சீனாவில் மீண்டும் ‘நாமிருவர் நமக்கிருவர்’ !

இந்தியாவின் வறுமைக்கும், கஷ்டத்துக்கும் காரணம் மக்கள் தொகைப் பெருக்கம் தான். அதனால் ஒன்றுக்கு மேல் பெறவே விடக்கூடாது என்று நம் நாட்டில் வாதிட்டு வருகிறார்கள். ஆனால்
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை நாடாகவும், அதேவேளையில் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் விளங்கும் சீனாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இருந்த நடைமுறை தோல்வியடைந்து நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது என்பதை சீனா கண்டுள்ளது. இதனையடுத்து, ஒரு குழந்தை கொள்கைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக் கொள்கைதான் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது என்று சீன அரசு இத்தனை வருடங்களாகக் கூறி வந்தது.

இந்த ஒரு குழந்தைக் கொள்கையினால் சீன பொருளாதாரம் வளர்ச்சியுற்றதாக சீன் அரசு இவ்வளவு வருடங்களாக கூறிவந்தாலும், இதன் விளைவுகள் இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன. வயதானவர்கள் சீனாவில் அதிக அளவில் உள்ளனர், ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்தில் கடுமையான சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டது. மேலும் அதன் உழைக்கும் சக்தியைத் தீர்மானிக்கும் இளம் மற்றும் நடுத்தர வயதினரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது.

இதனையடுத்து 2013-ம் ஆண்டு குறைந்த அளவில் சலுகைகள் அளிக்கப்பட்டு, நகர்ப்புற தம்பதியினர் 2-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதை யாரும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. தனியாய், குழந்தைகளின்றி, ஜாலியாக வாழ்வதை அவர்கள் பெரிதும் விரும்பியது தான் காரணம்.

இது சீனாவின் அனுபவம் மட்டுமல்லை. கிரீஸ், ஜப்பான் போன்ற உலக நாடுகள் பலவற்றிலும் உருவாகியிருக்கும் நெருக்கடி. எல்லோரும் குழந்தை குட்டி இல்லாமல் ஜாலியாக வாழ்வதையே விரும்புவதால் உழைப்பதற்கு ஏற்ற வயதுள்ள நபர்கள் கிடைப்பது குறைந்து நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைய ஆரம்பிக்கிறது. கிரீஸ் நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ரிட்டையர்டான, பென்சன் வாங்கும் வயதுடையவர்கள்.

அனைவரும் வளமாக வாழ்வதற்குத் தேவை ஆரோக்கியமான, இளம் உழைப்பு சக்தியே என்று முடிவுக்கு வந்ததையடுத்து ஒரு குழந்தை கொள்கையை சீனா கைவிட்டுள்ளது. அங்கே இனிமேல் இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்.