சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்களால் சுமார் எண்பது லட்சம் கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்கிற விஷயம் மன்மோகன் அரசிற்கு தெரியவந்தது. மன்மோகன் அது யார் யார் என்று ஒவ்வொரு பெயராக கேட்டு எழுதி வாங்கி டைப்ரைட்டரில் தட்டி இந்தியாவுக்கு அனுப்புவதற்குள் அந்தப் பணங்கள் வயர் டிரான்ஸ்பரில் கண்டம் விட்டு கண்டம் மாறி எங்கோ போய் ரவுண்டடித்து வந்து போயே விட்டன.

நரேந்திர மோடி தேர்தல் நேரத்தில், செத்த பாம்பை அடிப்பது போல, அந்த இத்துப் போன லிஸ்டில் உள்ள ஆட்களைத் தேடிப் பிடித்து அத்தனை லட்சம் கோடி ரூபாய்களையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் அக்கௌன்ட்டிலும் சுமார் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்போவதாக வாக்குறுதி வேறு அளித்தார்.

மக்களுக்கு இயந்திர மனிதர் மன்மோகன் போரடித்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்ததும், கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, பணம், சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளவர்கள், அதுபற்றிய தகவல்களை தாங்களாகவே தெரிவிக்க, அரசு வாய்ப்பு அளித்தது. ஜூலை, 1 முதல், செப்டம்பர், 30 வரை, மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது வெளிநாட்டில் பதுக்கிய பணத்தை இங்கே இந்தியாவிலேயே தேடினார்கள். அதாவது பொருளை ‘அங்கே’ போட்டுவிட்டு ‘இங்கே’ தேடுவது போலத் தான் தேடினார்கள் வருவாய்த்துறையினர்.

சொத்து, பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் தாங்களே சரண்டர் ஆகி விடும்படி எச்சரிக்கை விடப்பட்டது. இந்த விவரங்களை தெரிவிப்பதற்கான கெடு, நேற்று முன்தினம் நள்ளிரவுடன்முடிவடைந்தது.

இந்த தானே சரண்டர் ஆகியதில் கிடைத்த வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது:

“கடைசி நாளில் ஏராளமானோர், தங்களின் கறுப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவித்தனர். இந்த மூன்று மாதங்களில், கறுப்பு பணம் பற்றிய, 638 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 3,770 கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு பணம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன; இது, முதல்கட்ட விவரம் தான். இந்த தொகை மாறுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது.” இவ்வாறு அந்த அறிக்கை கூறியது.

அந்தக் கெடு நாள் முடிந்ததும் ‘நாங்கள் பயங்கரமாய் வேலை செய்றோம் பாருங்க’ என்கிற தோற்றத்தைக் காட்டுவதற்காகத் தான் விஜய், தாணு, நயன்தாரா, சமந்தா வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தி 100 கோடி ரூபாயைக் கைப்பற்றிய விஷயமும். சில பத்து கோடிகளை பதுக்கிய திரைப் பிரபலங்கள் இந்த லட்சம் கோடி பதுக்கல்கார கார்ப்பரேட்டுகளின் முன்னால் ராப்பிச்சைக்காரர்கள் போலத் தெரிவார்கள்.

“இந்தியாவில் கறுப்புப் பணத்தை எடுப்பது வேறு, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்பது என்பது வேறு. இரண்டையும், ஒன்றாக பார்க்கக் கூடாது. இந்த வித்தியாசம் தெரியாதவர்கள் தான், அரசின் நடவடிக்கையை விமர்சிக்கின்றனர்.” என்று காங்கிரஸ்காரர்களைக் காய்ச்சுகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,

மொத்தத்தில் மோடி அரசு நடத்திய கருப்புப் பண வேட்டையில் இதுவரை கிடைத்தவை யானைகளும்,சிங்கங்களும் அல்ல. கிடைத்தவை எல்லாம் நோஞ்சான் முயல்களே. சொல்லப் போனால் அவர் வேட்டைக்குக் கிளம்பியதே இந்தப் யானைகளுக்குப் பதிலாக முயல்களைக் காட்டி மக்களிடம் இருந்து யானைகள் இருக்குமிடத்தை மக்களிடமிருந்து மறைக்கத்தானே.

Related Images: