ஒரு பூனையைச் சுற்றி உருவாகும் ‘மியாவ் ‘

விதம் விதமான பாணியில்  அமையும்  வெவ்வேறு விதமான படங்களை , களம் காணும் பல இளம் இயக்குனர்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான்,   இன்றைய  தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய முக்கிய விஷயம் .
அந்த வகையில் வருகிறார் புதிய இயக்குனர் சின்னாஸ் பழனிச் சாமி.  விளம்பரப் படத் துறையில் பல சாதனைகள் படைத்தவர் இவர்
 இப்போது இவர் இயக்கி வரும் முதல் படமான மியாவ்., ஒரு பூனையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிற , முற்றிலும் வித்தியாசமான திரில்லர் ப்ளஸ் காமெடி படம்.
சமூக, கலை மற்றும் வியாபார உலகில் பிரபலமான நபரான திரு. வின்சென்ட் அடைக்கல ராஜ், தனது குளோபல் வுட்ஸ் மூவீஸ்  சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்..
ராஜா என்ற  நம்பிக்கையூட்டும் இளைஞர் நாயகனாக நடிக்கும் இந்தப்  படத்தில், காயத்ரி , ஷினி என்று இரண்டு அழகுக் குவியல்கள் நாயகிகளாக நடிக்கின்றனர் . படத்தின் இசை இளம் திறமையாளர் ஸ்ரீஜித்  என்டவனோ .
படம் பற்றிக் கூறும் இயக்குனர் சின்னாஸ் பழனிச் சாமி “பூனையின் மியாவ் சத்தத்தில் குழந்தையின் குரல் போன்ற மென்மையில் இருந்து கொடிய அலறல் போன்ற திகில் வரை பல்வேறு சூழலுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்கள் நிறைந்த பல வகைகள் உண்டு, அவற்றின் அடிப்படையில் என் படம் பயணிக்கிறது .
 ஒரு  பூனையை அடிப்படையாகக் கொண்டு வரும் முதல் தமிழ் சினிமா இதுதான் என்று,  எங்களால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும். இதுவரை  யாரும் எடுக்காத இந்த பாணிப் படம் , புதுமையான படங்களைப் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.
அதே நேரம் இது போன்ற படங்களுக்கு பொருத்தமான தயாரிப்பாளர் கிடைப்பதும் மிக முக்கியம் . அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி, எனது தயாரிபாளருக்கு  சினிமா  எடுப்பதன் அழகியலும் புரிந்து இருக்கிறது . படத்தை தயாரிப்பதிலும் மதிப்புக் கூட்டுவதிலும் இன்றைய நிலையில் ஒரு தயாரிப்பாளரின் பங்கு என்ன என்பதும் அவருக்கு  தெரிந்து இருக்கிறது .
நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று எல்லா விசயத்திலும்  நாங்கள் இளையவர்கள் . ஆனால் எங்கள் படத்தின் போஸ்டரை , நாங்கள் எல்லாம்  யாரைப் பார்த்து வளர்ந்தோமோ அந்த கலை மேதையான பி சி ஸ்ரீராம் சார் வெளியிட்டுக் கொடுத்தது , எங்களுக்குக் கிடைத்த பெரும் பெருமை ” என்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி , பெருமிதத்தோடு.