தமிழில் வரும் முதல் ஸோம்பி படம் மிருதன்.

இந்தவாரம் ஜெயம்ரவி நடித்திருக்கும் மிருதன் படம் வெளியாகவிருக்கிறது. தனிஒருவன் படத்துக்குப் பிறகு அவர் நடித்தபடம் இது. தமிழ்த்திரையுலகில் இதுவரை வராத புத்தம்புதிய கதைக்களத்துடன் இந்தப்படம் தயாராகியிருக்கிறது. ஸோம்பிக்கள் பற்றிய படங்கள் ஹாலிவுட்டில் நிறைய உண்டு. தமிழில் இதுதான் முதல்படம். ஹாலிவுட்டில் ஸோம்பி படங்களிலேயே காமெடியிலிருந்து, த்ரில்லர்கள் வரை விதம்விதமாக எடுத்துச் சலித்துவிட்டார்கள்.

ஒரு குறிப்பிட்ட வகை கொடிய வைரஸ் தாக்குதல் காரணமாக மனிதர்கள் மிருகங்கள் போல அடுத்தவர்களை கடித்துத் தின்பவர்களாக மாறிவிடுவார்கள். உணர்வுகள் அற்ற ஜடங்களாக அலைவார்கள். இது ஒரு அறிவியல் புனைவு. இந்த ஸோம்பிக்களைத் தமிழ்ப் படுத்த  இந்தப்படத்துக்கு மிருகம் என்கிற சொல்லிலிருந்து முதலிரண்டு எழுத்துகளையும் மனிதன் என்கிற சொல்லிலிருந்து கடைசி இரண்டு எழுத்துகளையும் எடுத்து மிருதன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில் ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் வெளியானது. கார்ப்பரேட் உலகின் நச்சு குணத்தை ஒரு வில்லன் மூலமாக உணர்த்தும் இந்தப்படம், அவருடைய முந்தைய எல்லாப்படங்களையும் விடக் கூடுதலான வரவேற்பு மற்றும் வசூலைப் பெற்று, அப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுத்தந்தது

மிருதனை நாய்கள்ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்திசௌந்தர்ராஜன் இயக்கியிருக்கிறார். இந்தப்படபத்தில் லட்சுமிமேனன் முதன்முறை ஜெயம்ரவியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

ஒரேநாளில் நடக்கிற கதை என்பதால் மிக வேகமான விறுவிறுப்பான திரைக்கதை அமைந்திருக்கிறது, ஏற்கனவே எல்லா வகை ஹாலிவுட் ஸோம்பிகளையும் டப்பிங்கில் பார்த்துவிட்ட நம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த மிருதன் புதிதாக என்ன பயம் காட்டப் போகிறான் என்பதைப் பார்ப்போம்.