ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக,இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

கடந்த 2009-ல் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்குமிடையே நடந்த இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை திட்டமிட்டே படுகொலை செய்தது சிங்கள ராணுவம். இந்தப் போரில் சர்வதேச போர்விதிகளை மீறி ரசாயனக் குண்டுகளை பயன்படுத்தியது. வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த நடேசன் உள்ளிட்ட தலைவர்களை சுட்டுப் படுகொலை செய்தது. எண்ணற்ற பெண்களையும், பெண் போராளிகளையும் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் இந்த இனப்படுகொலைகளை வெறுமனே இரு தரப்பிடையே நடந்த போர்க்குற்றம் என்று கூறி தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டது. இதில் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது உண்மை என்றும் இது குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்க மறுத்த இலங்கை அரசு உள்நாட்டு விசாரணைதான் நடத்துவோம் என்கிறது.

இலங்கையின் இந்தப் படுகொலைகளுக்கு இந்திய அரசும், அமெரிக்காவும் ஆதரவாக இருக்கிறது. மோடி ஐ.நா சபையில் தீவிரவாதம் பற்றி திடீரென பேசப் போகிறேன் என்கிறார். நேற்று டெல்லியில் இந்திய-இலங்கையின் முப்படைத் தளபதிகள் கூடிப் பேசி இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பயிற்சி தருவதாக ஒப்பந்தம் செய்து அறிவிக்கின்றனர். இப்படி எல்லாமே ஈழத் தமிழருக்கு எதிராகவே நிகழ்ந்திருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று, இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மட்டுமே வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜெனீவா நகரில், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தை அவர்கள் அடைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 30-வது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக அமெரிக்கா, தீவிரவாதத்தை திறமையாக ஒடுக்கியதாக இலங்கையைப் பாராட்டி, வரைவு தீர்மானம் ஒன்றை தயாரித்து உள்ளது. இதில் பெரும்பாலான அம்சங்கள் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Related Images: