தாத்ரிக்கு செல்ல கேஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு!

டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து, அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் எனும் முதியவரை கற்கள் மட்டும் கம்புகளால் அடித்துக் கொன்றனர் இந்துத்துவா வெறியர்கள். நாடு முழுக்க பலரது கண்டனைத்தை சம்பாதித்த இந்த நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற விசாரணையில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் தலைவர் ஒவாய்ஸி கூறுகையில், “தாத்ரி சம்பவம் ஒரு திட்டமிட்ட படுகொலை. இக்லாக்கின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மாட்டிறைச்சி சாபிட்டதாக கிளம்பிய வதந்தி காரணம் அல்ல. இது மத அடிப்படைவாத தாக்குதல். குற்றவாளிகளை கைது செய்வதை விடுத்து மாநில அரசோ இக்லாக் வீட்டில் கைப்பற்றப்பட்ட இறைச்சியை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுகின்றனர். இந்த திட்டமிட்ட படுகொலை குறித்து பிரதமர் மோடி இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியியுள்ளார் ஒவாய்ஸி.

நேற்று இக்லாக்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லச் சென்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உ.பி. மாநில போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதற்கு அர்விந்த் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “தாத்ரி கிராமத்துக்குள் செல்லவிடாமல் எங்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா சென்று சந்தித்திருக்கிறார். முஸ்லிம் தலைவர் ஒவாய்ஸி சென்று சந்திக்கிறார். அவர்களுக்கு அனுமதி அளித்த போலீஸ் என்னை மட்டும் தடுப்பதன் காரணம் என்ன? நான் எப்போதும் அமைதியை விரும்புபவன். இக்லாக்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம்” எனக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் பா.ஜ.கவின் மகேஷ் ஷர்மா “இந்த சம்பவம் தவறான புரிதல் காரணமாக நடந்திருக்கும் என்று நான் கருதுகிறேன். இதை தற்செயலாக நடந்ததாகக் கருத வேண்டுமே தவிர, இதற்கு எவ்வித மதச் சாயமும் பூசக்கூடாது. இதுபற்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சென்னையில் மாட்டிறைச்சி சம்பந்தமான இந்தத் தீய போக்கைக் கண்டித்து இன்று வள்ளுவர் கோட்டம் அருகே மே 17, பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்ற ‘எனது உணவு எனது உரிமை’ போராட்டம் நடைபெற்றது.