விஜய், தாணு, நயன்தாரா வீட்டில் வருமானவரி ரெய்டு!

நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவிருந்தது, நேற்று முதல் வருமானவரித்துறையினர் விஜய், தயாரிப்பாளர் தாணு, சிம்பு தேவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் வீடுகளில் நடத்தி வரும் ரெய்டுகளால், தள்ளிப் போனது.

ரூ.100 கோடி செலவில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள படம் புலி.

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் நேற்று காலை 7 மணி அளவில் 4 கார்களில் வந்து இறங்கினர். அவர்கள் விஜய் வீட்டின் உள்ளே சென்றதும் வெளிப்புற ‘கேட்’ உடனடியாக பூட்டப்பட்டது. வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நேற்று முழுவதும் அதிகாரிகள் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்டார்கள்.

அதிகாரிகளுக்கு மதிய உணவு ஓட்டலில் இருந்து வந்தது. தகவல் அறிந்து வந்த விஜய்யின் ஆடிட்டர்கள் 3 பேர், அதிகாரிகள் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் திரும்பிச் சென்றனர். நேற்று நடிகர் விஜய்யும், அவருடைய மனைவி சங்கீதாவும் வீட்டில் இருந்ததால் அதிகாரிகள் அவர்களிடமும் விசாரணை நடத்தினர் என்று கூறப்படுகிறது.

இது தவிர ‘புலி’ படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் வீடு மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகம், ‘புலி’ படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான சிபு தமீன் வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சாதாரண நபராக இருந்து வரும் பி.டி.செல்வக்குமார் எப்படி 150 கோடி வரை முதலீடு ஈட்டினார் என்பது சந்தேகத்தின் காரணம்.

கோடம்பாக்கத்தில் உள்ள ‘புலி’ படத்தின் டைரக்டர் சிம்பு தேவன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்திருக்கிறது. மேலும் தியாகராயநகரில் உள்ள சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்செழியன், எம்.ஆர்.சி. நகரில் உள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மதுரை கீரைத்துறையில் உள்ள இப்படத்தின் பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும், தெற்குமாசி வீதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

இதே போல பல்லாவரத்தில் உள்ள சமந்தா வீட்டில்வருமான வரி அதிகாரிகள் 5 பேர் அடங்கிய குழு சோதனை நடத்தியது. சமந்தா வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கிறார். வீட்டில் அவரது பெற்றோர் மட்டுமே இருந்தனர். இதே போல ஐதராபாத்தில் உள்ள சமந்தாவின் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

இதே போல கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள நடிகை நயன்தாரா வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் வீட்டின் வெளிக்கதவை பூட்டிவிட்டு சோதனை நடத்தினார்கள். அப்போது நயன்தாராவும் வீட்டில் இல்லை. திருவள்ளா என்ற இடத்தில் உள்ள நயன்தாராவின் பூர்வீக வீட்டிலும், சென்னை பெசன்ட் நகரில் நயன்தாரா வாங்கியிருக்கும் புது வீட்டிலும் சோதனை நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த சோதனையில் 150 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 5 பேர் அடங்கிய தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று இந்த வேட்டையில் ஈடுபட்டனர். மொத்தம் 32 இடங்களில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

வருமானவரி கட்டுவதற்கு நடுத்தர, மேல் நடுத்தர மக்களை பயமுறுத்துவதற்கு வருமானவரித்துறைக்கு ஒரு நல்ல அடையாளம் சினிமா பிரபலங்கள். பல்லாயிரம் கோடிகளை ஏய்த்துவிட்டு கூலாக முதலமைச்சர் மற்றும் பிரதமரிடம் கைகுலுக்கிச் செல்லும் பெரும் நிறுவனங்களை விட்டு விட்டு, சில பல கோடிகள் ஏமாற்றும் தனி நபர்களான பிரபலங்களைக் குறிவைத்து வருமான வரி சோதனை செய்வது சும்மா கண்துடைப்பே.

என்றைக்காவது அம்பானி வீட்டில், டாடா பிர்லா, அதானி, வீடுகளில் கம்பெனிகளில் சோதனை. இத்தனை ஆயிரம் கோடிகள் பிடிபட்டது என்று வருமான வரித்துறை சொல்லுமா? சொல்லாது. வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை பணக்கார வீட்டு காவல் நாய்கள் போன்றவை. அவை சாதாரண மனிதர்கள் மேலும் சாதாரண மனிதர்களின் கனவு நாயகர்களான, குறும் பணக்காரர்கள் சினிமா பிரபலங்கள் மீதும் மட்டுமே பாயும்.