விமர்சனம் `இஞ்சி இடுப்பழகி` நல்லா ராவுறாரு பிரகாஷ் ராவுகாரு…

அட்டகாசமாய் நடிக்க,ஹீரோவின் உதடுகளைக் கடிக்க, எவ்வளவு வேண்டுமானாலும் அவிழ்க்க இப்படி சகல சங்கதிகளுக்கும் சரிப்பட்டு வருகிற அனுஷ்கா, லூட்டி அடிக்கிற ஆர்யா, வில்லன் கேரக்டரில் என்ன மாதிரி எவனும் வெரைட்டி காட்டமுடியாது என்று கர்ஜிக்கிற பிரகாஷ்ராஜ், சிம்ரனின் சித்தி மகள் போல் சிக்கென  காட்சி அளிக்கும் சோனல் சவுகான், `ஒன்டேக்` ஊர்வசி இப்படிப்பட்ட ஸ்டார் காஸ்டிங்கை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்திருக்கமுடியும்? ஆனால் பத்துப்பைசா பெறாத ஒரு டுபாக்கூர் கதையை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் `இஞ்சி இடுப்பழகி` என்ற பெயரில்.

அனுஷ்கா குண்டாக இருப்பதால் அவரை எந்த மாப்பிள்ளைக்கும் பிடிக்கவில்லை. இந்த லிஸ்டுகலின் நீட்சியாக வரும் ஆர்யா இவரை விரும்பினாலும் வெளியே சொல்வதில்லை. இவருக்கும் நாம் குண்டாக இருப்பதால் தான் பிடிக்கவில்லை போலும் என்று முடிவு செய்து,பிரகாஷ்ராஜ் நடத்தி வரும் `சைஸ் ஜீரோ` நிறுவனத்தில் உடல்மெலிய ட்ரீட்மெண்ட் எடுக்கிறார்.maxresdefault (1)

அந்த சமயத்தில் அதே சைஸ் ஜீரோவில் ட்ரீட்மெண்ட் எடுத்த அனுஷ்காவின் தோழி உடல்நலம் பாதிக்கப்பட, அதற்குக் காரணம் இப்படி குறுக்கு வழியில் மெலிய உதவும் பிரகாஷ்ராஜ் நடத்தும் நிறுவனம்தான் என்று கண்டுபிடித்து அவருக்கு எதிராக போராடுகிறேன் பேர்வழி என்று ஸெகண்ட் ஆஃப் முழுக்க சைக்கிள் ஓட்டியே சாகடிக்கிறார்கள்.

படத்தின் வரம் சாபம் ரெண்டுமே அக்கா அனுஷ்காதான். குழந்தைத்தனமான அந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர் பண்ணும் சேட்டைகளும், ஒரு பாடல் காட்சியில் காட்டும் எக்கச்சக்க கிளாமரும்… நீங்க அனுஷ்கா ரசிகரென்றால் அந்த ஒரு பாட்டுக்கே துட்டு செத்துச்சி.

இன்னொருபக்கம் குண்டாகக் காட்டவேண்டும் என்பதற்காக அடிக்கடி அனுஷ்காவின் பஞ்சு வச்ச பிருஷ்டங்களைக் காட்டி வகைதொகையில்லாமல் வதைக்கிறார்கள்.

ஆர்யாவுக்கு இரண்டு காதலிகள்.எண்ணமுடியாத அளவுக்கு மச்சங்கள். சென்சாரில் தப்பிய முத்தக்காட்சிகளே ஏழெட்டு எனும்போது…ம் என்னத்தைச்சொல்ல…ஆனால் அனுஷ்காவுடன் நல்ல ரிலேசன்ஷிப்பில் இருக்கும்போதே சோனல் சவுகானின் உதட்டை ஆர்யா கவ்வுவதற்கு போனால் போகிறதென்று குட்டியூண்டு லாஜிக் சொல்ல முயன்றிருக்கலாம் டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவு காரு.

ஆர்யாவும் அவரது கேர்ள் ஃப்ரண்டும் என்னதான் இந்தியாவின் டாய்லெட்டுகள் பற்றி டாகுமெண்டரி எடுப்பவர்கள் என்றாலும்,  டாய்லெட்டைப்பற்றி இவ்வளவு நீள அகலத்துக்கு கமலுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசியவராக டைரக்டர் ராவுகாரை பதிவு செய்கிறோம்.

மரகதமணியின் மணியான இசையில் குறை ஒன்றுமில்லை. ஆனால் ஒளிப்பதிவு என்று நிரவ் ஷா பெயரைப் பார்த்ததாக ஞாபகம்.

`நீ சேலையைக்கழட்டு, நீ சட்டையைக்கழட்டு` என்று க்ளைமாக்ஸில் ஆர்யாவையும் அனுஷ்காவையும் மாடியிலிருந்து இறங்கி தப்பி ஓட ஊர்வசி ஐடியா கொடுக்க, `நீ எப்படிம்மா மாப்பிள்ளையை சமாளிப்ப? என்று  பதிலுக்கு அனுஷ்கா கேட்கும்போது, `அதுவா அதை நான் பாத்துக்கிறேன். ஏன்னா நான் ஒரு உத்தம வில்லி` என்று ஊர்வசி ஒரு பார்வை பார்ப்பாரே அந்த ஒரு இடம் தவிர மொத்தப்படமும் தண்டம்.

அனுஷ்கா ரசிகர்கள் தவிர மற்றவர்கள் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுக.