யாராய் இருந்தால் எனக்கென்ன?

பெரம்பலூர் அருகேயொரு கிராமம். பள்ளிச் சிறுமியான அவளுக்கு அன்று காலையிலிருந்து ஒரே ஆவல், பரபரப்பு. அவளுடன் பயிலும் பள்ளித் தோழி அர்ச்சனா நேற்று பெரிய மனுஷியாகிவிட்டாள். அவர்கள் வீட்டில் விசேஷம் வைத்திருக்கிறார்கள். அவளும் சகமாணவிகளுமாக எல்லோரும் சேர்ந்து தோழியின் வீட்டிற்குச் செல்கிறார்கள்.
“வாங்க பொண்ணுங்களா.. உள்ளே போங்கோ போய்ச் சாப்பிடுங்கோ” என்று அன்பாக அவர்களை வரவேற்ற அர்ச்சனாவின் மொட்டைப் பாட்டி சிறுமி சிவகாமியை மட்டும் தனியே வாசலுக்கு வெளியே நிறுத்துகிறார். “நீ இப்படி ஓரமா உக்காரடியம்மா..”. உள்ளே தோழிகள் அனைவருக்கும் தலைவாழையிலையில் விருந்து பரிமாறப்பட வாசலுக்கு வெளியே ஒரு ஓரத்தில் சாக்கின் மேல் உட்காரவைத்து ஒரு அலுமனியத் தட்டில் உணவும் ஒரு அலுமினிய லோட்டாவில் தண்ணீருமாக தனக்கு தரப்பட்ட விருந்தை அந்தச் சிறுமி கூசியபடியே மனதில் ஏதோ உடைபட்ட உணர்வோடு உண்டாள்.

சிவகாமியின் பூர்வீகம் பெரம்பலூர். அம்மா பெயர் தாண்டாயி. அப்பா பழனி-முத்து அந்தக்கால சுயேட்சை எம்.எல்.ஏ. சிவகாமியின் ஆரம்பக்கல்வி பெரம்பலூர் அரசினர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியிலும், உயர்நிலைக் கல்வி புனித தோமினிக் பெண்கள் பள்ளியிலும் , திருச்சியில் பி.யூ.சி.யும் பி.ஏ.வரலாறும், சென்னை குயின் மேரி கல்லூரியில் எம்.ஏ.வரலாறும் என்று பெரும்பாலும் எல்லாவற்றிலும் முதல் ரேங்க்கிலேயே வளர்ந்தது. பி.யூ.சியில் தமிழ்ப்பாடத்தில் மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்தார். கதை,கவிதை,பேச்சு,கட்டுரை மற்றும் விளையாட்டு என எல்லாவற்றிலும் முன் நின்றார். ஜெயிக்க வேண்டும் என்ற போர்க்குணமும், அதற்கேற்ற ,உழைப்பும் அவரிடம் நிறையவே இருந்தன. அதற்கேற்ப வகுப்புத்தலைவி, பள்ளி மாணவித் தலைவி, விடுதி மாணவித் தலைவி… என சிவகாமியை இளம் வயதிலும் பதவிகள் தேடி வந்தன்.

சிவகாமியின் புத்தி கூர்மையைப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்கள் ‘நீ ஐ.ஏ.எஸ். தேர்வு எழுது’ என்று சொல்ல சிவகாமிக்கு மகிழ்ச்சி. அனால் அதை எப்படி எதிர் கொள்வது என்று யோசித்தார். ஒரு தேர்வை எழுதிப் பார்த்துவிட்டால் தான் என்ன? என்று துணிந்த அவர் 1979ல் முதல் தேர்வை எழுதினார். முதல் தேர்விலேயே வெற்றி பெற்றார். ஆனால் தர வரிசைப்படி வருமான வரித்துறை அதிகாரி பதவி தான்கிடைத்தது. அடுத்த ஆண்டு மறுபடி ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுத சொல்லி வைத்த கில்லி மாதிரி அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்று உயர்நிலை ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். உ.பி.யில் சுல்தான்பூர் மாவட்டத்தில் பயிற்சி முடித்தார். பிறகு உ.பி.யிலேயே அலகாபாத் மாவட்டம் கர்ச்சனா சப் டிவிஷன் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்றார். பின்பு செங்கல்பட்டு சார் ஆட்சியராக பதவியேற்றார்.

1991ம் ஆண்டு வேலூர் மாவட்ட ஆட்சியராக சிவகாமி பொறுப்பேற்றுக் கொண்ட போது அவரது வயது 34. அதிரடியாக எதையும் எதிர் கொள்கிற வேகம். குடிநீர்த் தட்டுப்பாடு நிறைந்த ஒரு கோடைக்காலம். குடிநீர் கிடைக்கவில்லை என்று வேலூர் நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ‘ஏன் இத்தனை தட்டுப்பாடு?’ என சிவகாமி விசாரணையில் இறங்க வேலூரின் பிரதான சி.எம்.சி. மருத்துவமனை எதிரில் இருந்த தனியார் லாட்ஜிற்கு பொதுக்குழாயிலிருந்து தண்ணீர் போவது தெரிந்தது. உடனடியாக அதை துண்டிக்க உத்தரவிட்டார். ஆனால் நகராட்சி ஊழியர்கள் ‘அம்மா இது எம்.பி.ஜீவரத்தினத்திற்கு சொந்தமான ஓட்டல்!’ என்று தயங்கித் தயங்கி சொன்னார்கள்.
ஜீவரத்தினம் .காங்கிரஸ் கட்சி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றுமுறை உறுப்பினராக வென்று. டெல்லியில் கோலோச்சிக் கொண்டிருந்த மூத்த எம்.பி.க்களில் ஒருவர். ’பிரச்சினையை தீர்க்கவேண்டியவரே பிரச்சினைக்கு காரணமாகக் கூடாது. ஒரு வி.ஐ.பி.க்காக ஓராயிரம் பொது மக்கள் பாதிக்கக் கூடாது?’ என்ற சிவகாமி எம்.பி.யின் ஓட்டலுக்கு போன பொதுத் தண்ணீர்க்குழாய் இணைப்பைத் துண்டித்தார். விளைவு ! சிவகாமி ஐ.ஏ.எஸ். சுற்றுலாத்துறை இயக்குனராகவும், சுற்றுலா வளர்ச்சிக் கழக எம்.டி.யாகவும் தூக்கியடிக்கப்பட்டார்.

உ.பி.யில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஓராண்டுதான் பணியாற்றியிருந்தாலும் அங்கே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ,பகுஜன் கட்சி தலைவர்கள் கன்ஷிராமும், மாயாவதியும் அரும்பாடுபட்டது சிவகாமியின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இதனுடைய தாக்கம் தான் 2008ம் ஆண்டு தான் வகித்த அரசு செயலாளர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் நுழைந்து, தமிழ்நாடு பகுஜன் சமாஜ்( பி.எஸ்.பி.) கட்சியின் மாநிலச் செயலாளராகி கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடக் காரண்மாக இருந்தது ! ‘ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தே மக்களுக்கு நிறைய பணிகள் செய்யமுடியுமே?! கிடைத்த அதிகாரத்தை விட்டுவிட்டு ஏன் அரசியலுக்கு வரவேண்டும் ? ‘ சிவகாமியிடம் பலர் இப்படிக் கேட்டார்கள்.

அரசுத்துறையில் பல்வேறு பல்வேறு பதவி வகித்தாலும் ஒரு வருடம் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக பணிபுரிந்தபோது அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற தனக்குக் கிடைத்தப்பேறு என்று தான் நினைத்திருந்தார். ஆனால் நடந்ததோ வேதனையானதாக இருந்தது. பல்வேறு நலத்திட்டஙளை திட்டமிட்டு, விளக்கி அரசிடம் சமர்ப்பித்தார். ஆனால் அமைச்சர்களோ, “ஒரேயடியாக எல்லாவற்றையும் வாரிக் கொடுத்துவிட்டால் அப்புறம் எப்படி அரசியல் செய்வது ?! அவர்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நாம் கொஞசம், கொஞ்சமாகத் தான் கொடுக்க வேண்டும்.” என்றார்கள். அவரைச் சந்தித்த தலித் தலைவர்களிடம் ‘நம் ச்முதாய மக்கள் பல்வேறு இயக்கங்களில், கட்சிகளில் சிதறி கிடக்கிறார்கள். தலைவர்களான நீங்களும் இப்படி பிரிந்து கிடக்காமல் ஒரே கூரையின் கீழ் வந்தால் நிறைய சாதிக்கலாமே” என்று சிவகாமி கேட்க, “அடடே நல்லா இருக்கே! ஆனா உஙளுக்கு எதுக்கும்மா இந்த வேண்டாத வேலை! ” என்று அலட்சியமாகப் பேசினார்கள். “இங்கு பல இயக்கங்கள் சுயநலமாக, அரசியல் தந்திரமாக, சந்தர்ப்பவாதமாக இருக்கிறன… என்கிற வேதனையான உண்மையே என்னை அரசியல் களத்தில் இறங்கவைத்துவிட்டது.” என்கிறார் சிவகாமி. பகுஜன் சமாஜின் தலைவர் கன்ஷிராம் மறைந்து விட மாயாவதியால் உ.பி.யை விட்டு இந்தியா முழுவதும் தலித் அரசியலில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் ‘சமூக சமத்துவப்படை கட்சி’ என்ற அம்பேத்காரின் இயக்கங்களில் ஒன்றின் பேரிலேயே புதுக்கட்சியை துவக்கினார் சிவகாமி.

இலக்கிய தாகம் கொண்ட சிவகாமி ஆரம்ப காலங்களில் ஆனந்தாயி, குறுக்குவெட்டு, கடைசி மாந்தர்… இப்படியெல்லாம் நாவல்களையும், கதைகளையும், கவிதைகளையும் எழுதினார். அதன் பின்பு தலித் நில உரிமைப் போராட்டம், பழங்குடியினர் நில உரிமை, அப்னா பஞ்சாயத்து, தலித் மக்களுக்கு தனி பட்ஜெட்…என்று நிறைய தலித் சிந்தனைகளை எழுதினார்.. அவரது எழுத்துகளில் கூட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையே வந்து விழுந்தது. இவரது நூல்கள் பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. குறிப்பாக ‘தலித் மக்களுக்கு தனி பட்ஜெட்’ நூல் இந்தியாவின் பல மாநில அரசு அதிகாரிகளே வாங்கிப் போயிருக்கிறார்கள்.

8வது உலகத்தமிழ் மாநாட்டில் தலித் இலக்கியத்திற்கான தனி அமர்வு இவரது முயற்சியால் ஏற்பட்டது. தலித்திய சிந்தனைகளை கொண்ட கோடாங்கி இதழை துவக்கினார். மாத இதழாக வெளிவந்த ‘கோடாங்கி’ இதுவரை பல நூறு தலித் எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமையுடையது. இப்போது ‘புதிய கோடாங்கி’ என்கிற பெயரில் வருகிறது. இலக்கியப் படைப்புகள், வாசகர் வட்டம், கருத்தரங்கம்… என சிவகாமியின் இலக்கியப் பயணம ஒருபக்கம் நடந்துக்கொண்டிருக்க… இன்னொரு பக்கம் பெண்கள் ஐக்கிய பேரவை, அரவாணிகள் நல மாநாடு, தலித் நில உரிமை இயக்கம்… பன்னாட்டு கல்வி மய்யம் என சமூக பயணமும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. தலித்துகளுக்கென்று ஐ.ஏ.எஸ்.பயிற்சி மய்யத்தை துவக்கினார். ஆனால் அதில் சேருமளவிற்குக் கூட போதிய தலித் மாணவர்கள் வரவில்லை. இதுதான் இன்னும் தலித்துகளின் கல்வி எழுச்சி நிலை என்கிறார் வருத்தமாக.

சாதி மாறி காதலித்தற்காக உயிர் நீத்த தலித்துகள் இளவரசன், கோகுல்ராஜ் நினைவாக ‘காதல் கல்வெட்டுத் தூண்’ ஒன்றை நிறுவ உள்ளார். வட மாவட்டங்களில் நிறுவப்பட இருக்கும் இத்தூணுக்குத் தேவையான இடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காதலை ஆதரிக்கும் சிவகாமி இப்படி சொல்வார், “ஒரு ஆணோ,பேண்ணோ தனக்கு வேண்டிய படிப்பையோ, பணியையோ, வாழ்க்கைத் துணையையோ அவர்களே தேர்ந்தெடுத்துக் கோள்ளலாம்!”. ஆனால் சிவகாமியின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இவரது கணவர் ஆனந்த சந்திர போஸ் தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவராக இருக்கிறார். சுனந்த் ஆனந்த், சுவேதன் ஆனந்த் என்று இரண்டு மகன்கள்; இருவருமே பட்டதாரிகள். ஒரு மகன் அமெரிக்காவிலும், இன்னொரு மகன் இந்தியாவிலும் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்த மகன் சமீபத்தில் விபத்தில் இறந்துவிட சிவகாமி உடைந்துபோனார். அந்த நேரத்தில் தான் திருப்பதியில் செம்மரக் கடத்தல் என்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட மகன் இறந்த துக்கத்தையும் தாங்கிக்கொண்டு திருப்பதி வனப்பகுதிக்கு ஓடினார். துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்கள் வேறு சாதியினர் என்றாலும் தமிழர்கள் அல்லவா! மனித உரிமை மீறல் இல்லையா! என்று ஆவேசமாக பேசினார்.

வரும் தெர்தலில் சமத்துவப் படை எந்தக் கட்சியோடு கூட்டு சேரும்? என்றால் “எஙளுக்கு அதிக சீட் யார் தருகிறார்கள் என்பதைவிட தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு யார் அதிகம் பயன் பெறச்செய்வேன் என்கிறார்களோ அவர்களோடு தான் கூட்டு!” என்கிறார். சமீபத்தில் இந்திய அய்க்கிய இறையியல் அகாடமி ’தெய்வீக முனைவர்’ என்னும் விருதினை இவருக்கு அளித்து கவுரவித்துள்ளது.

போராட்டங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை! போராட்டங்கள் பலரை அதுவாகவே சந்திக்கிறது. சிலர் தானாகவே சென்று போராட்டத்தைச் சந்திக்கிறார்கள்.

சிவகாமி ஐ.ஏ.எஸ் இதில் இரண்டாவது வகை.

-நன்றி. ஜனனம் வார இதழ்.