ரீமேக் ராஜாக்களாக இருந்த ஜெயம் ராஜாவும், அவரது தம்பி ஜெயம் ரவியும் கொஞ்சம் பயம் களைந்து முதன் முதலாக நேரடித்தமிழ்ப்படத்தை தந்திருக்கிறார்கள். எழுத்தாளர்கள் சுபாவின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜா.
`ரமணா` `கத்தி` `ஏழாம் அறிவு` போன்ற சமூகத்துக்கு ஹீரோ நல்லது செய்கிற கதை. ஐ.பி.எஸ். பணியின் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு அங்கே ஒரு பாண்டவர் டீமே துணைக்கு இருக்கிறது. இன்னமும் பயிற்சி முடியாத இந்த நேரத்திலும் இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் செல்கிறார்கள். குற்றங்களை நேரில் பார்க்கும்போதெல்லாம் அதைக் கண்டறிந்து களத்தில் குதித்து குற்றவாளிகளைப் பிடித்து வைத்துவிட்டு இவர்கள் எஸ்கேப் ஆகிறார்கள்.
இப்படி ஒரு செயின்பறிப்பு வழக்கில் 32 குற்றவாளைகளைப் பிடித்து ஒப்படைக்க, மிக விரைவிலேயே அத்தனை பேரும் வெளியே நடமாட அதிர்ச்சியாகும் ஹீரோ, இன்னும் ஆழமாக இறங்க, முதலமைச்சர் வரை அத்தனைபேரையும் கைக்குள் போட்டுக்கொண்டு, நாட்டையே நாசப்படுத்தும் விஞ்ஞானி வில்லன் அரவிந்தசாமி சிக்குகிறார்.
அப்புறமென்ன அரவிந்தசாமியை ஹீரோ தனி ஒருவனாக எப்படி வழிக்கு கொண்டுவந்தார் என்பதுதான் கதை.

முதலில் பேசப்படவேண்டியவர் இவ்வளவு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கத்துணிந்த அரவிந்தசாமிதான். இவர் வில்லனாக நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் படித்தபோதெல்லாம் மெல்லிய புன்னகைதான் வந்துபோனது. பட்…அடுத்து கொஞ்ச காலத்துக்கு தமிழ்சினிமாவின் முக்கியவில்லன் வேடத்துக்கு இயக்குநர்களின் முதல் சாய்ஸ் அரவிந்தசாமிதான் என்று சொல்லுமளவுக்கு பின்னிப்பெடலெடுத்துவிட்டார் சாமி.
தேர்வு செய்த தவறான படங்களால் பிரசாந்தை நோக்கி பீடுநடை போட்டுக்கொண்டிருந்த தம்பி ரவியை இப்படத்தில் தாங்கிப்பிடித்திருக்கிறார் ராஜா. 160 நிமிடங்கள் ஓடினாலும் விறுவிறு திரைக்கதையால் தொய்வின்றி நகருகிறது படம்.
நயன் தாரா ஆண்ட்டி என்கிறதையும் தாண்டி அரைக்கிழவியாகிவிட்டார். ஆனாலும் நாலு சீன்கள் போனதும், நாயகி மாயாவாகவே மாறிய மாயத்தை வேறு யாரு செய்துவிட முடியும்? அந்த டூயட்டை மட்டும் பாடல் எடுத்த கடலிலேயே கரைத்துவிட்டிருக்கலாம்.
ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் தனி ஒருவனுக்கு தக்க பக்கவாத்தியங்கள்.
சமீபத்திய சலிப்பான படங்களுக்கு மத்தியில் தனி ஒருவன் தனித்து நிற்பவன்தான்.

Related Images: