ஷாருக் வீட்டு நீச்சல் குளத்தில் குளித்த ரசிகர்.

கடந்த 16ம் தேதிஷாருக் கான் நடித்து வரவிருக்கிற ‘ ஃபேன்’ படத்தின் “ஜப்ரா மே தேரா ஃபேன் ஹோ கயா” என்கிற ஒரு பாடல் வெளியானது. படத்தில் ஷாருக்கான் புது மெருகுடன் அசத்தலாக நடித்திருக்கிறாராம். அத்தோடு இப்படம் ஒரு நடிகனின் மிக பெரிய விசிறியைப் பற்றிய கதை என்பதால் படம் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதோ என்று பலர், ஷாருக் கானின், ரசிகர்களிடம் பெற்ற வித்தியாசமான அனுபவங்களை அவரிடம் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இது பற்றி ட்விட்டரில் பேசிய அவர், தன்னால்  மறக்கவே முடியாத ஒரு ரசிகரை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.  “ஒரு நாள் திடீரென ஒரு மனிதர் என் வீட்டினுள் நுழைந்து, தனது உடைகளை அவிழ்த்து வைத்து விட்டு, எனது நீச்சல் குளத்தில் குதித்து குளிக்க ஆரம்பித்துவிட்டார், செக்யுரிட்டி கார்டு வந்து அவரை பிடித்து யார் என்று விசாரித்த போது, “நான் ஷாருக்கானின் பரம ரசிகன். எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை, ஷாருக் கானின் நீச்சல் குளத்தில் நான் குளித்தால் மட்டும் போதும்” என்றிருக்கிறார் அவர்.

“பின்பு என்னைச் சந்திக்க வந்த அந்த ரசிகர் என்னிடமிருந்து போட்டோ, ஆட்டோகிராப் என ஏதும் எதிர்பார்க்கவில்லை. நான் இத்தனை பிரியத்திற்குரியவனா என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அம்மனிதரை நான் கட்டி தழுவி கொண்டேன், எனது ரசிகர்களை பற்றிய எத்தனையோ கதைகள் இருந்தாலும், இவ்வளவு வினோதமான அன்புள்ளம் கொண்டவர்களை என்னால் மறக்கவே முடியாது” என ஷாருக் நெகிழ்கிறார்.

“ரசிகர்களைப் பார்த்து எப்போதாவது பயந்திருக்கிறாரா ?” என்று கேட்டபோது, பெண் ரசிகர்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி என்னை பயமுறுத்தும் அளவிற்கு யாரும் நடந்து கொள்வதில்லை. அவர்கள் மிகவும் அன்பானவர்கள்” என்கிறார்  ஷாருக்.