சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): தமிழர்களின் கனவு தேசமான சிலிக்கான் வேலியில் முதன் முறையாக அமெரிக்கத் தமிழர்களுக்கான குறும்படப் போட்டி நடைபெறுகிறது.

நடுவராக பங்கேற்க இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், பரத்பாலா மற்றும் நடிகர் நெப்போலியன் பங்கேற்கின்றனர்.

சான் ஃப்ரான்சிஸ்கோ – சான் ஓசே பகுதியில் செயல்பட்டு வரும் விரிகுடாக் கலைக்கூடம் சார்பில் பிப்ரவரி 6ம் தேதி சனிக்கிழமை மாவை 5 மணிக்கு, குப்பெர்டினோ டெ அன்சா   கல்லூரி (De Anza College) அரங்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினராக மாவீரன் நெப்போலியன்

இறுதிப் போட்டியில் இடம்பெறும் ஆறு படங்களிலிருந்து வெற்றியாளர்களை, கார்த்திக் சுப்பராஜ், வந்தே மாதரம், மரியான் புகழ் பரத் பாலா தேர்ந்தெடுக்க உள்ளனர்.

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

மாலை ஐந்து மணிக்கு ரெட் கார்பெட் வரவேற்புடன் தொடங்கும் நிகழ்ச்சியில், 6 மணி அளவில் படங்கள் திரையிடப்படுகின்றன. உணவு இடைவேளைக்குப் பிறகு 8:30  மணி அளவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு பரிசளிப்பு  நடைபெறும்.

இறுதிச் சுற்றில் 6 இளம் படைப்பாளிகள்

அமெரிக்கா முழுவதிலிருந்தும் 22 பேர் போட்டியில் பங்கேற்று படங்களை சமர்ப்பித்தனர். அவற்றிலிருந்து பதினைந்து படங்கள் முதல் சுற்றபில் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவர்கள் மீண்டும் சமர்ப்பித்த 15 படங்களிலிருந்து ஐந்து படங்களும், Wild card  மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படமும்  மொத்தம் 6 படங்கள் நேரடியாக அரங்கத்தில் திரையிடப்படுகிறது.

அமெரிக்க தமிழர்களான அஞ்சலி பத்மநாபன், அறிவு மாணிக்கம், குகன் வைத்தியலிங்கம், கமல் பிரேம்தாஸ், விவேக் கிருஷ்ணன், விவேக் இளங்கோவன் ஆகிய ஆறு பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார்கள். இவர்களில் ஒருவர் பெண் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கத் தமிழரின் நம்பிக்கை இயக்குநர் விருது

நேரடியாக அரங்கத்தில் திரையிடப்படும் ஆறு படங்களிலிருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அவருக்கு ‘அமெரிக்கத் தமிழரின் நம்பிக்கை இயக்குநர்’  விருதை கார்த்திக் சுப்பராஜ் வழங்க உள்ளார். விருதுடன் ஐந்தாயிரம் (ரூ 3 லட்சம்) டாலர் பரிசுத் தொகையும் உண்டு. இவ்வளவு பெரிய பரிசுத் தொகையுடன் நடக்கும் முதல் குறும்படப் போட்டி இதுவே.

மேலும் 14 பிரிவுகளில் வெவ்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பரிசுக் கேடயங்கள் அனைத்தும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற நிறுவனத்திலிருந்து தருவிக்கப்படுகின்றன.

முதன் முறையாக…

அமெரிக்காவில் பார்வையாளர்கள் மத்தியில் நேரடியாக திரையிடப்பட்டு தேர்வு செய்யப்படும் முதல் குறும்படப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தகவல்களுக்கு http://bayareafinearts.org/shortfilm2016.php என்ற இணையத் தளத்தில் காணலாம்.

போட்டி மற்றும் விழாவுக்கான ஏற்பாடுகளை விரிகுடாக் கலைக்கூடத்தின் நிறுவனரும், அமெரிக்கத் தமிழ் நடிகருமான திருமுடி துளசிராமன் தலைமையில் செய்து வருகின்றனர்.

Related Images: