முதலில் கல்யாணம், உடனடியாகவே சீமந்தம் என்றால் யாருக்குத்தான் சந்தோசமாக இருக்காது. பாடலாசிரியர் முருகன் மந்திரம், சந்தோசம் தாண்டி கொண்டாட்டம் என்றே இதை சொல்கிறார்.

விரைவில் பாடல்கள் வெளியாக உள்ள சாரல், மற்றும் சும்மாவே ஆடுவோம் படங்களில் இடம் பெற்றுள்ள முருகன் மந்திரத்தின் இரண்டு பாடல்கள் தான் அந்த கொண்டாட்டத்துக்கு காரணம்.

“சாரல் படத்தில் அசத்தலான ஒரு கல்யாணப் பாடல் எழுதும் வாய்ப்பும் அதைத் தொடர்ந்து சும்மாவே ஆடுவோம் படத்தில் அழகான ஒரு சீமந்தப்பாடல் எழுதவும் வாய்ப்பும் கிடைத்தது, அடுத்தடுத்து யதார்த்தமாக நடந்த நிகழ்வுகள்.

சாரல் படத்திற்கு இசை, இஷான் தேவ். மலையாளம் மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள இஷான் தேவ் தமிழில் இசையமைத்துக்கொண்டிருக்கும் படங்களில் ஒன்று சாரல். அசார், பிரியங்கா, நடிப்பில் டிஆர்எல் இயக்கத்தில் நிகில் மேத்யூ, சோனியா, ராஜேஷ் ராஜ் பாடியுள்ள “ரோஜாப் பூப்போல பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை” எனத் தொடங்கும் கல்யாணப் பாடலில் பல்லவியில்….

அடி ஆசை மரிக்கொழுந்தே

அத்தை பெத்த மல்லிகையே

மாமன் மனசுக்குள்ள

கப்பல் விடுங்க

அட மீசை முறுக்கிக்கிட்டு

முந்தானையை கட்டிக்கிட்டு

முழுசா விடிஞ்ச பின்னும்

காலில் கெடங்க

இப்படி வரிகள் அமைந்தது. எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் என்று நம்புகிறேன். (முழுப்பாடலின் வரிகள் செய்தியின் கடைசியில்….)

கல்யாணப் பாடல் எழுதி பதிவாகி ஒரு வாரம் ஆகவில்லை. நண்பர் காதல் சுகுமார் அழைத்தார். அவர் இயக்கும் “சும்மாவே ஆடுவோம்” படத்திற்கான பாடல்கள் எழுதும் வாய்ப்பை தந்தார். பத்து வருடங்களுக்கும் மேலாக குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு ஜமீன் தம்பதி. நிறைய வேண்டுதல்களுக்கு பின் ஜமீன் மனைவி கருத்தரிக்கிறார். அந்த சீமந்த விழாவை ஊர் மக்கள் கூடி கொண்டாடி மகிழ்கிறார்கள். இதுதான் பாடலுக்கான சூழல். இப்போது தான் ஒரு கல்யாணப்பாடல் எழுதினோம். உடனே ஒரு சீமந்தப்பாடல் எழுதும் வாய்ப்பு என்று குஷியாகிவிட்டேன் நான்.  இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, செம கலகலப்பாக மெட்டு போட்டிருந்தார். ஒரு திருவிழாப் பாட்டுக்கு போட்டது போல இருந்தது அந்த மெட்டு. “மகராசிக்கு சீமந்தம்” என்று தொடங்கும் அந்தப் பாடலை மாணிக்கவிநாயகம் மற்றும் மகிழினி மணிமாறன் பாடி இருக்கிறார்கள்.

அம்மன்சாமி சிலையழகு

எங்க அம்மாபோல யாரழகு

பிள்ளை சுமக்கும் தாயழகு

என்றும் அதுதான் பெண்மைக்கு பேரழகு

என்று பாடலின் ஒரு சரணத்தில் வரிகள் எழுதியதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. பாடலை கேட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்தப் பாட்டு இனிமேல் எல்லா சீமந்த நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கும். ஏனெனில் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சீமந்தப்பாடல்கள் இல்லை. எனவே இந்தப்பாடல் பெரிய வரவேற்பைப் பெறும் என பாராட்டுகிறார்கள். பாடல் உருவாக காரணமாக இருந்த இயக்குநர் காதல் சுகுமார், மற்றும் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அனைவருக்கும் நன்றி சொல்வதோடு, அந்த பாராட்டுக்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.”

சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம், காவு, ஒன்றா இரண்டா, வெள்ளை நிலா பல படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் முருகன் மந்திரம்.

Related Images: