’விருதை’ திருப்பி கொடுக்காமல் இருப்பதை விட,மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது, ’ஏன் கொடுக்க வேண்டியதில்லை’ என்பதான அறிக்கைகள். அதுவும் தி இந்து தமிழில் வந்துள்ள கட்டுரை அதி’சிறப்பு வாய்ந்த’ கட்டுரை.

//நயன்தாரா சேகலின் தர்க்கத்தின்படியே யோசித்தால் இந்த அரசாங்கம் நமக்கு வழங்கும் மின்சாரம், தண்ணீர், பொதுப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதி எனப் பல விஷயங்களை நாம் கைவிட வேண்டிவரும். அரசுச் சாலை களில் நடக்கக் கூடாது. அரசு மானியங்களை வாங்கக் கூடாது என்று இதை நீட்டித்துக்கொண்டே போகலாம்.// இப்படியாக எழுதி இருக்கிறது தி இந்துவின் கட்டுரையில்.
இவை எதுவும் அரசு வழங்கும் வசதிகளோ, சலுகைகளோ அல்ல… இந்த அரசுகள் வருவதற்கு முன்பே தண்ணீரை குடித்தே வாழ்ந்திருக்கிறோம், சாலையொரங்களில் அசோகரே மரம் நட்டிருக்கிறார், காசு கொடுத்தால்தான் தொலைதொடர்புவசதி. அரசியல் இயக்கங்களின் தொடர்புகளை தீண்டாமையோடு பார்த்து வரும் படைப்பாளிகளுக்கு இதுபோன்ற அறிவுவளர்ச்சி குறைபாடு நோய்கள் வருவதை தவிர்க்க இயலாது.

ஒரு அரசின் மக்கள் விரோத கொள்கையை அறத்தின் சார்பாக கேள்வி எழுப்ப ஒரு படைப்பாளி தனக்கும் அரசிற்கும் இருக்கும் உறவின் அடையாளத்தை புறக்கணிப்பதன் மூலம் வெளிப்படுத்துகிறார். இது மக்களிடத்தில் ஏற்படுத்தும் உளவியல் எதிர்ப்பு என்பது அபாரமானது. அரசினை தனிமைப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சி போக்குகள் சமூக மாற்றத்திற்கான நகர்வுகளில் முக்கியமானவை.

நாஜிக்கள் தங்களது அரசை நிலைநிறுத்த திட்டமிட்ட பொழுதில் அவர்கள் செய்த முதற்கட்ட நிகழ்ச்சி நிரலில் ‘சுதந்திரமான அறிவுசீவிகளை’ கொலை செய்வதே முதன்மையானது. சமூகத்தின் மனசாட்சிகளை அப்புறப்படுத்திய பின்னர் தனது கொலைகார பாசிச கருத்தியலை வளர்த்தது. இதே வழிமுறையை இந்துத்துவ பாசிச கும்பல் பின்பற்றி தனது பிடியை இறுக்குவதற்கு ஏதுவாக கல்பர்கி போன்ற கலக சிந்தனையாளர்களை கொலை செய்து அப்புறப்படுத்துகிறது. பின்னர் இந்தக் கும்பல் தொழிலாளர், விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்களுடைய பிரதிநிதிகளை கொலை செய்வார்கள். மக்கள் இலக்கியவாதிகளை கொலை செய்வார்கள். சமூகத்தினுடைய மனசாட்சிகளை அழித்த பின்னர் பெரும்பான்மையான மக்களை கொன்றொழிப்பார்கள்.

இதைத்தான் இலங்கை அரசு செய்தது. இதைத்தான் இப்பொழுது பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கும்பல் துவக்கி இருக்கிறது. இதை உணர்ந்துதான் மக்கள் படைப்பாளிகள் அபயக்குரலை எழுப்புகிறார்கள். இதை வெறுமனே விருதினை திருப்பி கொடுக்கும் நிகழ்வாக பார்க்க முடியாது. இந்நிகழ்வின் பின்னுள்ள அரசியல் ‘பாசிசத்தின் எதிர்ப்பு குரல்’ இது ஒரு எச்சரிக்கை குரல். குழிக்குள் விழப்போகும் ரயிலை தடுக்க தனது சட்டையை கழற்றி சுழற்றும் எளியவனின் குரல்.

நாஜிப்படைகளின் அரசநிர்வாகக் குழுக்கள் ‘நாஜி அரசை விமர்சனம் செய்ததற்காக இரண்டு ஆசிரியர்களையும், ஒரு கணக்காளரையும் ஊரின் சந்தையில் அனைவரின் முன் கழுத்தில் அட்டையை மாட்டி தொங்கவிட்டு அவமானப்படுத்தினார்கள். தேசாபிபாமானம் எனும் பெயரில் ஒரு பெண்ணை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மொட்டை அடித்து அவமானப்படுத்தினார்கள்’ இவ்வாறு எதிர்ப்புகளை நசுக்கிய பின்னரே படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. நாஜி சல்யூட்களை செய்ய பணிக்கப்பட்டனர் மக்கள். இவ்வாறு பாசிசம் சமூகமயமாக்கப்பட்டு இனப்படுகொலை நிகழ்த்தும் மனநிலைக்கு அச்சமூகம் தயார் செய்யபப்ட்டது. மனிதத்தன்மையற்ற நிலையை கேள்விக்குள்ளாக்கும் எந்த ஒரு தனிநபரும், அறிவுசீவியும், படைப்பாளியும், சிந்தனையாளரும், தொழிற்சங்கவாதியும், கலகக்காரர்களும் உயிரோடு விடப்படவில்லை. இவர்களை ஒழித்த பின்னர் கேள்வி கேட்காமல் ஜெர்மானியர்கள் அல்லாதவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

இச்சமயத்தில் தான் தம்மைச்சுற்றி நிற்கும் அனைவரும் ‘நாஜி’ சல்யூட் செய்யும் பொழுதில் தனி ஒரு மனிதனாய் அதை மறுத்து நின்ற பெயர் அறியா அம்மனிதன் உலகப்புகழ் பெற்றான்.
நாஜியிசம் வலுப்பெரும் போது அதைத் தனிமைப்படுத்தி, முறியடிக்க எதிர்த்து குரல் கொடுப்பது முற்போக்கு பண்பாடு. அதை கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், மக்கள் படைப்பாளிகள், கலகக்காரர்கள், சிந்தனைவாதிகள் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் இப்படியாக எவரும் இல்லை என்பதையே இவர்களின் சந்தர்ப்பவாதம் காட்டுகிறது.

ஒரு இனப்படுகொலைக்காக எழாத இவர்களது மனசாட்சி, கோபம் கொள்ளாத இவர்களது அறம், இந்திய-தமிழக நாஜிக்களிடத்தில் சரணாகதியானதை 2009ல் பார்த்தது தமிழகம். மீண்டும் ஒருமுறை இவர்கள் மரணிப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தமிழ்ச் சமூகத்தின் அறத்தினை வரலாற்றின் நெருக்கடியான காலகட்டங்களில் வெளிப்படுத்துவது ஏழை எளிய ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள் மட்டுமே… இவர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் இந்த ஒட்டுண்ணி கும்பல் இப்பொழுதாவது மக்கள் முன்னிலையில் அம்பலமானது மகிழ்ச்சியே.

கருணாநிதிகளும், ஜெயலலிதாக்களும் உருவானதற்கு இது போன்ற படைப்புலக சூழலும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

-முகநூலில் திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்)

Related Images: