“சாகித்ய அகாதமி விருது எனக்கும் வேண்டாம்” – எழுத்தாளர் சாரா ஜோசப்!

எழுத்தாளர் நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் ஆகியோர் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மதச்சகிப்பற்ற தன்மையையும், உணவை வைத்து மக்களை விரோதிகளாக்கும் இந்துத்துவா போக்கையும், எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் இந்துத்துவாவாதிகளால் கொல்லப்படுவதையும், அதற்கு துணைநிற்கும் மோடி அரசையும் கண்டித்து தங்கள் சாகித்ய அகாதமி விருதுகளை அரசிடம் திருப்பி அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இது குறித்து திருச்சூரில் இன்று பேசிய அவர், “அலாயுதே பெண்மக்கள் ( Alaahayude Penmakkal) என்ற எனது நாவலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதையும் அதனுடன் வழங்கப்பட்ட ரூ.50,000 பரிசுத் தொகையையும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளேன்.

நாட்டில் சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விரும்பிய உணவை மக்கள் உண்பதற்கும், நேசிக்கும் நபரை ஒருவர் திருமணம் செய்யவும் இங்கு சுதந்திரம் இல்லை. எனவே, பெருகி வரும் சகிப்புத்தன்மையின்மையை கண்டித்து சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதாக முடிவு செய்துள்ளேன்” என்றார்.

இதேபோல், மலையாள கவிஞர் கே.சச்சிதானந்தன் சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாகித்ய அகாடமி, எழுத்தாளர்கள் கொள்கைகளுக்கு துணை நிற்கவும்; அரசியல் சாசனம் வழங்கிய கருத்துச் சுதந்திரத்தை பேணவும் தவறிவிட்டது என்பதால் பதவியை துறப்பதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலையை கண்டித்து சாகித்ய அகாடமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சச்சிதானந்தன் வலியுறுத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாகித்ய அகாடமிக்கு அவர் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், “நாடு முழுவதும் சுதந்திரமான சிந்தனையாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுவரும் நிலையில், சம்பிராதாயத்துக்காக மட்டும் இரங்கல் கூட்டங்களை சாகித்ய அகாடமி ஒருங்கிணைப்பது போதுமானது அல்ல. எனவே, சாகித்ய அகாடமியின் அனைத்து உறுப்புகளின் உறுப்பினர் பதவியையும் துறக்கிறேன்.

இது ஒரு அரசியல் சார் நிகழ்வு என்று மட்டுமே நீங்கள் நினைத்தீர்கள் என்றால். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற எழுத்தாளர்களர்களுக்கு சமீபத்தைய நிகழ்வுகள் சுதந்திரமாக சிந்தித்து, எழுதி, வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே தோன்றுகிறது. விவாதங்களை ஒடுக்க அதன் ஆதாரங்களை நிர்மூலமாக்குவது ஜனநாயக நெறியாகாது.

இதுவரை சாகித்ய அகாடமி எனக்கு அளித்த கொடைகள் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, மனசாட்சியுடைய எழுத்தாளனாக என்னால் சாகித்ய அகாடமி பொறுப்புகளில் தொடர முடியாது. எனவே உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் என்னை விலக்கிக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு சாகித்ய விருது பெற்று மலையாள எழுத்தாளர் சுபாஷ் சந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இன்னும் ஓரிரு நாட்களில் சாகித்ய அகாடமி நல்லதொரு முடிவு எடுக்காவிட்டால் நான் பெற்ற சாகித்ய விருதை திருப்பி அளிக்கலாமா என முடிவு செய்துள்ளேன்” என்றார்.

எழுத்தாளர் சசி பாண்டே , சிறுகதை எழுத்தாளர் பி.கே.பாரக்கடவு, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.. நாட்டில் பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்குக்கு சாகித்ய அகாடமி எதிர்வினையாற்றாமல் மவுனமாயிருப்பதைக் கண்டித்து இவர்கள் எல்லோரும் பதவி விலகியுள்ளனர்.

ஆனால் இதற்கு சாகித்ய அகாடமி எதுவும் கூறவேயில்லை. சாகித்ய அகாடமியை எதிர்ப்பதை விட மோடியையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் எதிர்த்து, அதன் பசுவதை என்கிற போர்வையில் மதவெறியை ஊக்குவிப்பதையும் கண்டித்து இவர்கள் எல்லோரும் ஒன்று நிற்கவேண்டும். மீடியாக்களிலும், பத்திரிக்கைகளிலும் இந்தப் போக்கை கண்டித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்யவேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் பெரிய அரசின் பயங்கரவாதக் கைகளையும் தாண்டிப் பேசும்போது தான் மக்கள் கண்மூடித்தனமான வெறித்தனத்திலிருந்து நின்று திரும்பிப் பார்ப்பார்கள்.