‘த்தா என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்’ -விசாரணை

‘த்த என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்’ – விசாரணை`பார்த்துமுடித்து வெளியில் வரும்போது இந்த வார்த்தைகள் தான் தோன்றியது. சத்தியமாய் இது மரியாதையின்மையில் வருவதல்ல. ஒரு கலைஞன் மேல் ஒரு ரசிகன் கொள்ளும் அதீத காதலில் வருவது.

தமிழின் முழுமையான ‘உலக சினிமா’ வெளியான நாள் இன்று. எந்தவித சமரசங்களும் இல்லாமல், நிஜத்திற்கு பக்கத்தில் சென்று, முழு நேர்மையுடன், சமூக அறத்துடன் எடுக்கப்பட்ட ஒரு படைப்பு ‘விசாரனை’. செயற்கை பூச்சுக்கள் இல்லாமல் நிஜத்தை பதிவு செய்யும் படங்கள் செலவில் சிறுத்து உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்றிருக்கின்றன. அதுதான் விசாரனைக்கும்.

வழக்கு எண் 18/9 தொட்ட ஒரு இடத்தை தான் விசாரனையும் படம் நெடுக பதிவுசெய்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் மனதை உலுக்கும் நிஜம் பொதிந்துள்ளது. படத்தின் ஆன்ம பலமே இந்த உண்மைதான். இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் – நடந்திருக்கிறது. காவல்துறையினரின் வீரதீர செயல்களை நாயக வழிபாட்டுடன் இணைந்தே தமிழ் சினிமா பெருமளவில் சொல்லியிருக்கிறது. காவல்துறையின் அத்தனை மனிதஉரிமை அத்துமீறல்களும், இந்த ஒட்டுமொத்த சிஸ்டத்தின் குள்ளநரித்தனமும், அதில் ஒரு சாமானியனின் இடமும் தான் விசாரணை. தினசரி செய்தித்தாளை பகுத்து படிப்பீர்களானால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு சம்பவத்தோடு உங்களால் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். அந்தளவிற்கு உண்மைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது விசாரணை.

உணர்வுகளை தொடுவது, மனிதம் பேசுவது, ரசனையை வளர்ப்பது, அரசியல் நேர்மை, திரைமொழியின் மேதைமை, யதார்த்தத்தின் நெருக்கம் என உலகசினிமாவுக்கு எந்த DEFINITION ஐ சொன்னாலும் அதில் பொருந்தும் ‘விசாரனை’. நாயகனின் காதல் காட்சிகள் (மிகமிக சிறியதே என்றாலும்) மட்டும்தான் ஏனென்று உறுத்திக்கொண்டே இருக்கிறது.

‘லாக்கப்’ நாவலின் தழுவல் என்று டைட்டில் கார்டிலேயே போட்டிருக்கிறார் வெற்றிமாறன் (படத்தின் முதல் பாதி மட்டும்தான் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது). மட்டுமல்லாமல் நாவலாசிரியரை திரைப்பட விழாக்களுக்கும் அழைத்துச் சென்று கௌரவித்திருக்கிறார். ஆடுகளம் படத்தின் இறுதியிலும் FILMOGRAPHY என்று தன்னை இன்ஸ்பயர் செய்த படங்களின் பட்டியலை போட்டிருப்பார். வெற்றிமாறனின் இந்த நேர்மைதான் படத்திலும் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். இதே நேரத்தில் கிட்டத்தட்ட ஒரிஜினல் படத்தின் மொத்த காட்சிகளும் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட `தூங்காவனம்` படத்தில், அது ஒரு ரீமேக் என்பது அரைநொடிக்கும் குறைவான நேரம்தான் வந்தது என்பதும் நினைவுக்கு வருகிறது.

பாலுமகேந்திரா இருந்திருந்தால் உச்சிமுகர்ந்து கொண்டாடியிருப்பார். அவர் இல்லை. அதை நாம் செய்யவேண்டும். சில படங்கள் அடையும் வெற்றி தயாரிப்பாளருக்கு மட்டும்தான் லாபம் தரும். ஆனால் இதுபோன்ற படங்களின் வெற்றி தமிழ்சினிமாவின் வளர்ச்சிக்கு லாபம் தரும். பார்க்காவிட்டால் நம் நஷ்டம். அவ்வளவுதான். இனி தமிழ்சினிமாவின் வரலாற்றை விசாரனையை தவிர்த்து எழுதிவிட முடியாது !!!

முகநூலில் Jeyachandra Hashmi