ஈழப் படுகொலையை மறைக்க இந்தியாவின் ஆதரவு கேட்டு வரும் ரணில்!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதையடுத்து, அந்நாட்டுச் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது. பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு ரணில் விக்ரமசிங்க வருகிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.

இலங்கையின் இன அழிப்புக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டியே அவர் இங்கு வருகிறார் எனத் தெரிகிறது. இந்தத் தீர்மானம் இலங்கைக்கு ஆதரவாகவே இருக்கிறது. போரில் விடுதலைப்புலிகளை, தீவிரவாதிகளைக் கொன்றதைப் பாராட்டியே இந்த அமெரிக்கத் தீர்மானம் வருகிறது. அதற்கு பல நாடுகளின் ஆதரவும் உண்டு. இந்தியாவும் இதுவரை தமிழருக்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. இதிலும் ஆதரவாக ஓட்டளித்தால் அது இலங்கைக்கு வலுவான ஆதரவாக இருக்கும்.

முன்னதாக தமிழக கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கடந்த 1ம் தேதி, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அவர்கள் சென்ற படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். இப்படிச் சூழல் வரும் என்று கணித்தே முன்கூட்டியே பிடித்து வைத்திருந்தது போல, இவ்வளவு நாளும் மீனவர்களை விடுதலை செய்ய மறுத்த இலங்கை, இப்போது ரணிலின் வருகையையொட்டி விடுதலை செய்வதாக அறிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் மாதம் இலங்கை சென்றபோது நல்லெண்ண நடவடிக்கையாக சிறைபிடிக்கப்பட்டிருந்த 86 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்பு மேலும் 54 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டார். அதாவது தமிழக மீனவர்கள் தான் குற்றவாளிகள். இலங்கை, இந்திய அரசுகள் நல்ல மனதோடு இருக்கின்றன என்று காட்டவே இது போன்ற கைதுகளும், விடுவிப்புகளும். அரசுகளின் இந்த மாதிரியான நாடகம் தமிழ் மக்களுக்குப் புரியவே புரியாது என்று இருநாட்டு அரசுகளும் நினைப்பது வேடிக்கை தான்.