சென்னை எழிலகம் கட்டிட கூட்டரங்கில் இன்று பருப்பு வியாபாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர், தமிழ்நாடு பருப்பு வணிகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக பருப்பு வியாபாரிகள் சங்க செயலாளர் ஆர்.ராஜகுமார், ”தமிழக மக்களுக்கு பருப்பு வகைகளை சீரான முறையிலும், குறைந்த விலையிலும் விற்பனை செய்ய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு பருப்பு வணிகர்கள் சங்கம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. பருப்பு விலையை குறைந்த விலைக்கு வழங்க முழு ஒத்துழைப்பை கொடுக்க முன்வந்துள்ளோம்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.133 முதல் ரூ.135 வரை மில் விலைக்கு விற்பனை செய்ய சம்மதித்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் இறக்குமதி செய்யப்பட்ட துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.145-க்கு மிகாமல் விற்க முடியும்.

இதுவரை சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பின் விலை ரூ.145-க்கு விற்க முடியும்” என்று ஆர்.ராஜகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 நாட்களில், இதுவரை பிடிபட்டதாகச் சொல்லப்பட்ட 90 ஆயிரம் டன் பருப்பு வகைகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் பருப்பு வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களா ? இல்லை வேறு யாரோவா ? என்று அவர் விளக்கமளிக்கவில்லை. சர்வதேசச் சந்தையில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் பருப்பை இறக்குமதி செய்து 145 ரூபாய்க்கு ஏன் விற்கிறார்கள் என்பதையும் அவர் விளக்கவில்லை. அரசும் அவர்களிடம் விளக்கம் கேட்கவில்லை. ட்ரான்ஸ்போர்ட் செலவு மற்றும் மில்லில் அரைக்கும் செலவு என்று சப்பைக் கட்டுவார்கள்.

இத்தனைக்கும் இந்தியாவின் பருப்பு உபயோகம் வருடத்திற்கு 35 லட்சம் டன்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்தப் பற்றாக்குறைக்கு இந்த இறக்குமதிகள் பற்றவே பற்றாது. உள்நாட்டில் பருப்பு விளைச்சலை வளர்க்காவிட்டால் வெளிநாடுகளிடம் பருப்பு வாங்கித் தின்றே இந்தியா பரதேசியாக வேண்டியதுதான்.

Related Images: