உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள் சிகரெட்டுக்கு எதிராக முடுக்கி விடும் கடுமையான பிரச்சாரங்கள் ஆகும்.

குடிப்பழக்கம் சிகரெட்டை விட பன்மடங்கு தீமையானது. சிகரெட் குடிப்பதால் மட்டுமல்லை, குடித்தாலும் கூட கேன்சர் வரும். ஆனாலும் குடிப்பழக்கம் எல்லா நாடுகளிலும் சகஜமாக கருதவைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசே இதை நடத்துகிறது. தமிழக அரசு சிகரெட் கம்பெனி நடத்தி இத்தனை ஆயிரம் கோடிகள் வருடத்துக்கு சம்பாதிக்க முடியுமா ? குடிப்பவர்களால் கிடைக்கும் வருமானம் சிகரெட் குடிப்பவர்களை விட பலமடங்கு அதிகம் என்கிற வியாபராக் கணக்கே குடியை விடுத்து சிகெரட்டை மட்டும் அரசுகள் குறிவைப்பதன் காரணம். குடிக்கு அடிமையானவர்கள் மூளையும் வேலை செய்வதில்லை. அவர்கள் பாதி அடிமைகள் என்பதால் இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது.

அதன் வெளிப்பாடாக உத்தரப் பிரதேசத்தில், சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநில முதன்மை செயலர் (சுகாதாரம்) அர்விந்த் குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

“உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் சில்லறையில் சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்தச் சட்டத்துக்கு ஆளுநர் ராம் நாயக்கும் அனுமதி வழங்கி விட்டார்.

புதிய சட்டத்தின்படி சில்லறையில் சிகரெட் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறையாக ரூ.1000 அபராதம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் குற்றம் செய்தால் ரூ.3000 அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சில்லறையில் சிகரெட் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.” இவ்வாறு அர்விந்த் குமார் கூறியுள்ளார்.

இது சில்லறை வர்த்தகம் எனப்படும் பெட்டிக் கடைக்காரர்களின் வயிற்றில் அடித்து அந்தத் தொழிலை இல்லாமல் செய்வதற்கே. அமெரிக்கா போன்ற நாடுகளில் தெருமுனைப் பெட்டிக் கடைகள் எல்லாம் சுத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. காரணம் சிகரெட்டை கூட வால்மார்ட்டில் தான் வாங்கவேண்டும் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் நினைப்பதால்.

இதே போன்றதொரு கடுமையான தடையை மதுபாட்டில் விற்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும் ஏன் ஐயா கொண்டு வரவில்லை ? வருமானம் போயிடுமே ஐயா. அதுதான் அவங்க கவலை. மக்கள் மேல் அக்கறையும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. புரிஞ்சுக்கோங்க.

Related Images: