அது 2002-ம் ஆண்டு. டெல்லி பிரஸ் தமிழ் இதழ்களின் பொறுப்பாசியராக இருந்த நேரம்.

அமரர் சுஜாதாவை தினமணியிலிருந்த காலத்தில் சிலமுறை சந்தித்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். அந்த பழக்கத்தில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இதழுக்கு அவரது பேட்டியைக் கேட்டிருந்தேன். அவரது தி நகர் அலுவலகத்துக்கு அடுத்த நாளே வரச் சொல்லிவிட்டார்.

சம்பிரதாய பேட்டி மாதிரி வேண்டாம் என அவரும் நினைத்ததால், பத்திரிகை குறித்து, அதன் முன் நிற்கும் சவால்கள், நிறுவனப் பின்னணி குறித்தெல்லாம் பேசினார். என்னைப் பற்றி அன்றுதான் முழுமையாக விசாரித்தார்.

நானோ அவர் எழுதிய முதல் கதை.. அவரே எழுதிய கவிதைகள், நாவல்கள், விகடன் மவுன்ட் ரோடில் வைத்த கட் அவுட், ரத்தம் ஒரே நிற களேபரம், முதல் பாகத்தோடு நிற்கும் வசந்தகுமாரன் கதை, மத்யமர் கதை, சலவைக்காரி ஜோக், ஸ்ரீரங்கத்து தேவதைகள்… என அனைத்தையும் கிட்டத்தட்ட மனப்பாடம் செய்த மாணவன் மாதிரி ஒப்பிக்க, அந்த மேதை சிரித்தபடி, ‘நீங்க படிக்காத என் புத்தகம், நான் இன்னும் எழுதாததுதான் போலிருக்கிறது!’ என்றார் தனக்கேயுரிய அந்த அவசர வார்த்தைகளில்!

முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, அடுத்த முக்கால் மணி நேரத்துக்கு அவர் எனக்களித்த பேட்டியை, ஆறு பக்கங்களில் வெளியிட்டேன்.

அப்போது என்னுடன் வந்த புகைப்படக்காரர் எடுத்த படங்களின் பிரதிகள் வேண்டும் என்றார் சுஜாதா. அவற்றை அடுத்த நாளே புகைப்படக்காரர் எடுத்துச் சென்றபோது, ‘என்னை இந்த அளவுக்கு எடுத்தது நீதான்னு நினைக்கிறேன்’ என்று பாராட்டினார்.

அப்போதெல்லாம் நான் அடர்த்தியான தாடியுடன்தான் இருப்பேன். சுஜாதாவையும் அந்த கோலத்தில்தான் பேட்டி கண்டேன்.

அந்தப் பேட்டி வெளிவந்த சில மாதங்கள் கழித்து, ஆனந்த விகடன் இதழைப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சி. நான் ஆசிரியராக இருந்த அந்தப் புதிய பத்திரிகையை சிறந்த வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கத்துக்கான இதழாக தேர்வு செய்திருந்தார். அதை விகடனிலேயே வெளியிட்டுமிருந்தார். எத்தனை பெரிய மனது… ஆசீர்வாதம்!

அதைப் பார்த்த அடுத்த நாளே அவரைப் பார்க்க விரும்பி போன் செய்தேன். வீட்டுக்கு வரச் சொன்னார். அடுத்த அரை மணி நேரத்தில் போய் நின்றேன். பத்திரிகையின் சில பிரதிகளை அவரிடம் கொடுத்ததும் என்னைப் பார்த்து அவர் இப்படிக் கேட்டார்:

“ஆமா.. தாடிக்குள்ள மூஞ்சியோடு ஒருத்தர் என்னைப் பேட்டியெடுத்தாரே, அவர் எங்கே?” என்றார் குறும்பாக (தாடியை எடுத்துவிட்டிருந்தேன்!).

“சார்.. நான்தான் அது… !”

“தெரியுது.. இனி தாடி வேணாம்!” என்றார் (அதற்குப் பின் ஒரு நாளும் தாடியோடு இருந்ததாய் நினைவில்லை!).

“தேங்க்ஸ் சார்.. இந்தப் பத்திரிகையை தேர்வு செய்து விகடனிலேயே நீங்கள் வெளியிட்டது பெரிய அங்கீகாரம்.. ,” என்றேன்.

“உங்களை மாதிரி இளைஞர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. விகடன் மாதிரி மூத்தவர்கள் அதற்கு துணை நிற்க வேணும்,” என்று கூறி, அரை மணி நேரம் அவர் எனக்குச் சொன்னவை.. அடுத்த இரு சந்தப்புகளில் உரிமையோடு பேசியவைதான் இன்றும் உடன் நிற்கும் ஆசீர்வாதமாக நினைக்கிறேன்! (இப்போது.. இதை எழுதும்போதுகூட.. ‘மிகைப்படுத்தல் இல்லாம எழுதுகிறாயா’ என அந்த மேதை கண்காணிப்பது போன்ற உணர்வு!)

குறிப்பு: 2008, பிப் 27, சுஜாதா அமரரான தினம்.. உயிரற்றுப் படுத்திருந்த அந்த மேதையைப் பார்த்துவிட்டு வந்து, ரொம்ப நேரம் ஒரு படத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதன் பிறகு பலரும் அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பதிவதை இணையத்தில் பார்க்கும்போதெல்லாம், அந்தப் புகைப்படத்தைத் தேடுவது என் வழக்கம். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் தேடியதில் ஒரு நாள் கிடைத்துவிட்டது இந்த பொக்கிஷப் படம்!

முகநூலில் சங்கர் Vino Jasan

Related Images: