பாகிஸ்தானி்ன் சிந்து மாகாணத்தில், ஜாகோபாபாத் நகரில், ஷியா பிரிவினரின் ஊர்வலத்தில், தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு, சன்னி பிரிவினரிடையே இருக்கும் நீண்டகாலப் பகையால் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரி குலாம் முர்தாஷா கூறியதாவது: “மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஷியா இன பிரிவை சேர்ந்த மக்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இந்த ஊர்வலத்தில் தீவிரவாத இயக்கத்தை சேர்நத தற்கொலை படையினர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இச்சம்பவத்தில் 8 குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாயினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.” எனக் கூறினார்.

அஷௌரா எனப்படும் இஸ்லாமியச் சடங்கு 10 நாட்களாக நடத்தப்படும். முகம்மது நபியின் பேரன் போரில் இறந்ததை நினைவுகூரும் நிகழ்வாக இது நடக்கும். இஸ்லாமிய உட்பிரிவுகளான ஷியா மற்றும் சன்னி பிரிவுகளிடையே பெரும் விரோதம் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் மைனாரிட்டியாக இருக்கும் ஷியா பிரிவினருக்கு மெஜாரிட்டியாக இருக்கும் சன்னி பிரிவினர்களால் பெரும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இருநாட்களுக்கு முன்பு ஷியா பிரிவினரின் மசூதியில் புர்கா உடையணிந்த ஷியா பிரிவைச் சார்ந்த தீவிரவாதி தற்கொலை குண்டை வெடிக்கவைத்ததில் பத்து பேர் உயிரிழந்தனர்.

Related Images: