காவிரியின் குறுக்கே அணை – மீண்டும் கர்நாடகா பிரச்சனை!

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்று மீண்டும் பிரச்சனை கிளப்பி பிரபலம் அடைய நினைக்கிறார் வாட்டாள் நாகராஜ். கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் நேற்று பெங்களூரு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பேசியதாவது:

“கர்நாடக மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. ஆடு, மாடுக‌ளும் உயிரிழப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க அரசியல் கட்சியினர் முன்வர வேண்டும்.

வட கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக மகதாயி நதியில் இருந்து கால்வாய் மூலம் நீர் கொண்டு வரும் கலசா பண்டூரி திட்டத்துக்கு கோவா மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வீணாக கடலில் கலக்கும் மகதாயி நதி நீரை மக்கள் குடிநீராக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக கோவா மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.

இதே போல காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தினால் பெங்களூரு, மைசூரு, கோலார், சிக்கபளாப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்கும். கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை தடுத்து குடிநீராக பயன்படுத்த தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் நலனுக்கும், நீர் ஆதாரத்திற்கும் தடையாக இருக்கும் கோவா அரசை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கர்நாடகாவில் வருகிற 26-ம் முழு அடைப்பு நடை பெறுகிறது. கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கு 500-க்கும் மேற் பட்ட கன்னட அமைப்புகளும், லாரி உரிமையாளர் சங்கமும், திரை அரங்கு உரிமையாள‌ர் சங்கமும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்பையொட்டி கர்நாடகா வில் இருந்து தமிழ்நாடு, கோவா மாநிலங்களுக்கு போக்குவரத்து முழுமையாக தடுக்கப்படும். இதேபோல கர்நாடகாவில் இருந்து செல்லும் பால், தயிர், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களும் நிறுத்தப்படும்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, ‘கலசா பண்டூரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக‌ மூன்று நாட்க‌ள் அவசரகால சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும். கலசா பண்டூரி, மேகே தாட்டு திட்டம் தொடர்பாக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்தப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.

தண்ணீரை தேசிய உடமையாக்கவேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை எழுப்பவேண்டிய நேரம் இது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ‘தன் மாநில நதி நீர் தனக்கு மட்டுமே’ என்று பேச ஆரம்பித்தால் இந்தியா ஒன்றுபட்ட நாடு என்று பேசுவதன் அர்த்தம் என்ன ? பி.ஜே.பி ஆளும் கர்நாடகாவில் இப்படிப் பேசுவதை மத்தியில் ஆளும் மோடி அரசு கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறது.