கிரானைட் குவாரிக்கு குழந்தைகள் நரபலி – விடிய விடிய தோண்டிய சகாயம்!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவருக்கு மிரட்டல் போன்கள், கடிதங்கள் வந்தன. இதனை தொடர்ந்து சகாயத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்காக வந்தபின் சாட்சிகளை, நீதிபதிகளை வாங்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடமுடியும் என்றாலும் இதை வழக்காக ஆக விடாமல் குற்றவாளிகள் மறைமுகமாக தடுத்து வருகின்றனர்.

பிஆர்பி நிறுவனத்தினர் கிரானைட் குவாரிகளைத் தோண்டுவதற்கு பலிகொடுக்க, மனநலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் இடத்தில் தோண்டும் பணி முடிந்துள்ளது. பி.ஆர்.பி குவாரியில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியான் என்பவர் சகாயத்திடம் கொடுத்த புகார் மனுவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுத்து உடல்களை புதைத்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

மேலூர் அருகே உள்ள சின்ன மலம்பட்டி பகுதியில் உள்ள மணிமுத்தாறு ஓடையில், நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கிடைத்த தகவலை வைத்து அங்கு தோண்ட முடிவு செய்தார் சகாயம். ஆனால், அந்த இடத்தைத் தோண்ட காவல்துறை மெத்தனம் காட்டியது. அந்தக் குறிப்பிட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்யும் வரை, அங்கிருந்து நகரப் போவதில்லை என விடிய விடிய அங்கேயே உட்கார்ந்து சகாயம் போராடியதால் தோண்ட நீதிமன்ற அனுமதி பெற்று தோண்டினர். இரவில் குற்றவாளிகள் முன்னதாகத் தோண்டி தடயங்களை அழித்து விடும் வாய்ப்பு இருந்ததால் சகாயம் விடிய விடிய சம்பவ இடத்திலேயே உட்கார்ந்திருந்தார். அவ்வாறு தோண்டியதில் 7 மாத குழந்தை உட்பட 4 எலும்புக் கூடுகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. நரபலி பூஜை செய்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன.

அந்த உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி பல ஆண்டுகளாக இடுகாடாகவும் பயன்படுத்தப்பட்டது என்பதால் தடயங்களை பிரித்தறிவதில் சிரமம் ஏற்படலாம் என்கிறார்கள்.