‘சுதந்திரமின்றி அமைதி இல்லை, அமைதியின்றி சுதந்திரமில்லை’

இயக்குனர் ஜனநாதன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் தலைப்பில்லை இது. நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றிய ஒருதலைப்புதான் இது.

ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த தின நிகழ்ச்சிகளை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற ‘சுதந்திரமின்றி அமைதி இல்லை, அமைதியின்றி சுதந்திரமில்லை’ என்ற தலைப்பிலான மாநாட்டில் தொடக்க உரையாற்றினார் மன்மோகன் சிங். அதில் சமீபத்தில் நாட்டில் நிலவி வரும் மதச் சகிப்புத்தன்மை பற்றிய அக்கறை தொனிக்க அவர் பேசிய பேச்சுக்களிலிருந்து முக்கிய அம்சங்கள் கீழே.

* மக்கள் அவர்கள் சாப்பிடும் உணவுக்காகவோ, அல்லது சாதியை முன்வைத்தோ தாக்குதல் தொடுப்பது, சிந்தனையாளர்களைக் கொலை செய்வது முதலானவற்றை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத செயல்களாகும்.

* மதம் என்பது தனிநபர் சார்ந்தது. அதில் தலையிட எந்த ஓர் அரசுக்கும் உரிமை இல்லை. மதச்சார்பற்ற குடியரசு நாட்டில், மக்கள் நலனுக்கான பொது கொள்கைளை வகுக்கும்போது அவற்றில் மதச் சாயத்துக்கு இடமளிக்கக்கூடாது. அதேபோல், எந்த ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையையும் மற்ற மதத்தவர் மீது திணிக்கக் கூடாது.

* மறுப்பதற்கான, எதிர்ப்புக்கான உரிமைகள் அடக்கி ஆளப்படுவதும் நியாயமாகாது. ஒற்றுமை, வேற்றுமையை மதிப்பது, மதச்சார்பின்மை மற்றும் பன்முகத் தன்மை ஆகிய மதிப்பீடுகள் ஒரு குடியரசு இயங்க மிக மிக முக்கியமானதும் ஆதாரமானதுமாகும்.

* அமைதியும் சமாதானமும் மானுட இருப்புக்கு மட்டுமல்லாது பொருளாதார, அறிவார்த்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் இன்றியமையாததுமாகும்.

* நாட்டில் உள்ள சச்சரவுகளால் முதலீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. சுதந்திரமில்லாமல் சுதந்திரச் சந்தை இல்லை. எதிர்ப்பு, பேச்சுரிமை மீது அடக்குமுறை செலுத்துவது, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அபாயமாகும்.

இதெல்லாம் அப்படியே பழைய பிரதமர் புதுப் பிரதமருக்கு அறிவுரை சொல்கிற மாதிரியே இருக்குதே !