திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைிலுள்ள பச்சைமலையடிவாரத்தில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் செய்யப்பட்டுவரும் ஆய்வில் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதன் பயன்படுத்திய கருவிகள் கிடைத்துள்ளன.

பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட 6 வேட்டைக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தவிர புதிய கற்காலத்தைய 58 கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இக்கருவிகளில் 26 செவ்வக வடிவிலும், 19 சதுர வடிவிலும், 10 நீள்செவ்வக வடிவிலும் உள்ளன. இவை எடைபோன்று உபயோகிக்கப்பட்டிருக்கலாம். முதல் சங்ககாலமும், புதிய கற்காலமும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டம் என்பதால் இக்கருவிகள் முதல் தமிழ்ச்சங்கத்து தமிழர்கள் உபயோகப்படுத்தியதா எனவும் ஆராய முற்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாராய்ச்சியில் மூன்றாம் சங்ககாலத்தைச் சேர்ந்த பானை, ஒடுகள், ஆட்டுக்கல் போன்றவை உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இப்பகுதியில் 12 ஆட்டு உரல்கள் கிடைத்துள்ளன. பண்டைய மக்கள் திணை, சாமை, கேழ்வரகு போன்றவற்றை இடிக்க பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பச்சை மலையில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததை உறுதி செய்யலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Images: