பல்லைப் பிடுங்கின புலியுடன் மல்லுக்கட்டும் ஸ்ரீதேவி!

புலி படம் பாயாததால் அதன் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் நகம் கடிக்க, ஸ்ரீதேவியும் தன் பங்குக்கு கஷ்டம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

புலி படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கி 50 லட்சத்தை பெற்றுத் தர வேண்டும் என்று மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அந்த புகாரை அனுப்பி வைத்துள்ளனர்.

“புலி படக்குழு என்னை ராணியாக பார்த்துக் கொண்டது” என்று ஸ்ரீதேவியும், “ஸ்ரீதேவி புலி படத்துக்கு பலமாக இருந்தார், சிறப்பான முறையில் ஒத்துழைப்பு தந்தார்” என புலி படக்குழுவும் பரஸ்பரம் பாராட்டியிருந்த நிலையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் நடந்தது என்ன? புலி படத்துக்காக ஸ்ரீதேவியை அணுகிய போது அவர் சம்பளமாக பெரும் தொகை கேட்டுள்ளார். பிறகு அவரிடம் பேசி, 2.7 கோடிகள் சம்பளம் என்று நிர்ணயித்தார்கள். அது போதாது, சர்வீஸ் டாக்ஸ் 30 லட்சத்தையும் நீங்கள்தான் கட்ட வேண்டும் என்று ஸ்ரீதேவி கூற, அதற்கும் சம்மதித்தனர். ஆக மொத்தம் புலியில் ஸ்ரீதேவியின் சம்பளம் மட்டும் 3 கோடிகள்.

புலி சரித்திரம் சார்ந்த கதை என்பதால் ஒன்றுக்கு மூன்று காஸ்ட்யூம் டிஸைனர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஸ்ரீதேவி அவர்கள் மூவரையும் நிராகரித்து, மும்பையிலிருந்து மனிஷ் மல்ஹோத்ரா வந்தால்தான் ஆயிற்று என்று அடம்பிடிக்க, பெரும் சம்பளம் தந்து ஸ்ரீதேவிக்காக மனிஷ் மல்ஹோத்ராவை ஒப்பந்தம் செய்தனர். அவருக்கான சம்பளம் மற்றும் செலவுகள் மட்டும் 50 லட்சங்கள்.

புலியை தெலுங்கு, இந்தியில் வெளியிடப் போவதை அறிந்ததும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மேலும் பல கோடிகள் கேட்டிருக்கிறார். டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். அதில் நடிகர்கள் பங்கு கேட்க முடியாது என்று தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை போனி கபூர் ஏற்கவில்லை. பணம் தராவிட்டால் ஸ்ரீதேவி நடிக்க வரமாட்டார் என கூற, படப்பிடிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக அதற்கும் ஒப்புக் கொண்டனர். அதன்படி தெலுங்கு டப்பிங்கின் போது 15 லட்சம் ஸ்ரீதேவிக்கு தரப்பட்டது. இந்திப் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் 20 சதவீதத்தையும் போனி கபூர் வாங்கியுள்ளார். அது மட்டும் 55 லட்சங்கள்.

2.7 கோடிகள் சம்பளம் பேசப்பட்ட ஸ்ரீதேவி வரியாக முப்பது லட்சம், தெலுங்கு டப்பிங்கிற்கு பதினைந்து லட்சம், இந்தி டப்பிங்குக்காக 55 லட்சங்கள் என்று கிடைத்தவரை சுருட்டினார். ஸ்ரீதேவிக்கு இந்தியில் மார்க்கெட் உள்ளது, இந்தியில் புலியை வெளியிட்டால் கோடிகள் அள்ளலாம் என்று போனி கபூர் சொன்னதையடுத்து, புலியை இந்தியில் வெளியிட்டனர். அதற்காக நியமித்த புரொடக்ஷன் டிஸைனருக்கான சம்பளம் எட்டு லட்சங்கள். இந்தியில் படத்தை வெளியிட ஒரு கோடி ரூபாய். இவ்வளவு செலவுகளுக்குப் பின் இந்தியில் திரும்பக் கிடைத்தது வெறும் பூஜ்யம்.