காஷ்மீர் விவகாரம் சேர்க்கப்பட்டால்தான் இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறுகையில், “பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டை முன்னிறுத்தியே நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட்டார். இப்போது, அவர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரத்துடன் ஆணையிடும் போக்கையே விரும்புகிறார். அதை ஏற்க முடியாது என்று ஏற்கெனவே இந்திய அரசிடம் தெரிவித்துவிட்டோம்” என்று கூறியுள்ளார். இச்செய்தி பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ பத்திரிகையில் வந்துள்ளது.

ரேடியோ பாகிஸ்தான் வெளியிட்ட செய்தியில், “காஷ்மீர் உள்ளிட்ட கிடப்பில் உள்ள எல்லா பிரச்சினைகள் குறித்தும் தீர்வு காண இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை உலக நாடுகள் அனைத்துமே ஆதரிக்கின்றன.சர்வதேச கிரிமினல் குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக இந்தியா கூறுவதை ஏற்கமுடியாது. இதற்கு பாகிஸ்தான் தகுந்தவகையில் பதில் கொடுக்கும்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப்படை அதிகாரிகளும் இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் டெல்லியில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் 2003-ம் ஆண்டு ஏற்பட்ட சண்டை நிறுத்த உடன்பாட்டை அமல்படுத்த வேண்டிய பிரச்சினை எழுப்பப்படும். தொடக்க முதலே இந்தியாவின் கொள்கை பாகிஸ்தான் விரோத மனப்பான்மை கொண்டதாகும். பாகிஸ்தானில் இந்தியாவின் தலையீடு இருப்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.

Related Images: