தமிழருக்கு ஐ.நாவில் துரோகம் செய்யப் போகும் மோடி!

ஐ.நா. தொடங்கி 70 வருடங்களாகிறது. இதை முன்னிட்டு ஐ.நா. சபை மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி உரையாற்ற உள்ளார். முன்னதாக அவர் கடந்த ஜூலை 4-ம் தேதி ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதம் செய்தியாளர்களிடம் விநியோகிக்கப்பட்டது. அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

“தீவிரவாதத்தை துளி கூட பொறுத்துக் கொள்ள முடியாத நமது நிலையை, தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான செய்தியை நாம் தெளிவாக அறிவிக்க வேண்டும். அதற்கு 70-வது ஐ.நா. மாநாட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு சாரா சிலர் ஆயுதங்களை ஏந்தி உலகுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். அவர்களுக்கு கடுமையான தகவலை நாம் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சினையில் ஐ.நா. கூடுதல் முயற்சி மேற்கொண்டு பாதுகாப்புக்கு உள்ள புதிய சவால்களை கையாள வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் சாம்பலில் இருந்துதான் ஐ.நா. சபை உருவாக்கப்பட்டது. இப்போது அரசு சாரா சர்வாதிகாரிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். மேலும் ஐ.நா. மாநாட்டில் சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக விரிவான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

முன்பெல்லாம் தீவிரவாதம், வன்முறை போன்றவை இல்லை. இப்போது தீவிரவாதம் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. அதை ஒடுக்க உலகளாவிய அளவில் திறமையான திட்டங்களை கொண்டு வர வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் சிக்கலாகிக் கொண்டே செல்கின்றன. எதிர்பார்க்க முடியாத வகையில், தெளிவாக விளக்கம் அளிக்க முடியாத வகையில் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன.”

முன்கூட்டியே எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதத்தை மேலோட்டமாகப் படித்தால் தீவிரவாதத்துக்கு எதிரான என்னே அவரது வீர முழக்கம் என்று தோன்றும். ஈழப் படுகொலைகள் மிக வெளிப்படையாக நடத்தப்பட்டதால், அதற்கு நிறைய ஆதாரங்களும் கிடைத்திருப்பதால் அதை அப்படியே மறைக்க அமெரிக்காவின் கையாளான ஐ.நாவுக்கு இயலாது. எனவே ஐ.நாவின் அறிக்கை குற்றங்கள் நடந்ததை ஒப்புக் கொண்டது.

ஆனால் அடுத்து என்ன நடக்கும் ? இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தங்கள் கையாளாக மாறியிருப்பதுபோல் நடிக்கும் இலங்கைச் சிங்கள அரசைக் காப்பாற்ற முயலும். அதற்கு சீனா போன்ற நாடுகள் வீட்டோ பவரையும் பயன்படுத்தலாம். ஆனால் அவ்வளவு தூரம் போகாமல், ஏற்கனவே 23 நாடுகளின் கண்மூடித்தனமான ஆதரவை, கியூபா உட்பட, பெற்றுள்ள இலங்கை, இந்தியாவின் ஆதரவைப் பெற்றாலே போதும். இந்தியாவின் ஆதரவு நாடுகள் ஓட்டுக்களும் பெற்றுவிடும். 44 ஓட்டுக்கள் பெற்றால் தீர்மானம் செல்லாமல் போய்விடும்.

இதை உறுதி செய்யவே ரணில் இப்போது இந்தியா வந்து எல்லோரையும் பார்த்துவிட்டுப் போனார். அடுத்து ஐ.நாவில் மோடி தீவிரவாதம் பற்றி முழங்குவார். அடுத்து இலங்கை தீவிரவாதத்துக்கு எதிரான போர் புரிந்ததாக தீர்மானம் அமெரிக்கா இயற்றும். நம் பிரதமர் மோடி ஆளும் இந்தியா உட்பட எல்லோரும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். செத்துப் போன 2 லட்சம் தமிழர்களின் ஆன்மாக்கள் 44 வாக்குகளில் செல்லாமல் போய்விடும்.

தமிழ்நாடு எங்கே இருக்கிறது ? இந்தியாவில் தானே நண்பர்களே ?