வர வர சின்னப்படங்களுக்கெல்லாம் ஏன் சார் விமர்சனம் எழுதமாட்டேங்குறீங்க?` என்று நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டிருந்தார். அவருக்கு, … கடந்த வாரம் மூன்று தினங்கள் பத்திரிகையாளர் காட்சிகளில் தொடர்ச்சியாக நாங்கள் பார்க்க நேர்ந்த `ஆத்யன்`, விரைவில் இசை` மற்றும் இந்த `ஓம் சாந்தி ஓம்` படங்களை, எங்களைப்போலவே தொடர்ச்சியாக பார்த்தபிறகும் நல்ல உடல்நிலையுடன் நீடித்து இருக்க நேர்ந்தால் மேற்படி கேள்வியை மீண்டும் கேட்கும் அதிகாரத்தை வழங்குகிறேன்.

`ஓம் சாந்தி ஓம்` இந்த ஆண்டின் மற்றுமொரு பேய்த்தனமான கதை. கைவசம் படங்கள் இல்லை. அப்படியே கிடைத்தாலும் அதன் படப்பிடிப்புகள் ஒழுங்காக நடிபெற்று படம் முடிவதில்லை. அப்படியே முடிவடைந்து ரிலீஸானாலும் தியேட்டரில் சமோசா விற்பனையை விட குறைவான வசூல்… இப்படி இவரிடமே ரெண்டு டஜன் பிரச்சினைகள் இருப்பது தெரிந்தும், ஸ்ரீகாந்தை ஐந்து பேய்கள் அவர் போகும் எல்லா லொகேஷன்களுக்கும் போய்த் துரத்துகிறார்கள். ஒரு கட்டத்தில்,` உங்க பிரச்னைதான் என்ன?` என்று அவர் விசாரிக்க, முதல் பேயில் துவங்கி அஞ்சாவது பேய் வரை, அவர்களது ஃபிளாஷ்பேக்குப் போய், பிரச்னைகளைச்சொல்ல, அதை முடித்துவைக்கிறார் ஸ்ரீகாந்த்.

கதையில் நாலுவரியைச்சொன்னதற்கே, கெட்ட ஆவியாய் மாறி இப்படி கொட்டாவி விட்டால் எப்படி?
கதையை `வெல்கம் கோஸ்ட்` மாதிரி ஒரு ஆங்கிலப்படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள். ஆனால் அதை படமாக்கியிருக்கும் விதம் `செத்தவன் கையில வெத்திலபாக்கு கொடுத்த மாதிரி` என்று ஒரு சொலவடை சொல்வார்களே அதையும் விட ஊசிப்போன வடையாக சுட்டிருக்கிறார்கள்.
விக்ராந்த், பிரசாந்த்,ஸ்ரீகாந்த் ஆகியோரை உகாண்டாவுக்கு நாடுகடத்தச்சொல்லி நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு கடிதம் கொடுத்துவிட முடிவு செய்திருக்கிறேன். ஆட்சேபிக்க விரும்புபவர்கள் மனசாட்சியுடன் `ஓ.சா.ஓ.` படம் பார்த்துவிட்டு செய்யவும்.

பேய்க்கதைக்கு நடுவே கொஞ்சம் காதலும் இருக்கட்டுமே என்கிற ஐடியாவுக்கு பலியாகியிருப்பவர் நீலம் உபாத்யாயா. `பாக்க ஆழகா தான் இருக்க. ஆனா நல்ல படமா பாத்துப்பண்ணுயா`.
இசை விஜய் எபநேசராம். ஒளிப்பதிவு கே.எம்.பாஸ்கராம். இயக்கம் சூர்ய பிரபாகராம். அரே ராம்….படம் பாக்குறவங்கள கொன்னு எடுத்து பேய்களாவே மாத்தீட்டீங்களாம் .

Related Images: