கு நேதாஜி பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா..? யுனைட்டட் பிரஸ் ஊடகம், நேதாஜி பெகிங்கில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது” என்ற தகவலை தெரிவித்துள்ளார். இவை அனைத்தையும் நேதாஜி குடும்பத்தை கண்காணித்து வந்த உளவுத்துறை குறிப்பெடுத்துள்ளது. கொல்கத்தாவிலுள்ள நேதாஜி ஆய்வு அமைப்பையும், உளவுத்துறை கண்காணித்து வந்துள்ளது.

1965ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 20ம் தேதி, நேதாஜியின் உறவினர் சிசிர் குமார் போஸ் என்பவருக்கும், நேதாஜி பற்றி புத்தகம் எழுதிய ஜப்பானிய எழுத்தாளர் டட்சுவோ ஹயாசிடா என்பவருக்கும் நடுவே, கடித உரையாடல் நடந்துள்ளது. “இந்திய வெளியுறவு துறை முன்னாள் அதிகாரியான சத்ய நாராயண் சின்ஹா, போர்முசா அரசு கூறும் தகவலில் பொய் இருப்பதாக கூறினார். போர்முசா அரசிடமுள்ள ஆவணங்கள் படி, விமான விபத்து 1944ம் ஆண்டு அக்டோபரில்தான் நடந்துள்ளதே தவிர, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எந்த விபத்தும் நடக்கவில்லை. இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டால், இந்த ஆவணங்களை போர்முசா அரசு தர தயாராக உள்ளது” என்று சிசிர் குமார் போஸ், ஜப்பான் எழுத்தாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த கடித ஆவணங்கள் அனைத்தும் வெளியானதில் நேதாஜி குடும்பத்தை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வந்தது உறுதியாகிறது. வெளியில் சொல்வது தேசத்தலைவர். உண்மையில் நடத்தியது தீவிரவாதி போல. நேதாஜி இன்று ஒரு ராணுவத்தை உருவாக்கியிருந்தால் அவர் பிரபாகரனைப் போல் வளைக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பார். இன்று இதுதான் நியதி.