ஆமா… அட்டின்னா என்னதான்ப்பா அர்த்தம்?

விஜய் டி.வி.யில் காலடி எடுத்துவைத்தாலே சினிமா அதிர்ஷ்டம் சுலபத்தில் கதவைத்தட்டிவிடும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக மா.க.பா. வளர்ந்து வருகிறார். `வானவராயன் வல்லவராயன்` ரிலீஸுக்கு அப்புறம் எங்கேடா ஆளையே காணோம் என்று பார்த்தால் கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கிறார். அதில் அடுத்த ரிலீஸ்தான் `அட்டி`.

அதென்னய்யா அட்டி? இப்படியொரு கேள்வியை கேட்காதவர்கள் இருக்க முடியாது. எல்லாருக்கும் ஒரே நேரத்தில் பதிலை சொல்லிவிட்டால், கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாமே? ஒரு ஐடியா செய்தார்  அறிமுக இயக்குநர் விஜயபாஸ்கர். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே, அட்டி என்றால் என்ன? என்பதற்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுத்துவிடுவதுதான் அது. அதையும் பொருத்தமான ஒருவரை விட்டு சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்தவரின் மனசுக்குள் பச்சக்கென்று வந்து நின்றவர்தான் விஜய் சேதுபதி.

அவரு சொன்னால்தான் பொறுத்தமா இருக்கும்னு தோணுச்சு. இந்த படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட முன்வந்த இசையமைப்பாளர் சுந்தர்சி பாபுவிடம் சொன்னேன். அவர் விஜய் சேதுபதியிடம் பேசியதுதான் தாமதம். அதுக்கென்ன? சொல்லிட்டா போச்சு என்று பெரிய மனசு பண்ணினார். உடனே டப்பிங் தியேட்டருக்கு பேசிக் கொடுத்துவிட்டு போனார். அவருக்கு என் நன்றி என்றார் விஜயபாஸ்கர்.

டான்ஸ், பைட் என்று பக்கா லோக்கலாகவும், பக்கா கலக்கலாகவும் திரையில் தோன்றுகிறார் மா.கா.பா.ஆனந்த். வரவர ஹீரோக்களை உற்பத்தி செய்யும் இடமாகிவிட்டது விஜய் டி.வி.

ஆமா… அட்டின்னா என்னதான்ப்பா அர்த்தம்? பசங்க கூடி அரட்டையடிக்கிற இடமாம்! அப்ப பஞ்சாயத்துக்களுக்கு பஞ்சமிருக்காதுன்னு சொல்லுங்க.