மேலோட்டமாகப் பார்த்தால் அமெரிக்கச் சந்தையும், பிற நாட்டுச் சந்தைகளைப் போல வெளியாட்களுக்கு திறந்து விடப்பட்ட சந்தை போலத் தான் தோன்றும். ஆனால் அவற்றுக்குள் நுழையும் யாரும் அங்கே ஆதிக்கம் செலுத்திவிட முடியாது. அதில் அமெரிக்கா சரியாக இருக்கும். குறிப்பாக விவசாயத்துக்குப் போட்டி என்றால் ‘ தடைகள்’ பலவற்றை வரும் நாட்டிற்கு உருவாக்கிவிடும் அமெரிக்கா.

உலகிலேயே அதிக அளவுக்கு மானியச் சலுகையை அனுபவிப்பது அமெரிக்க விவசாயிகள்தான். அமெரிக்க உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு மற்றொரு திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ‘அமெரிக்க உணவுப் பாதுகாப்பு நவீனப்படுத்தல் சட்டம்’ என்று பெயர். கடந்த 70 ஆண்டுகளில் கொண்டுவரப்படாத சீர்திருத்த மசோதா என்று பாராட்டப்பட்ட இது 2011-ல் சட்டமானது.

அமெரிக்காவுக்கு அதிக அளவில் வேளாண்பொருட்களை ஏற்றுமதி செய்கிறவர்கள் ‘அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத் துறையின் ஆய்வுகளுக்கும் தணிக்கைக்கும் தங்களுடைய பொருட்களை 2017 முதல் உட்படுத்த வேண்டும் என்கிறது புதிய சட்டம். இதை நடுத்தர, சிறு ஏற்றுமதியாளர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கடைபிடித்து, சோதனைகளுக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் ஏற்றுமதியாளர்களுக்குச் செலவு அதிகரிக்கும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகும். அதனால் அமெரிக்காவில் சந்தையை இந்தியா போன்ற நாடுகள் இழக்க நேரும். இது போல சீனா போன்ற பல நாடுகளும் அமெரிக்கா சந்தையில் நிலைத்து நிற்க முடியாத நிலை ஏற்படும்.

இதிலிருந்து இந்தியப் பொருட்களுக்கு விலக்கு தர வேண்டும் அல்லது இந்திய உணவு பாதுகாப்பு, தரப்படுத்தல் முகமையின் சான்றையோ அல்லது ஏற்றுமதி ஆய்வு ஒன்றியத்தின் சான்றையோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது இந்தியா. ஆனால் இதை அமெரிக்கா கண்டுகொள்ளவே இல்லை.

அமெரிக்க விதிகள் நோய்த் தடுப்பு வழிமுறைகளையும், தூய்மை தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் சாகுபடிக்குப் பிறகும் வேளாண் பொருட்கள் மீதான செலவுகள் கூடிக்கொண்டே போகும். இறுதியில், இந்திய வேளாண் விளைபொருட்கள் அதிக விலையுள்ளதாக நிராகரிக்கப்படும்.

வலிமையான நாடு எதுவோ அதுதான் வர்த்தக நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் பெற்றதாக இப்போதைய உலக வர்த்தக நடைமுறைகள் இருக்கின்றன. இந்தியச் சந்தையையும் உலக நாடுகள் வெவ்வேறு காரணங்களுக்காக அணுகுகின்றன.

ஊருக்குத் தாண்டா உபதேசம். உனக்கில்லைன்னு சொன்னானாம் ஒருவன். அது அமெரிக்கா தான். தடையற்ற வர்த்தகம் என்கிற கோஷத்தை முழங்கிய அமெரிக்கா இப்படி தன்னை பாதுகாத்துக் கொள்ள மட்டும் இப்படிப் பல்டியடிக்கிறது. அமெரிக்க விவசாயிகளுக்கு மானியம் கூடுகிறது. இங்கோ கரண்ட் கட், உரமானியம் கட், விதைக்கொட்டைகள்.. ஸாரி விதைகள் கட் என்று வரிசையாகக் கட் செய்தால் அப்புறம் பருப்பு விலை ஏன் இந்தியாவில் மட்டும் ஏறாது ?

Related Images: