மக்களை ஏமாற்றிய மோடியை தண்டியுங்கள் ! – ராம்ஜெத் மலானி.

பிரபல வழக்கறிஞரும், பி.ஜே.பியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான ராம்ஜெத் மலானி வரவிருக்கும் பீஹார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பா.ஜ.கவில் கட்சியின் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்ததால் ராம்ஜெத்மலானி 2013ல் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டார். அன்று முதல் பாஜகவின் தவறான கொள்கைகள் பலவற்றையும் எதிர்த்துப் பேசி வருகிறார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மோடி மக்களை ஏமாற்றிவிட்டார். அதற்காக அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும். வரும் தேர்தலில் தோல்வியடைய வேண்டும். எனக்கு பிஹார் சட்டப்பேரவையில் வாக்கு அளிக்கும் அதிகாரம் இருந்தால் நான் நிதிஷ் குமாருக்கு வாக்களிப்பேன். அதற்கு காரணம் மோடியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதே.

பாஜக-வின் தோல்விக்கு பிஹார் தேர்தலே முதல் அடியாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த ராம் ஜெத்மலானியை முட்டாளாக்கிவிட்டனர். அவர்களை பிஹார் மக்கள் முட்டாளாக்க வேண்டும்.
நரேந்திர மோடியை விளம்பரப்படுத்திய பாவத்துக்கு பரிகாரம் செய்யவே நான் இதனை கூறுகிறேன். ஜெர்மன் அரசு சட்டவிரோதமாக கருப்புப் பணத்தை தனது நாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கும் 1400 இந்தியர்களின் பெயர்களை இந்தியா எழுத்து மூலமாக கேட்டுக் கொண்டால் தரத்தயார் என்று கூறியது. அதை முன்னிறுத்தி நான் பி.ஜே.பி தலைவர்களுக்கு வேண்டி ஒரு கடிதம் எழுதி அக்கடிதத்தை ஆதரித்து கையெழுத்திடும்படி கேட்டேன். ஆனால் ஒரு பி.ஜே.பி தலைவர் கூட கையெழுத்திட முன்வரவில்லை. இந்தியர்களின் கருப்புப்பணம் 90 லட்சம் கோடிகள் இவ்வாறு வெளிநாடுகளில் இருக்கின்றன. ஆனால் அதை மோடி அரசு கொண்டு வர முயற்சிக்கவே இல்லை ” என்றார்.

ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியத்தை வழங்க கோரி நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் வீரர்களுக்கு ஆதரவாக பங்கேற்ற அவர் இதனை கூறினார்.