கேரள அமைச்சரவையில் டெல்லி கேரளா பவனில் மாட்டிறைச்சி சோதனை நடத்திய விவகாரம் இன்று விவாதத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி,
“டெல்லி போலீஸ் கடமையை மட்டுமே செய்தது என்றும், சட்டத்திற்கிணங்கவே சோதனை மேற்கொண்டது என்ற டெல்லி போலீஸாரின் வாதத்தை மத்திய அரசும் கடைபிடித்தால், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். மாநிலம் நடத்தும் அதிகாரபூர்வ விருந்தினர் இல்லத்தில் மாநில அதிகாரிகள் அனுமதியின்றி சோதனை மேற்கொள்வது எல்லை மீறியதாக உள்ளதோடு, சட்டத்தையும் மீறியுள்ளது. இதனால் மாநில – மத்திய உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

சோதனை குறித்த டெல்லி போலீஸாரின் விளக்கம் ஒருபோதும் மாநில அரசால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது குறித்து பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்குக்கும் கடிதம் எழுதியுள்ளோம், பதிலுக்காகக் காத்திருக்கிறோம். இந்நிலையில் டெல்லி போலீஸ் அளித்த விளக்கத்தை மத்திய அரசும் மீண்டும் ஒரு முறை தெரிவித்தால், கேரள மாநிலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும். புகார் அளித்தவரின் நம்பகத்தன்மையைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றால், இது எந்தத் தரப்பையோ திருப்தி செய்ய நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. தவறை ஒப்புக் கொண்டால் கேரள அரசு அமைதியடையும்” என்றார் முதல்வர் உம்மன் சாண்டி.
மாநில அரசின் விவகாரங்களில் தலையிட்டு வம்பிழுக்கும் மத்திய அரசையே ‘சட்டம் பாயும்’ என்று எச்சரித்திருக்கிறார் சாண்டி. இவ்விஷயத்தில் கேரளாவின் அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக உம்மன் சாண்டியுடன் நிற்கின்றனர்.
இதேபோன்றதொரு விஷயத்தை தமிழகத்தில் பொருத்தினால் அம்மா நிஜத்தில் அவ்வளவு தைரியசாலி அல்ல. சும்மா தைரியசாலி போல காட்டிக் கொள்கிறார் என்பது நன்கு தெரியவரும். தமிழகத்தில் மீனவர்களை இலங்கைக் கடற்படை கொல்வது குறைந்து தற்போது கடத்துவது, அடிப்பது, சிறைப் பிடிப்பது என்று தொடர்ந்து தொல்லைகள் செய்து வருகிறார்கள். முன்பு அத்து மீறி கைதான 86 தமிழ் மீனவர்களை, நேற்று விடுதலை செய்த இலங்கை அரசு, அதே சூட்டில் நேற்று வேறு 34 பேரை கைது செய்திருக்கிறது.

தொடர்ந்து வரும் இலங்கையின் இந்த அராஜகப் போக்கிற்கு நேற்று அம்மா ஏதாவது பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்த்தால். இலங்கைக் கடற்படையின் செயலுக்கு ‘அதிர்ச்சி’ மட்டுமே தெரிவித்த ஜெயலலிதா, மீண்டும் வழக்கம் போல மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். வற்புறுத்தியிருக்கிறார். கடந்த 4 வருடங்களாகவே இதை மட்டுமே செய்து வருகிறார் ஜெயலலிதா. அதற்கு முன்பு கருணாநிதி லட்டர் போட்டார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று சட்டசபையில் புரட்சிகர தீர்மானமே போட்டார் ஜெயலலிதா. ஆனால் மத்திய அரசோ இலங்கையுடன் கூட்டு சேர்ந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுகிறது. இலங்கை ராணுவத்துக்கு இந்தியா இலவசமாக ஒரு போர்க்கப்பல் தந்திருக்கிறது. அதற்கு அம்மா பக்கம் ஒரு ரியாக்ஷனும் இல்லை. மாறாக மோடியைக் கூப்பிட்டு தேனீர் விருந்து தருகிறார்.

தமிழ்நாட்டில் அம்மா வீராங்கனையாக இருந்தாலும், மாநிலத்துக்கு வெளியே அம்மா டம்மி பீஸ்தான் போலும். அம்மாவுக்கு வடக்கே இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் அவருக்கு இருக்கும் எம்.பி. சீட்டுக்களின் எண்ணிக்கையால் மட்டுமேயன்றி அவரது துணிவான கருத்துக்களால் அல்ல.

Related Images: