பருப்பு விலை ரகசியம்..

தமிழகத்தில் பருப்பு விலை இதுவரை இல்லாத அளவுக்கு கிலோ ரூ. 200-ஐ எட்டியுள்ளது. இதேபோல், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகள், மிளகாய், பூண்டு போன்ற பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.

வடமாநிலங்களில் போதிய விளைச்சல் இல்லை என்ற காரணத்தைக் காட்டி அரசு 5 ஆயிரம் டன் பருப்பை இறக்குமதி செய்தது. ஆனால் சில நாள்களிலேயே நாடு முழுவதிலும் இருந்து சுமார் 36 ஆயிரம் டன் பதுக்கல் பருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பருப்புக்களை யார் பதுக்குகிறார்கள் ? எல்லாம் தனியார் விற்பனையாளர்களே. இதனால் தினமும் வீட்டில் ஒரு சாம்பார் கூட வைத்து சாப்பிடமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். இதன் முதல் காரணம், அரசு பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, விற்பனையை தனியாரின் கையில் முழுக்க விட்டுவிட்டது தான். அதனால் தனியார் நினைத்தால் பொருட்களைப் பதுக்கி விட்டு தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை சர்ரென்று ஏற்றிவிட முடியும்.

இதே போன்று தனியார்கள் நடத்தும் ஆன்லைன் வியாபாரமும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர காரணமாக உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்வதுடன், பதுக்கல்காரர்களிடம் இருக்கும் பருப்பு உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

இப்போதும் அரசு நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பருப்பு இறக்குமதி செய்யவில்லையாம். தனியார் இறக்குமதியாளர்கள் மூலமாகவே இறக்குமதி செய்கிறது. அவர்கள் அரசுக்கு பருப்பு கிலோ 135 ரூபாய்க்கு விற்பதாக உறுதியளித்துள்ளார்களாம். அதாவது செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாட்டில், அரசு நேரடியாக பருப்பை இறக்குமதி செய்து மக்களுக்குத் தராமல், மக்கள் வரிப்பணத்தை தனியார்களுக்கு கொடுத்து, அவர்களிடம் பருப்பை வாங்குமாம். அரசு நேரடியாக இறக்குமதி செய்து ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்தால் நடுவில் வேறு யார் யாருக்கோ கமிஷன் போகாது அல்லவா? இதுதான் பருப்பு விலை ரகசியம்.

உலகச் சந்தையில் தற்போது பருப்பு விலை, கிலோ 45 முதல் 50 ரூபாய்க்குத் தான் விற்கப்படுகிறது. இதை அரசு நேரடியாக இறக்குமதி செய்யாமல் தனியாரை இறக்குமதி செய்யச் செய்து, தனியாரிடமிருந்து கிலோ 135 ரூபாய்க்கு ஏன் வாங்கவேண்டும் ?

ஏறியிருக்கும் பருப்பு விலை ஒரு ஆரம்பமே. அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் வினியோகத்தை, தனியார்களின் கையில் கொடுத்ததற்கு, மக்கள் இனிமேல் தான் துன்பப்படப் போகிறார்கள்.