ரஜினி சொன்ன புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நடிகர்கள் பெரும் அளவிற்கு உயர்ந்து விட்ட பின்பு  ரசிகர்கள்,  பணம் எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமே.  அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்வை தலையீடு இல்லாமல் தொடரவே விரும்புவார்கள். ரஜினிகாந்த்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆனாலும் அவரை தங்களது எதிர்காலத் தலைவராக வரித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர் மீது இருக்கும் கண்மூடித்தனமான அன்பைத் தவிர அவர்களுக்கு அரசியல் பார்வைகள் ஏதும் இல்லை.

எனவே புத்தாண்டு தினம், பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு முன் ரசிகர்கள் திரண்டு வந்துவிடுகின்றனர். இந்த நாட்களில் பெரும்பாலும் ரஜினி தன் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துவார்.

ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினியைச் சந்திக்க அவர் வீட்டு முன் குவிந்தனர். அவர்களை ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர் ஒழுங்குபடுத்தி நிறுத்த, சில நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளியில் வந்தார் ரஜினி. அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்துக்களைக் கூற, ரஜினியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கைககளைக் கூப்பியபடி ரஜினி சில நிமிடங்கள் நின்றார். பின்னர் வீட்டுக்குள் சென்றார்.

ரசிகர்கள்  தங்களது இந்த ஆண்டு சூப்பராக மிளிரும் என்று நிம்மதியோடு கலைந்து சென்றனர்.