ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற தமிழின் தற்போதைய முன்னணி எழுத்தாளர்கள் சில சமயங்களில் எழுத்தாளர்கள் போலவும் பல சமயங்களில் மனநோயாளிகள் போலவும் நடந்துகொண்டு வருவதை அவர்களை உற்று நோக்குபவர்கள் கவனித்திருக்க முடியும்.

அவ்வகையில் சமீபத்தில் ரிலீஸாகி ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கொண்டாடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் `விசாரணை` திரைப்படத்தை குறுக்குவெட்டாகப் பார்க்க்கிறேன் பேர்வழி என்கிற போர்வையில் அவர் பேசிய பேச்சைக் கேளுங்கள்….

“‘விசாரணை’ முழுக்க முழுக்க வாயரிசத்தைத் தான் கொண்டாடுகிறது. இப்படத்தில் இருக்கும் வன்முறை பல படங்களில் பார்த்தது என்று சொன்னார்கள். போலீஸ் எங்கோ தனியாக இல்லை. நீங்களும் நானும் தான் போலீஸ். போலீஸ் நம் தலையில் இருக்கிறான். டெல்லியில் நிர்யா வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் நாம் தனியாக பார்த்தால் இப்படத்தில் வரும் மொட்டை போலீஸ் அடிப்பதைப் போலத் தான் அடிப்போம். அப்படி என்றால் போலீஸ் என்பது தனியாக இல்லை. நம்ம தலைக்குள் தான் வன்முறை இருக்கிறது.

இந்தப் படம் வன்முறை தூண்டும் ஒரு பாமர ரசனையைத் தான் தூண்டி விடுகிறது. அதனால் பாமர ரசனைக்கேற்ப வரும் கமர்ஷியல் படத்துக்கும் இப்படத்துக்கும் வித்தியாசமில்லை. இது ஒரு சீரியஸான படமாக எனக்கு படவில்லை. நீங்கள் ஒரு கமர்ஷியல் படமென்றால் ‘ஆடுகளம்’, ‘இறுதிச்சுற்று’ போல நானும் பார்த்துவிட்டு போய்விடுவேன். இது ஒரு மாற்று சினிமா, சமூக பிரச்சினையைச் சொல்கிறது என்று சொல்லும் போது பெரிய பிரச்சினை வருகிறது.

இப்படம் முதலில் இருந்து இறுதி வரை செயற்கையாகவே இருக்கிறது. உண்மையைத்தனமே இல்லை. ஒருவனுக்கு போலீஸார் லாடம் கட்டிவிட்டால் 2 மாதங்களுக்கு நடக்க முடியாது. லாடம் கட்டி முடித்தப் பிறகு பிரியாணி சாப்பிடப் போகிறார்கள், சுத்தம் செய்கிறார்கள். உண்மையில் ஒரு அறை வாங்கினால் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட 2 நாட்களாகும். போலீஸிடம் அடிவாங்கினீர்கள் என்றால் 2 மாதங்களுக்கு எந்திரிக்கவே முடியாது.

விஜய் படத்துக்கும் இப்படத்துக்கு பார்வையில் எந்த வித்தியாசமும் இல்லை. இப்படத்தின் நாயகனுக்கும், விஜய்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த படத்தில் வரும் மொட்டை போலீஸ் அடிக்க அடிக்க நின்றுக் கொண்டே இருப்பார். அது தான் எம்.ஜி.ஆர், விஜய், அஜித். போலீஸிடம் மாட்டிக் கொண்ட ஒருவர் அடித்தாங்க முடியாமல் அனைத்தையும் சொல்லிவிடுவார்கள். அந்த அடி அவ்வளவு கொடூரமானது. அதனால் தான் சயினைடு வைத்துக் கொண்டு முழுங்கிவிடுவார்கள்.

இப்படத்தின் இசை தான் ஒரு மாடல் என்று ஒரு நண்பர் சொன்னார். அது ஒரு நல்ல கருத்து, நான் ஒன்று சொல்கிறேன். அது தவறாக கூட இருக்கலாம். இப்படத்தின் இசை தான் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணம். போலீஸ் அடிக்கும் போது பின்னணியில் ஒரு வயலின் இசை வந்து கொண்டிருக்கிறது. இசை எப்படி இருக்க வேண்டும், மாற்று சினிமா எப்படி இருக்க வேண்டும் என்றால் ‘கோர்ட்’ என்று ஒரு மராத்தி படம் இருக்கிறது. அதை பாருங்கள். ‘விசாரணை’ ஒரு தவறான படம், அதற்கு மாற்று ‘கோர்ட்’. நீங்கள் பார்த்து முடிவு பண்ணுங்கள். அப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

எப்போதுமே போலீஸையும் சிஸ்டத்தையும் எதிர்த்து பேசுவது சுலபம். சட்டக் கல்லூரி சம்பவம் உங்களுக்கு நினைவு இருக்கும். ஒரு பையனை 10 பேர் சேர்ந்து அடிப்பார்கள். அதற்கு முந்தைய காட்சி ஒரு அருவாளை எடுத்துக் கொண்டு வெட்ட ஓடினான். அதனால் தான் அடித்தார்கள். அதனை நமக்கு காட்சியாக காட்டினார்கள்.

போலீஸை மட்டும் சொல்லிவிட்டு நாம் தப்பித்துக் கொள்ளக் கூடாது. தொடந்து சமூகத்தில் வன்முறை அனைத்து இடங்களிலும் இருந்து கொண்டிருக்கிறது. அனைவருமே வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் சாரு.

Related Images: