‘றோம்..போர்ர்றோம்..பாப்போம்’ – ஆப்கானில்அமெரிக்கப்படை !

நம் பிரதமர் மோடி தேர்தலின் போது வெளிநாட்டிலிருந்து பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை நூறே நாளில் கொண்டு வந்து எல்லோர் அக்கௌன்ட்டிலும் தலா பத்து லட்ச ரூபாய் போட்டு அதையெல்லாம் நாம் இந்த மாசம் அரிசி பருப்பு வாங்க எடுத்து செலவழித்து விட்டோம் இல்லையா.? அதே டைப்பில் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமா, ‘நான் பதவிக்கு வந்ததும் ஒரே வருடத்தில் ஆப்கானிஸ்தானில் வெட்டியாக ஜல்லியடிக்கும் அமெரிக்க வீரர்கள் பத்தாயிரம் பேரையும் கூடாரத்தோடு காலி செய்து திரும்ப அழைத்துக் கொள்வேன்’ என்று வாக்குறுதியை அள்ளிக் கொடுத்தார்.

எட்டு வருடங்கள் ஆகியும் இன்னும் கெத்தாய் அங்கே சுற்றி வருகிறார்கள் அந்த அமெரிக்க வீரர்கள். இப்போது அதிபர் ஒபாமா 2017ஆம் ஆண்டு பதவி முடிந்து செல்லும்போது அமெரிக்க படையினர் ஐயாயிரத்து ஐநூறு பேரை ஆப்கானிஸ்தானில் விட்டுச்செல்லும் திட்டத்தை அறிவிப்பார் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இப்போது பத்தாயிரத்துக்கும் குறைவான அமெரிக்கப் படையினரே ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.
அங்கு அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தை மிகக் குறைந்த அளவில்- தூதரகத்தை தளமாகக் கொண்ட அளவுக்கு மட்டும்- வைத்திருப்பதற்கு ஒபாமா முன்னர் திட்டமிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் இதுவரை போட்ட குண்டுகளின் கணக்கு, ஆப்கானில் உள்ள ஊர்களின் எண்ணிக்கையை விட அதிகம். குண்டு வீச்சில் சாவதற்குக் கூட அங்கு மக்கள் தொகை இல்லை. அதனால் தாக்குதல் படையணியின் பணி முடிந்துவிட்டது; இனிமேல் ஆப்கன் இராணுவத்திற்கு பயங்கரவாத தடுப்பு தொடர்பான ஆலோசனை உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காக அமெரிக்கப் படையினர் அங்கிருப்பர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.