உத்திரப் பிரதேசத்தில் நகாரியா கிராமம், கார்ஹால் எனும் பகுதியில் பசுவதை செய்யப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் வேண்டுமென்றே வதந்தி பரப்பினர். புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுவை ஒரு குடும்பத்தினர் வதை செய்ததாகவும். அதன் தோலை உரித்து எடுத்தாகவும் வதந்தி பரவியது.

இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட பலர் போலீஸ் வாகனங்களுக்கு தீவைத்ததோடு, கடைகளையும் தீக்கிரையாக்கினர். பின்னர் நடத்தப்பட்ட பசுவின் பிரேதப் பரிசோதனையில் அப்பசு உடலில் ஏற்பட்ட நோய் காரணமாகத் தான் உயிரிழந்ததே தவிர யாரும் கொன்றதால் இல்லை என்பது தெரியவந்தது.

மாவட்ட நீதிபதி சந்திரபால் சிங் கூறும்போது, “பசுவதை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. ஆனால், அந்த பசு நோய் வாய்ப்பட்டு இறந்தது தெரியவந்தது. வழக்கம்போல், இறந்த விலங்குகளில் தோலை பிரித்தெடுக்கும் வேலை செய்பவர்கள் தோலை பிரித்தெடுத்தனர். ஆனால், அவர்களே அந்த பசுவை வதைத்தாக வதந்தி பரவியது. அந்த வீட்டை முற்றுகையிட்டு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவரமறிந்த போலீஸார் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் அங்கு வன்முறை வெடித்தது. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மாட்டின் உடலில் இருந்து தோலை பிரித்தெடுத்த 21 பேரை கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 250 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்ததில் 7 போலீஸார் காயமடைந்தனர்”; இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Images: