“யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பலியாக்கப்படலாம் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். இதை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் இந்தப் படம், மக்களின் கவனத்தை மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரின் கவனத்தையும் கோரி நிற்கிறது. இந்தியச் சட்டங்கள் அவற்றின் உயரிய நோக்கங்களுக்கேற்பப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், அதைச் செய்யக்கூடியவர்கள் அதிகார வர்க்கத்தினர்தான். தங்கள் மனசாட்சியை நோக்கி ஒரு கலைஞன் விடுக்கும் செய்திக்கு அவர்கள் காதுகளும் மனங்களும் திறக்குமா?”

Visarana– விசாரணை திரைப்படம் குறித்து, தி இந்து தமிழ் நாளிதழில் அதன் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் எழுதிய கட்டுரையின் இறுதி வரிகள்.

ஒரு அமைப்பு முறையின் குறைகளை தீர்க்கும் சூட்சுமம் அந்த அமைப்பின் தளகர்த்தகர்களான அதிகார வர்க்கத்தின் மனசாட்சியில் மறைந்திருக்கிறது என்பதன் பொருள் என்ன?

ஒரு அமைப்பு முறையின் நோய் அந்த அமைப்பு முறையின் சட்ட திட்டங்களால் அல்ல, அமல்படுத்தும் நபர்களாலேயே தீவிரமடைகிறது என்ற வாதம் இரு உண்மைகளை பகிரங்கப்படுத்துகிறது. அமைப்பில் எந்த பிரச்சினையுமில்லை, நபர்களை சீர்திருத்தினால் போதும் – எதிர்த்து வரும் புதிய முறையை ஆதரிக்கத் தேவையில்லை. இறுதியில் இப்போது இருக்கும் அமைப்பு முறையை கை விடக் கூடாது, தேவையானல் கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம்! மாற்றச் சொல்லி இரத்தம் சிந்த வேண்டாம்!

படிப்பவர்க்கேற்ப பிரதியின் பொருள் மாறுபடும் எனும் பின் நவீனத்துவ ‘பொன்மொழி’க்கேற்ப விசாரணை திரைப்படத்தை விளக்குதல் ஆளாளுக்கு மாறுபடுமோ? இல்லை பிரதி எடுத்துக் கொண்டிருக்கும் பொருளின் அல்லது துறையின் பொது இயக்கத்தை எந்த அளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறோமோ அந்த அளவுக்கு வேறுபடுமா?

ஆட்டோக்காரர், லாரி ஓட்டுநர், உதிரி இளைஞர்கள், ஏழைகள், பாதையோர வியாபாரிகளின் பிழைப்புத் தருணங்களில், தமது பத்திருபது ரூபாய் கூலியை – வருமானத்தை பறிக்க வரும் வழிப்பறிக்காரராகவே ஒரு போலிஸ்காரரைச் சந்திக்கிறார்கள். போராடும் தொழிலாளிகள், மாணவர்கள் இன்னபிற ஊழியர்களுக்கு அரசின் அடியாட்களாய் தோன்றும் காவல் துறையினர் புரட்சிகர அமைப்புகளைப் பொறுத்த வரை ஆளும் வர்க்கத்தின் வேட்டை நாயாக தென்படுவர். எனினும் இதில் சேர விரும்பாத படித்த நடுத்தர வர்க்கத்திற்கு மேற்கண்ட படிதான் தோன்ற வேண்டும் என்பதில்லை. அதிக பட்சம் ஏதாவது சொத்து தகராறு, குடும்பப் பிரச்சினைகள், கடவுச்சீட்டு விசாரணை போன்றவற்றுக்கு வேறு வழியின்றி காவல் நிலையம் போவது தவிர இவர்கள் உலகில் போலிசுக்காரர்கள் காத்திரமான பாத்திரத்தில் இல்லை. அதே நேரம் போலிசு குறித்த பயம் இவர்களிடத்தில் இல்லை என்பதல்ல.

விசாரணை திரைப்படம் குறித்து கருத்துரைக்கும் பலரும் இந்த வர்க்க்கத்தின் அளவு கோலின்படி, எளியோரை வதைக்கும் போலிசை கலைநயத்தோடும், பதட்டத்தோடும் சித்தரிக்கும் திரைப்படம் என்கிறார்கள்.

chandra-kumar-lock-up-novel

லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமார்

தள்ளிப் போன தனுஷ் படத்தினால் தற்செயலாக அமைந்த இந்தத் திரைப்பட உருவாக்கம், பின்பு இத்தகைய கவனம் பெறுமென்பதை வெற்றி மாறன் ஊகித்திருக்க மாட்டார். அதே நேரம் ஒரு கலை அதன் உருவாக்கத்தில் படைத்தவனையும் உள்ளிழுத்துக் கொண்டு புதிய தரிசனங்களை உணர்த்தும் என்பதால் இந்த “தற்செயல்” பிரச்சினையல்ல. சந்திரகுமார் எனும் ஆட்டோ தொழிலாளியின் சுய அனுபவத்தை தழுவிய இந்தத் திரைப்படம் எந்த அவசியத்தினால் பலரையும் ஈர்த்திருக்கிறது?போலீசின் மீதான பயமா? போலிசுத் துறையை இயக்கும் இந்த ‘அமைப்பு’ குறித்த விமரிசனமா?

நாவலின் நேரடி கதையாக்கம் என்றாலும் முதல் பாதியில் சந்திரகுமாரின் அனுபவங்களையும், பின்பகுதியில் தான் உருவாக்கிய கதையையும் சேர்த்தே இப்படத்தை ஆக்கியிருப்பதாக இயக்குநர் கூறியிருக்கிறார். நாவல் படித்தோருக்கு இந்த படம் வேறு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்று அவர் கூறுவதும் இதன் பொருட்டே. சொல்லப் போனால் இது இயக்குநரின் படம் – சந்திரகுமாருக்கு பணிவாக நன்றி தெரிவிக்கப்பட்ட போதிலும்.

ஆந்திராவிற்கு பிழைக்கச் சென்ற தமிழகத் தொழிலாளிகளின் காவல் நிலையக் கொட்டடி வதைகளோடு படம் முடிந்திருந்தால் அதை ஆவணப்படம், பிரச்சாரப் படம் என்று குறைத்திருப்பார்களோ தெரியவில்லை. எளியோருக்கு இழைக்கப்படும் வன்முறையும், கொலையும், கைதுகளும், சிறையும், தண்டனையும் வலியோரின் உலகிலிருப்பது போல ஒரு காவியத் துயரமாக இருப்பதில்லை. மூப்பனார் சைக்கிள் ஓட்டினால்தான அது எளிமை. மூப்பனார் நிலத்தில் பாடுபடும் விவசாயக் கூலிக்கு சைக்கிளே இல்லாமல் இருப்பது பிரச்சினையல்ல. ஆட்டோவில் விட்ட பணத்தை அப்படியே கொடுத்தால் ஒரு ஆட்டோக்காரர் நல் குடிமகனாக செய்தியில் இருப்பார். வரி ஏய்ப்பில் காலம் தள்ளும் ஒரு முதலாளி, தகவல் என்ற முறையில் கூட ஒரு செய்தியில் இடம் பெறமாட்டார்.

visaranai-review-2

ஆந்திர போலீசு, தமிழக போலீசு என்ற பேதங்களுக்கு அப்பால் அடிப்பதில் ஒரே போலிசு என்று உணரவைத்த விசாரணை திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

ஆந்திரத்து குண்டூரின் ஒரு வைகைறைப் பொழுதில் மர்மங்களுக்கு பொருத்தமான மஞ்சள் வெளிச்சத்தின் கீழ் துயிலெழுந்து நீராடி பணிக்குச் செல்லும் பாண்டியோடு நாமும் பயணிக்கிறோம். பிறகு உள்ளூர் நீதிமன்றத்தால் பாண்டியும் நண்பர்களும் விடுவிக்கப்படும் வரை அவர்களின் கையறு காவல் நிலைய கொடுமைகளை பதட்டத்துடனே பின்தொடர்கிறோம். ஆடியோ பாடியோ அடித்தோ ஆசைகாட்டியோ சதி செய்தோ அந்த இளைஞர்களை பணிய வைக்கும் போலிசின் தந்திரங்கள், அடாவடிகள் உண்மையிலேயே பார்ப்போருக்கு ஆத்திரத்தையும் அச்சத்தையும் வரவழைக்கின்றன. போலிசு எனும் வேட்டை நாய்களின் வெறியை இயல்பாக காட்டியதற்காக இயக்குநருக்கும், படப்படிப்பு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!

அந்தப் பகுதியில் கீழமை நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பும், தமிழக போலிசு தனியாக சுற்றுவது மட்டும் யதார்த்தத்தின் படியே பொருத்தமாக இல்லை. சந்திரகுமாரின் நாவலில் அது எப்படி இருப்பினும் போலிசின் அத்து மீறல்களுக்கு முதன்மையான பாதுகாவலர்களே நீதிமன்றங்கள்தான். இரத்தம் சொட்டச் சொட்ட அடிபட்ட நிலையிலும் அதை ஏன் என்னவென்று பார்க்காமல் சிறைக்கனுப்பும் நீதிபதிகள்தான் போலிசு எனப்படும் உருட்டுக் கட்டையின் சட்டபூர்வ அங்கீகாரம்.

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பச்சையப்பா மாணவர்கள் பின்னர் சிறையிலும் வதைக்கப்பட்டார்கள். அவர்களை சிறை வைத்ததோடு பின்னர் சில இலட்ச ரூபாய் பிணையில் விடுவதாகச் சொன்னார் கீழமை நீதிமன்ற நீதிபதி. சொல்லப் போனால் நேரடியாக அடிக்கும் போலிசை விட சட்டத்தால் கடிக்கும் இவர்களே வில்லத்தனத்தில் முதன்மையானவர்கள்.

அடுத்து எந்த மாநிலப் போலிசும் இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் போது அந்த மாநில போலிசின் ஆதரவோடுதான் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – மேற்கொள்ள முடியும். அவர்களுக்கிடையே வேறு முரண்பாடுகள் எது இருந்தாலும் போலிசு எனும் துறையின் கட்டுக்கோப்பை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இருந்திருந்தால் ஆந்திர போலிசின் செம்மரக்கட்டை கொலைகளுக்குப் பிறகு அவர்கள் அடிக்கடி தமிழகம் வந்து பலரையும் கைது விசாரணை என்று பணியாற்ற முடியுமா? இல்லை அட்டாக் பாண்டியைத்தான் மும்பை சென்று தமிழக போலிசு கைது செய்ய முடியுமா?

நீதிமன்றத்தில் ஆந்திர போலிசிடம் முரண்பட்டு தமிழக இளைஞர்களை காப்பாற்றும் தமிழக போலிசான சமுத்திரக் கனியை நிஜத்தில் பார்க்கவே முடியாது அல்லது அரிதினும் அரிது. அதே சமுத்திரக் கனி பிறகு அதே ஆந்திரத்து போலிசின் உதவியோடு ஆடிட்டரை கடத்துகிறார். இந்தக் கடத்தல் சாத்தியம் எனும் பட்சத்தில் அந்த விடுதலை சரியல்ல. இவையெல்லாம் வழக்கமான லாஜிக் மீறல்களாக சுட்டவில்லை. இந்த படம் அமைப்பு முறையை விமரிசிப்பதாக இருந்தால் இவை முக்கியம் என்கிறோம். எனில் “விசாரணை” எதை விமரிசிக்கிறது?

இந்தக் கேள்விக்கு இரண்டாம் பகுதி விடையளிக்கிறது. எதிர்க்கட்சி பிரமுகர்களின் சார்பான தணிக்கையாளரை பேச வைத்தால் POLICEஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெறலாம் என்று சில போலிசு அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். பிறகு அவரை காப்பாற்ற வேண்டியவர்களே இவன் பேசினால் கதை கந்தல் என்று போலீசு மூலம் கொல்வதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். ஆடிட்டருக்கு ஆதரவாக எதிராக என்று போலிசின் சதுரங்க நடவடிக்கைகளில் இன்ஸ்பெக்டர் முத்துவேலின் ஊசலாட்டமும், பாண்டி மற்றும் நண்பர்கள் சிக்கிக் கொள்வதும் காட்டப்படுகிறது. இறுதியில் இவர்கள் அனைவரும் கொல்லப்படுவதோடு போலிசின் மற்றொமொரு நாள் முடிகிறது.

பாண்டி குழுவினர் மேல் நிகழ்த்தப்படும் போலிஸ் வன்முறையை விட தணிக்கையாளர் மேல் நிகழ்த்தப்படும் வன்முறை, பார்க்கும் நடுத்தர வர்க்கத்திற்கு கொஞ்சம் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காரணம் என்ன இருந்தாலும் அவர் மேல்மட்டத்தோடு தொடர்புடையவர், படித்தவர், இங்கிதமானவர், தவறான முறையில் சொத்து சேர்த்திருந்தாலும் பெட்டி கிரிமினல் அல்ல. ஜட்டியோடு கிஷோர் அடிக்கப்படுவதிலிருந்து அவர் கொடூரமாக கட்டித் தொங்க விடப்பட்டு தொள்பட்டை, முதுகெலும்பு முறிந்து மரணமடையும் காட்சிகள் வரை பார்ப்போரின் அனுபவத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கின்றன. அது இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அச்சம். தான் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் போலிசு எனும் இரக்கமற்ற எந்திரத்தின் உண்மை முகத்தை பார்ப்பதால் வரும் பயம்.

ஆனால் முழுப்படம் முடிவடையும் போது இக்கதையினை படைத்தோரும், பார்த்தோரும் வந்தடையும் உணர்விற்கும் தி இந்து அரவிந்தன் வந்தடைந்த ‘அறத்திற்கும்’ பெரிய வேறுபாடு இருக்காது. அதாவது இத்தனை கொடூரமாக இருக்கும் போலிசை கொஞ்சமல்ல நிறையவே சுத்திகரிக்க வேண்டும். இதுதான் ‘அமைப்பு’ முறை மீதான விமரிசனமா?

உலகநாடுகளில் போலிஸ் வன்முறை

police-brutalityந்தி டி.வி விவாதத்தின் போது சந்திரகுமாருக்கு ஏற்பட்ட லாக்கப் அனுபவம் தனியான ஒன்றல்ல, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அனுபவமும் கூட என்று சொன்னார் இயக்குநர். இது உண்மையென்றால் வெனிசில் இப்படம் பார்த்தோருக்கு அது பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காதே?

மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரை கொட்டடிக் கொலை, சித்திரவதை என்பது நம் நாடுகளைப் போல இருக்க வேண்டியதில்லை. அமெரிக்காவில் ஒரு கருப்பின இளைஞன், காவல் நிலையத்தில் அல்ல களத்திலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். அவன் ஆயுதம் வைத்திருந்தான், போலீசு அதிகாரியை தாக்க முயன்றான் என்ற சித்தரிப்பே கொல்வதற்கு போதுமானது.

முசுலீம் மதம் சார்ந்து தண்டிக்கும் அரபு நாடுகளில் ஒரு பொறுக்கி ஷேக் காப்பாற்றப்படுவதும், ஒரு அப்பாவி இலங்கைப் பெண் தலையறுக்கப்படுவதும் வெறும் போலிசு குறித்த வன்முறையா?

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் “மக்களின் நூற்றாண்டு” என்றொரு தொடர் ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியது. அதில் இருபதாம் நூற்றாண்டின் சாதனைகள் மக்களை முன் வைத்து விவரிக்கப்பட்டன. முதிய வயதில் உள்ள ஒரு சீனத்து பெண், அவளது இளமை நாட்களில் (1949- சீனப் புரட்சிக்கு முந்தைய காலம்) கம்யூனிஸ்டுகளின் இராணுவமான சீன செஞ்சேனை வந்து தங்கியதை பகிர்ந்து கொள்கிறார். வந்தவர்கள் அனுமதி பெற்று கிராமத்து வீடுகளில் தங்கியது, பொருட்களை காசு கொடுத்து வாங்கியது, பெண்களை கண்ணியமாக நடத்தியது அனைத்தையும் வெள்ளேந்தியாக அதாவது மேற்குலகின் கம்யூனிச எதிர்ப்பு கற்பனை புரூடாக்களை அறியாமல் உண்மையாகச் சொல்கிறார்.

ஒரு நாட்டின் ஜனநாயகப் போராட்ட வரலாற்றுக்கேற்பவும், அம்மக்களின் ஜனநாயக விழிப்புணர்வுக்கேற்பவும் போலீசின் வன்முறைகள், சட்டத்தின் அமலாக்கம் மாறுபடுகின்றன. இன்றும் பிரான்சில் தொழிலாளிகளோ, விவசாயிகளோ போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்த முடியும். அரசோ, போலிசோ ஒன்றும் செய்ய இயலாது. இங்கோ மாருதி தொழிற்சாலையில் போராடிய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் இன்றும் (சில வருடங்களாக) சிறையில் இருக்கின்றனர்.

ஆகவே உலகமெங்கும் எல்லா ‘அமைப்பு’க்களிலும் போலிசு வன்முறை ஒரே மாதிரியானது என்ற புரிதல் மேற்குல என்.ஜி.ஓக்களால் பிரச்சாரம் செய்ப்படும் ஒரு கருத்து. அதன் நோக்கம் மேற்குலகின் ஆசி பெற்ற அரசுகளின் பாவத்தை மறைப்பதற்கு, போலிசை சீர்திருத்த வேண்டும் என்று முன் வைப்பதே. சட்டென்று சுட்டுக் கொல்லும் மேற்குலகில் இத்தகைய அணு அணுவாக வதைக்கும் பழையை முறை தற்போது காணக் கிடைக்காது என்பதாலும் வெனிசில் “விசாரணைக்கு” வரவேற்பு கிடைத்திருக்கலாம்.

விசாரணை திரைப்படம் குறிப்பிடும் “SYSTEM – அமைப்பு” எது?

visaranai-review-5

விசாரணை திரைப்படத்தில் ஒரு காட்சி! சாப்பாடு போட்டு பேரம் பேசும் போலிசு!

விசாரணை திரைப்படம் போலிசு எனும் துறையினை அரசு அல்லது State-ன் அங்கமாக வைத்து பார்க்கவில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையே பந்தாடப்படும் ஆடிட்டர் பாத்திரம் அரசின் பாத்திரத்தை குறிக்கவில்லையா என்று கேட்கலாம். இல்லை. இது அரசாங்கம் அல்லது Government எனப்படும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகளின் ஆட்சி எந்திரத்தை சுட்டும் சொல். படத்தில் ஒருவேளை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதாக இருந்தால் போலிசு வன்முறையற்று இருந்திருக்குமா என்ன? ஒருவேளை ஆடிட்டர் மட்டும் பிழைத்திருப்பார்.

அரசுக்கு அரசாங்கம், போலிசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என்ற உறுப்புகள் உண்டு. எளிமையான புரிதலுக்காக ஊடகங்கள் (வினவு உட்பட) அரசு என்றாலே அரசாங்கம் என்று எழுதுவது, தி.மு.க – அ.தி.மு.க அரசு, மோடி-மன்மோகன் அரசு என்றே நிலைபெற்றிருக்கிறது. இவர்கள் இல்லை என்றாலும் ஆட்சி கலைக்கப்பட்டாலும் இங்கே அரசு தனது ஆட்சியைத் தொடரும். தெரிவு செய்யப்படும் ஐந்தாண்டு பிரதிநிதிகளை விட நியமிக்கப்படும் அதிகார வர்க்கமே இதன் அடிப்படை. அந்த அடிப்படையை முதலாளிகள், பணக்காரர்கள், பெரும் நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியம் அடங்கிய ஆளும் வர்க்கம் அளிக்கிறது – அரசியல சாசனத்தின் பேரில்.

விசாரணை திரைப்படம் அரசியல் திரைப்படமல்ல என்பதற்கு ஆடிட்டர் கதை ஒரு சான்று. அரசின் கொள்கைகளை, சட்டங்களை அமல்படுத்தும் போது பாதுகாக்கும் பொறுப்பை அதாவது ஒடுக்கும் வன்முறையை ஏற்றிருக்கும் போலிசாரை வரம்பிற்குட்பட்டு அரசாங்கங்களும் அதாவது ஆட்சியில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளும் தமது நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஜாபர் சேட்டை கருணாநிதியும், மோகன்தாசை எம்.ஜி.ஆரும் தமது கட்சிகளின் உளவாளிகளாக பயன்படுத்தலாம். அலெக்சாண்டர் தரும் உளவுத் துறை தகவலை வைத்து ஜெயலலிதா வேட்பாளர்களை தெரிவு செய்யலாம். சசிகலா சொத்து வாங்கலாம். பதிலுக்கு ஆர். நட்ராஜோ, அலெக்சாண்டரோ அ.தி.மு.கவில் சேர்ந்து அமைச்சராகலாம்.

படத்தில் காண்பிக்கப்படுவது போல ஒரு கட்சியின் மேல் மட்ட தணிக்கையாளரை கொல்வது வரம்பை மீறியது, சாத்தியமற்றது. ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ இருக்கும் ஓட்டுக் கட்சிகள் எந்த அளவுக்கு போலிசுத் துறையை பயன்படுத்தலாம்?

சசிகலா கும்பலை அடக்குவதற்கு செரினா மீது கஞ்சா வழக்கு, சுதாகரன் மீது வழக்கு, நடராஜன் மீது ஏதோ ஒரு போண்டா வழக்கு போடலாம். கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்யலாம். ஜெயா மீது சொத்து குவிப்பு வழக்கு போடலாம். அதைத் தாண்டி ஜெயாவைத் தண்டிப்பது சாத்தியமில்லை.

ஆனால் செம்மரக் கட்டைகளின் பெயரில் தமிழக தொழிலாளிகளை சுட்டுக்கொன்ற ஆந்திரப் போலிசாரையோ, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்களை நரபலி வேட்டையாடிய தமிழக போலிசரையோ தண்டிக்க முடியாது. இவை இந்த அரசு தீர்மானித்திருக்கும் பணிகளில் வருபவை. மாஞ்சோலை போராட்டமோ, மாருதி தொழிலாளர் வேலை நிறுத்தமோ இங்கெல்லாம் போலிசு சுடலாம், கொல்லலாம், பிரச்சினையில்லை. அப்பாவி இர்ஷத் ஜஹானை சுட்டுக் கொன்று விட்டு ஹெட்லியை வைத்து தீவிரவாதி என்று கதையளக்கலாம். இவையெல்லாம் ‘அமைப்பு’ ஏற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகள். ஆக அரசு வன்முறைகளை ஓட்டுக்கட்சி வன்முறைகளாக சித்தரிப்பதும் புரிந்து கொள்வதும் பாரிய பிழை.

எது அரசு பயங்கரவாதம்?

ந்த அமைப்பு முறையில் போலிசு சீர்திருத்தப்படவேண்டும் என்பதே இப்படத்தை பார்த்தோர் அதிகபட்சம் கோர முடியும். சான்றாக இயக்குநர் ராம் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருக்கும் கருத்தைப் பார்ப்போம்.

“நீங்களும் நானும் வாழும் இந்த நாடு,இதன் விதிகள், இதன் சட்டம் என எல்லாவற்றையும் விசாரணை செய்ய வருகிறது…

திரைக்கலையின் முழுமையோடு
சுவாரசிய நேர்த்தியோடு
அரச பயங்கரவாதத்திற்கு எதிராய்
முதல் தமிழ்ப் படம்…”

download

இந்திய இராணுவத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் மணிப்பூர் பெண் போராளிகள்!

ராம் சொல்வது போல இந்தப் படம் அரச பயங்கரவாதத்தைப் பற்றியதல்ல. போலிசு வன்முறை அல்லது போலீசின் பயங்கரவாதம் என்று கூடச் சொல்லலாம். படத்தின் முதல் கதையில் மேலதிகாரியின் வீட்டில் திருட்டுப் போன வழக்கை முடிக்க, அப்பாவிகளை குற்றவாளிகளாக்க முயல்கிறார்கள். இரண்டாவது கதையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சிக்கு ஆதரவாக ஒரு ஆடிட்டரை கொல்கிறார்கள். இரண்டுமேசட்டத்திற்குட்படாமல் செய்யப்படும் குற்றங்கள்.

அரச பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் அரசு அதாவது இராணுவம், போலீசு, நீதித்துறை, அதிகார வர்க்கம், அரசாங்கம் அனைத்தும் வெளிப்படையாக தன் சொந்த நாட்டு மக்கள் மீதோ அல்லது வேறு நாட்டு மக்களின் மீதோ நிகழ்த்தும் சட்டப்பூர்வமான படுகொலை அல்லது வன்முறையைக் குறிக்கும். சொந்த நாட்டில் செய்வது உள்நாட்டு பயங்கரவாதம், வெளிநாடுகளில் செய்வது ஆக்கிரமிப்பு பயங்கரவாதம்.

அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிலும், அபுகிரைப்பிலும் செய்யும் படுகொலைகள் ஆக்கிரமிப்பு பயங்கரவாத்தில் வரும். இந்தியாவில் குஜராத் இனப் படுகொலை, காஷ்மீரில் இந்திய அரசின் அடக்குமுறை, வட கிழக்கில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள், மத்திய இந்தியாவின் காட்டு வேட்டையில் துணை இராணுவங்களின் படுகொலைகள அனைத்தும் இந்திய அரசின் பயங்கரவாதம் எனப்படும். ஈழப் படுகொலைகள் கூட இலங்கை அரசு பயங்கரவாதம் நடத்திய இனப்படுகொலைதான்.

ஒருவேளை விசாரணை திரைப்படம் பினாயக் சென், காட்டு வேட்டை, காஷ்மீர், தீஸ்தா சேதல்வாத் போன்ற கதைகளில் தோய்ந்திருந்தால் சென்சாரிலேயே கொலை செய்யப்பட்டிருக்கும். இதெல்லாம் அறியாதவர்கள் அல்ல நமது படைப்பாளிகள்.

போலிசின் அன்றாட வன்முறைகளை ஏதாவது மேலோட்டமாக வேணும் நாம் சட்ட பூர்வமாக எதிர்க்கலாம், வழக்காடலாம் – அதனால் பயனில்லை என்றாலும். ஆனால் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் சுட்டு விரலைக் கூட நீட்ட முடியாது. அது அங்கீகரிக்கப்பட்ட வன்முறை.

அதனால் விசராணை திரைப்படத்தை – போலிசின் வன்முறையை தத்ரூபமாக காட்டியிருந்தாலும் – அரசியலற்ற திரைப்படம் என்று அழைப்பதில் பிழையில்லை. திரைக்கதையில் சில அப்பாவிகளின் மீது சில போலிஸ்காரர்களின் நலன் காரணமாக சட்டத்தை ‘ஏமாற்றி’ நிகழ்த்தப்படும் வன்முறையையும் காஷ்மீரிலும், வடகிழக்கிலும் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தின் மூலம் பகிரங்கமாக நிகழ்த்தப்படும் சட்டப்பூர்வ பயங்கரவாதத்தையும் ஒன்று என்று புரிந்து கொள்வது அபாயகரமானது.

ஐ.பி.எஸ்-ஐ அரசோ ஐ.ஏ.எஸ்-ஸோ திருத்த முடியுமா?

இந்த திரைப்படம் போலிசு எனும் அடியாட்படையை இந்த அரசமைப்பு எப்படி கையாள்கிறது என்பதைப் பேசவில்லை. மாறாக இந்த அரசமைப்பு அளித்த அதிகாரத்தை காவல் துறை எவ்வளவு கேடாக பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மட்டும் காட்டுகிறது.

sagayam-ias

போலீசை திருத்த வேண்டுமென்று சொல்லும் சகாயம் அவர்களின் ஐ.ஏ.எஸ் துறையை யார் திருத்துவது?

அதனால்தான் அதிகாரி சகாயம், போலிசின் அதிகாரத்தை குறைத்து சீர்திருத்தும் சட்டம் வேண்டும் என்கிறார். பத்திரிகையாளர் அரவிந்தனோ சரியான சட்டத்தை நேர்மையாக அமல்படுத்தும் மனசாட்சி வேண்டும் என்கிறார்.

இந்தக் காவல் துறையே மக்களை சட்டபூர்வமாகவும் சில நேரங்களில் சட்ட விரோதமாகவும் ஒடுக்குவதற்காகவே, எலும்புத் துண்டு போட்டு வளர்க்கப்படும்வெறி பிடித்த மிருகம் என்கிறோம். இந்த அமைப்பின் சட்ட திட்டங்களே அதுதான் என்பதை மறந்து விட்டு வெறுமனே மனசாட்சி போன்ற ‘ஒழுக்க’ உணர்ச்சிகளில் மிதந்து கொண்டு பேசுவது, மிருகத்தை கட்டி வைத்து வளர்க்கும் பெரு மிருகமான அரசு அமைப்பை தாலாட்டுவதாகும்.

தந்தி டி.வி விவாதத்தில் தனக்கு சட்டதிட்டமெல்லாம் தெரியாது, ஆனால் சகாயம் அவர்கள் தார்மீக ரீதியாக இந்த அமைப்பில் இருந்து கொண்டே அதை விமரிசிப்பது தவறல்ல என்று வெற்றி மாறன் கூறியிருந்தார். இந்தக் கூற்றே தார்மீக ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் தவறு. முதலில் சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ்-களின் வேலை என்ன? போலிசு எனும் தடியை கையில் வைத்துக் கொண்டு மாவட்டம் தோறும் அல்லது துறை தோறும் கேட்பார் கேள்வியின்றி ஆட்சி நடத்தும் குறுநில மன்னர்களே கலெக்டர்கள் அல்லது துறைச் செயலாளர்கள்.

போலிசு அடித்தால், கொலை செய்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்து நீதி கேட்கலாம் என்பது திருப்பதிக்கு மொட்டை அடிப்பதை விட கேலிக்கூத்தானது. இந்திய அரசு, மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்களின் சட்டங்கள், கொள்கைகளை அமல்படுத்தும் நிர்வாக குவி மையங்களே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை கொண்டு வருவதோ, திருவண்ணாமலையில் ஜின்டாலை நிர்மாணிப்பதோ, கோவை வட்டாரத்தில் கெயில் குழாய் பதிக்க பாதுகாப்பு கொடுப்பதோ இவர்கள்தான். இவை மட்டுமே இவர்களின் கடமைகள்.

ஒருக்கால் சகாயம் இவற்றை எதிர்த்து தனது மாவட்டத்தில் மக்களது கோரிக்கையை ஏற்று இந்திய அரசை மறுக்க முடியுமா? அப்படி நிகழ்ந்தால் உடனே அவர் பதவிப் பிரமாணத்திற்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக சதி என்று கைது செய்யப்பட்டு மீள வழியின்றி சிறையில் அடைக்கப்படுவார். ஆனால் அதே சகாயம் விசாரணை திரைப்படத்தைப் பார்த்து போலிசை சீர்திருத்தம் செய்யக் கோருவது அரசால் அனுமதிக்கப்பட்ட கருத்துதான். தான் வளர்த்த மிருகம் வெறியேறி அலையும் போது அது வெறியை தணிக்கிறோம் என்று நரித்தனமாக காட்டுவதற்கான ஏற்பாடே போலிசை சீர்திருத்துகிறோம் என்பது.

காவல் நிலையங்களில் சி.சி.டி.விக்கள், கைது செய்யும் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், பெண்களை கைது செய்யும் போது நிபந்தனைகள், பதவி ஏற்றம் பெற்று வரும் காட்டுமிராண்டி ஐ.பி.எஸ்-ஐ விட மேட்டுக்குடியிலிருந்து நேரடியாக பயிற்சி பெற்று வரும் நாகரீக ஐ.பி.எஸ் எல்லாம் மேற்படி நாடகத்தின் காட்சிகள்தான். அதைத்தான் சகாயம் கோருகிறார். இது கூட தெரியாமல் தந்தி.டி.வியில் பாண்டேக்களும் மாலன்களும் ஆத்திரப்படுகிறார்கள்.

முத்துவேல் நல்ல போலீசு என்றால் கெட்ட போலீசு யார்?

Visaranai“எந்த அமைப்பும் ஒரு தனிநபரை விட சக்தி வாய்ந்தவை, தனிநபரை அழுத்துபவை, திரைப்படத்தில் அப்படி முத்துவேல் எனும் இன்ஸ்பெக்டரின் நெருக்கடியை அனைவரும் உணர முடியும், இந்த கதையிலும் நல்ல போலிசுக்காரர்களை காட்டியிருக்கிறேன்” என்று விவாதத்தில் இயக்குநர் கூறியதை பார்க்கலாம்.

முத்துவேலாக வரும் சமுத்திரக் கனி ஒரு நல்ல அதிகாரி என்று பார்வையாளர்கள் இரண்டு முறை உணர்கிறார்கள். முதல் கதையில் தமிழ் இளைஞர்களை நீதிமன்றத்தில் காப்பாற்றுகிறார். இரண்டாம் கதையில் அவர்களை கொல்லாமல் எச்சரித்து விரட்டி விடலாம் என்று மேலதிகாரிகளிடம் பேசுகிறார். இறுதிக் காட்சியில் அவர் சக போலிசுக்காரர்களால் கொல்லப்படுவது காட்டப்படவில்லை என்றாலும் தியாகியாகவே மறைகிறார்.

இதைத் தவிர முதல் கதையில் அடிபட்ட இளைஞர்களுக்கு செல்பேசி கொடுத்து பேசச் சொல்லும் இளம் பெண் போலிசு வருகிறார். இவைதான் வெற்றிமாறன் சொன்ன நல்ல போலிசுக்காரர்கள் அல்லது அமைப்பு அழுத்தம் கொடுத்த நல்ல உள்ளங்கள்.

முதலில் சமுத்திரக்கனி ஆந்திரத்துக்கு அதிகாரப்பூர்வமாக செல்லவில்லை. தனது போலீசு படையோடு சட்ட விரோதமாக ஆடிட்டரை கடத்த வருகிறார். ஒரு வாய்ப்பில் அது நடக்கவில்லை என்றாலும் தனது எஸ்.பியோடு பேசி குண்டூர் மாவட்ட எஸ்.பி அவரது ஐ.பி.எஸ் பயிற்சி தோழன் என்பதால் இன்னமும் கடத்த வாய்ப்பிருக்கிறது என்கிறார். பிறகு தமிழ் இளைஞர்களை கேடாக பயன்படுத்தி கடத்துகிறார். கடத்தலுக்கு உதவியவர்களை விடுவிக்காமல் காவல் நிலையத்தை சுத்தம் செய்யச் சொல்லி ‘ஜனநாயக’ முறையில் கேட்கிறார். ஆடிட்டரை அடித்து விசாரிக்குமாறு எஸ்.பி கேட்கும் போது தட்டாமல் தட்டவும் செய்கிறார். இத்தனைக்குப் பிறகும் இவர் நல்லவர் என்றால் யார்தான் கெட்டவர்?

ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் பொதுப்புத்தியின் இலக்கணப்படி பல்வேறு துறைகளில் நல்லவர்கள் எனப்படுபவர்கள் இப்படித்தான் அறியப்படுகிறார்கள். அண்ணன் கொலை, கொள்ளைன்னு போனாலும் தண்ணி – பொண்ணுங்களை தொடமாட்டார், அய்யா காசு வாங்குனாலும் கண்டிப்பாக செய்வாரு – ஏமாத்த மாட்டாரு, இந்த தலைவரு நிறைய சம்பாதிச்சாலும் கேட்டு வந்தா மனசு நிறைய அள்ளிக் கொடுப்பாரு, ராமாவரம் தோட்டத்துக்கு போனா யாரும் சாப்பிடாம திரும்ப முடியாது என்று இந்த இலக்கணங்கள் தோற்றுவித்திருக்கும் விதிப்படி சமுத்திரக்கனியையாவது நல்லவராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

முத்துவேல் எனும் காரியவாதி போலிசை நல்லவராக ஏற்பதற்கு காரணம் பார்வையாளர்களிடத்திலும் இத்தகைய காரியவாதமே இலட்சியவாதமாக நிலைபெற்றிருக்கிறது.

ஆகவேதான் மீண்டும் சொல்கிறோம். ஒரு அமைப்பு முறையை அடிப்படையில் ஏற்றுக் கொண்டு மீறாமல் சிந்திக்கும் போது மட்டுமே இத்தகைய கொஞ்சமாவது நல்லவர்களல்லாம் முழு நல்லவர்களாக திரிக்க முடியும். உண்மையில் ஒரு அமைப்பு முறையின் கேடுகளை அறிபவன் முடிந்தால் அதை பகிரங்கமாக எதிர்த்து வெளியேறுவான். எதிர்க்க முடியவில்லை என்றால் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்வான். மோடிதான் இனப்படுகொலையின் சூத்திரதாரி என்று குற்றம் சாட்டிய குஜராத்தின் சஞ்சீவ் பட் காவல் துறையில் இருந்து வெளியேறினார். வியட்நாமிலும், ஈராக்கிலும் பணியாற்றிய அமெரிக்க வீரர்கள் பலர் தற்கொலை செய்திருக்கின்றனர்.

பத்திரிகையாளர் அரவிந்தன் மட்டுமல்ல,ஆனந்த விகடனும் “காவல் துறையின் மனசாட்சியை குறுக்கு ‘விசாரணை’ செய்யும் தமிழ்visaranai-review-1 சினிமாவின் பெருமிதப் படைப்பு” என்கிறது. எனில் நமது காவல் அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு தற்கொலை செய்ய வேண்டும் இல்லையேல் ராஜினாமா செய்து விட்டு போராட வேண்டும். அப்படி போராடியவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்காக மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், நக்சல்பாரிகளை ஒடுக்கிய போலிசைக் கூட ‘பொன்மனச் செம்மல்’ விட்டு வைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் சங்கம் உருவானதைத் தொடர்ந்து தமிழக போலிசாரும் (கீழ்நிலை போலிசு) நைனார்தாஸ், ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். அதை தடை செய்து, மத்திய ரிசர்வ் படையை வைத்து வேட்டையாடி இறுதியில் சங்கத் தலைவர்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு மனநோயாளிகளாக மாற்றப்பட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்ற பதிவு கூட இங்கே கிடையாது. அரசு எந்திரத்தின் போலீசு, அதில் தமிழக போலீசு, கீழ் நிலை போலிசு என்று ஒரு பிரிவினர் சங்கம் அமைத்து போராடினாலும் மத்திய போலீசு ஒடுக்குவதற்கு வரும். இராணுவத்தில் கலகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். அதிகபட்சம் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தாண்டி வேறு எதிர்ப்புகள் இங்கே சாத்தியமில்லை.

அவர்களது சுயமரியாதைக் கூட கோர முடியாத நிலையில் வைத்திருப்பதனால்தான் போலிசுத் துறையை மிருகங்களைப் போல பராமரிக்க முடிகிறது. அரச வன்முறை – பயங்கரவாதத்திற்குகாக எலும்பு போட்டு வளர்க்கப்படும் அந்த மிருகத்தின் குற்றங்கள் மிருகங்களுடையது மட்டுமல்ல, முதன்மையாக வளர்ப்பவர்களுடையவை.

கோட்டா போலிசு கொல்ல மாட்டாரா?

pachayappa-students-rsyf-1

பு.மா.இ.மு டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்திற்காக பச்சையப்பா மாணவர்களை அடித்து நொறுக்கும் போலிசு!

ரு திரைப்படத்தில் வரும் சில குறியீடுகள், வசனங்களை வைத்து மட்டும் சினிமாக்களில் காண வாய்ப்பில்லாத அரசியல் முற்போக்கு கருத்துக்களை தேடுவதை என்ன சொல்ல? “படத்துக்கு எந்த விதத்திலும் பொருந்தாமல் விட்டெறியப்படும் இதுபோன்ற முற்போக்கு மிட்டாய்களைத்தான் பலரும் சப்பிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று விசாரணை குறித்த விமரிசனத்தில் அழகாக எழுதுகிறார்பாபு ஜான்ராஜ். அப்படி ஒரு மிட்டாய்தான் “அட..சும்மா இருங்க சார், கோட்டாவுல உள்ள வந்துட்டு… சிஸ்டம் தெரியாம பேசிட்டு…”

பார்ப்பன மேல் நிலை ஆதிக்க சாதிகளிடமிருந்து வரும் நேரடி ஐ.பி.எஸ்-கள் மற்ற இடைநிலைச் சாதிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரை அறிவற்றவர்கள் என்று திட்டுவது, கேலி செய்வது இந்தியா முழுவுதும் உள்ள நிலை. இங்கு அவர்களின் வில்லத்தனத்தை சுட்டும் வகையில் நேர்மறையாக பேசப்படுகிறது. வருணாசிரம அமைப்பின் விதிகளை அறிந்தவர்கள் சமூகத்தில் நிகழ்த்தும் அநீதிகளை கடமை என்று புரிந்து கொள்வது போல இங்கும் போலீசு அமைப்பின் விதிகளை புரிந்து கொள்பவர்களுக்கு தயக்கமோ தாமதமோ இருக்காதாம். எதார்த்தத்திலோ நாங்களும் அறிவானவர்கள்தான் என்றே ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து வருபவர்கள் தங்களை பார்ப்பனமயமாக்கி கொள்கிறார்கள். மறுபுறம் இதுவே போலிசு துறை எனும் போது இடை நிலை ஆதிக்கசாதிகளைச் சேர்ந்தோரே கயர்லாஞ்சியிலோ இல்லை பரமக்குடியிலோ தாழ்த்தப்பட்டோரை கொல்வதற்கும் சுடுவதற்கும் காரணமாகிறார்கள். இளவரசன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு இடைநிலை ஆதிக்க சாதி வெறி அதிகார, போலிஸ் மட்டத்திலும் இருப்பது முக்கியமான காரணமில்லையா? யுவராஜின தெனாவெட்டிற்கும் அது அடிப்படையில்லையா?

ஒடுக்கப்படும் சாதியிலிருந்து வரும் ஒரு போலிசுக்காரர் ஒடுக்கப்படும் மக்களுக்காக பணியாற்றுவார் என்பது வடிகட்டிய பொய்! மக்களை ஒடுக்குவதற்காக பராமரிக்கப்படும் போலிஸ் துறையில் தலித்துக்களோ, இடைநிலைச்சாதிகளோ போதிய பிரதிநிதித்தவும் பெற்று விட்டால் அந்த துறை சமூகநீதியுடன் செயல்படும் என்பது தோற்றுப்போன சமூகநீதி அரசியல் மற்றும் தலித் அரசியல் வைத்திருக்கும் காரியவாதமே! இதன் மூலம் இந்த அமைப்பு முறையின் வன்முறையை மறைப்பதற்கே இந்த அடையாள அரசியல் பயன்படுகிறது.

நவீனமயமாகும் போலிசு வன்முறை!

டிதடி பஞ்சாயத்து ரவுடிகளெல்லாம இன்று கோட் சூட்டு போட்ட கல்வி வள்ளல்களாகவும், ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் கோடிகளை சுருட்டும் காலத்தில், போலிசும் பழைய பாணியிலான அடிதடிகளை நம்பி தனது வன்முறைகளை செய்வதில்லை. ஆம் அவர்களது வன்முறைகள் முன்னிலும் அதிகமானாலும் நவீனமயமாகி வருகின்றன.

kisanji-3

மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்தோழர் கிஷன்ஜி போலீஸ் மிருகங்களால் கொடூரமாக கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி!

இன்றைய தெலுங்கானா பிராந்தியத்தில் அன்று செல்வாக்குடன் இருந்த மாவோயிஸ்ட் கட்சியினரை ஆந்திர போலிசு எப்படி முடக்கியது? முதலில் மாவோயிஸ்ட்டுகளுக்கு உணவு கொடுத்தோர், இடம் கொடுத்தோர் என்று மக்களை வகை தொகையில்லாமல் அடித்து நொறுக்கியதோடு கொன்று குவித்தது. பிறகு மக்கள் மீதான வன்முறைகளை நிறுத்தி அவர்களுக்கு நலத்திட்டங்கள் என்ற பெயரில் சில பம்மாத்துக்களை செய்து, கிராமம் தோறும் ஆள்காட்டிகளை உருவாக்கி மாவோயிஸ்ட்டுகளின் கொரில்லாக் குழுக்களை அவர்கள் இருக்குமிடத்திலேயே தேடிச் சென்று அழித்தது. இப்படித்தான் போலிசு வன்முறை நவீனமயமாகி வருகிறது. அதே நேரம் அதிகரித்து வரும் உலகளாவிய பொருளாதார மற்றும் ஆளும் வர்க்க நெருக்கடிகள் போலிசுக்கு மேலும் மேலும் அதிக அதிகாரத்தையும், அடக்குமுறைக் கருவிகளையும் கோருகின்றன.

‘விசாரணை’யின் தாக்கம் என்ன?

போலிசின் உருவாக்கம், பயிற்சி, வன்முறை, நடத்தை அனைத்தும் இந்த அமைப்பே திட்டமிட்டு உருவாக்குகிறது. அதனாலேயே அவர்களது வன்முறையை சட்டத்திலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது. அதனால்தான் போலிசார் லஞ்சம் வாங்குவதிலிருந்து, தலைகளை கொய்வது வரை அச்சமின்றி செய்கின்றனர்.

அந்த அச்சத்தைத்தான் தி இந்து அரவிந்தன் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“அமைப்பின் இந்தக் குரூரமான விளையாட்டில் யார் வேண்டுமானாலும் பலியாகலாம் என்பதையும் காட்டுகிறார் (இயக்குநர்). உதிரிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இருக்கிறது என்பதுதான். ஆனால், முழுமையான பாதுகாப்பு யாருக்குமே இல்லை என்பதைப் பார்வையாளர்களின் முதுகுத் தண்டு சில்லிடும் விதத்தில் காட்டிவிடுகிறார்.”

விசாரணை திரைப்படம் உருவாக்கும் மிகத் தவறான கருத்து இதுவே. இந்த அமைப்பில் ஏழைகள், தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு
visaranai-review-7இல்லை, பணக்காரர்கள், முதலாளிகளுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை என்று போலிசு வன்முறையை சமப்படுத்தும் இந்த சிந்தனைதான் அபாயகரமானது. கீதையில் கண்ணன் படிமங்களாக கூறும் காலையும் நானே, மாலையும் நானே, கடமையும் நானே, குற்றமும் நானே, தண்டனையும் நானே, தீர்ப்பும் நானே, எல்லாம் நானே என்று பேசுவது வெறும் பம்மாத்து மட்டும அல்ல.

டி.வி.எஸ் ஆலை பேருந்து நிறுத்தத்தில் “கடமையைச் செய், பலனை எதிர்பாரதே” என்று கீதைக்கு விளம்பரம் கொடுக்கும் நோக்கில் தொழிலாளிகளின் போனஸ் உரிமையை ஆன்மீகத்தின் பெயரில் ஆசை என்பதாக விட்டொழிக்குமாறு அடக்குகிறாரே ஐயங்கார் அதுதான் கீதை இந்த நாட்டில் இன்றும் நீடித்திருப்பதற்கான காரணம். இலாபம் சரியானதாகவும், போனஸ் தவறானதாகவும் கருதுகிற முதலாளி, கீதையை எல்லோருக்குமான நீதியாக பரிந்துரைக்கலாம். ஆனால் ஒரு தொழிலாளிக்கு அது எல்லா விதத்திலும் அநிதீயாகவே இருக்கும்.

போலிசு ராஜ்ஜியத்தில் ஜனநாயகம் இருக்குமா?

ரசு என்பது எப்படி பொதுவானது அல்லவோ அது போலவே அது ஊட்டி வளர்க்கும் போலிசும் பொதுவானது அல்ல. இன்றைய அரசு முதலாளிகளுக்கானது என்றால் போலிசும் அவர்களுக்கானதே. தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை இருப்பதை வைத்து இது எல்லாருக்குமான ஜனநாயகம்தானே என்று கேட்கலாம். இந்த ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துகின்ற வேறு ஒரு முக்கியமான உரிமை ஒன்று உண்டு. அதுதான் சொத்துக்களை சேர்க்கும், அதிகரிக்கும், சம்பாதிக்கும் உரிமை. இந்த உரிமை இருக்கும் போது மற்ற உரிமைகள் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனெனில் மனிதர்களுக்கிடையில் சொத்துரிமை வைத்து உருவாகும் ஏற்றத்தாழ்வு கண்டிப்பாக சமத்துவ உரிமைக்கு எதிராகவே இருக்க முடியும்.

இப்படி இல்லாதவர்களும், இருப்பவர்களும் வர்க்கங்களாக பிரிந்திருப்பதாலேயே வரலாற்றில் அவர்களுக்கென்று ஒரு நடுநிலை நாட்டாமையாக காட்டிக் கொள்ள அரசு தோற்றுவிக்கப்படுகிறது. அதற்கான அதிகாரத்தையும் ஆயுதப் படைகளையும் கொண்டிருப்பதை விதிமுறைப்படி நியாயப்படுத்துகிறது. இப்படித்தான் இந்த நாட்டின் ஆயுதப் படைகளும் அதன் அங்கமான போலிசும் அம்பானி, அதானி, டாடாக்களின் 24 X 7 செக்யூரிட்டி சர்வீஸ் என்கிறோம்.

நேர்மாறாக போலிசை ஏதோஅனைவருக்குமான வில்லன்களாக சித்தரிப்பதோ, உள்வாங்குவதோ படத்தில் வரும் பாண்டி நண்பர் குழாமிற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. ஒருக்கால் போலிஸ் அவர்களை நையப்புடைப்பதற்கான பலமே போலிஸ் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று என்ற அங்கீகாரமே. அந்த அங்கீகாரத்தை இந்த அமைப்பும் அரசியல் சட்டமும் கொடுக்கலாம், நாம் கொடுக்கலாமா?

கொல்லப்படும் தணிக்கையளார் தன்னை அடிக்கும் போலிசிடம் கூறுவதாக ஒரு வசனம் வரும். “என்ன தூக்க உன்ன அனுப்புன மாறி நாளைக்கு உன்ன தூக்க வேறு ஒருத்தன் வருவான்”. இது போலிசின் வன்முறையை கொஞ்சம் ‘தத்துவ’ நிலைக்கு கொண்டு செல்லும் அபத்தம். அதாவது கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் போல.

இந்தப் பழுதுப் பார்வையே இந்தப் படத்தை போலீசு மீதான அர்த்தமற்ற காரணமே இல்லாத பயமாக பார்ப்போரிடம் இறங்குகிறது. அதற்காக போலிசை வெட்டி வீழ்த்தும் நாயகத்தனம் படத்தில் இல்லை என்பதல்ல நமது விமரிசனம்.

சில வருடங்களுக்கு முன்னர் போராட்டம் ஒன்றிற்காக சுவரொட்டி ஒட்டிய மூன்று தோழர்களை கைது செய்து காவல் நிலையத்தில் ஓரிரவு தங்க வைத்தது சென்னை வடபழனி போலிசு. சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட சுதந்திரம் கிடையாதா என்று ஒரு தோழர் கேட்டதால் போலிசிடம் அடிபட்டார். அடிபட்டாலும் மீண்டும் முழங்கியதால் அடி கூடியது. அடுத்த நாள் காலையில் காலஞ் சென்ற தோழர் சீனிவாசன் அவர்களை மீட்டு வந்தார். அடி பட்ட புதிய தோழர் அடித்த போலிசை எதாவது பழிவாங்க வேண்டும் – சட்டப்படியே வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் – என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்.

புரட்சிகர அமைப்புகளில் சேருவோருக்கு கைது நடவடிக்கைகள் புதிதல்ல. ஆனால் அடிக்கும் ஒரு போலிசை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்ற அந்த உணர்ச்சி, பிறகு இது ஒரு போலிசால் நடப்பதல்ல, போலிஜனநாயகத்தின் விளைவு என்று ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக முதிர்ந்து தனது பழிவாங்கலை அரசியல் ரீதியில் மக்களை திரட்டுவதாக கனிகிறது.

ஆகவே எங்கள் அரசியல் செயல்பாடுகளில் நாங்களும் போலிசை வீழ்த்தும் நாயகர்கள் அல்ல. அது சாத்தியமும் அல்ல. ஆனால் இந்த போலீசும் போலி ஜனநாயகமும் ஏன் வீழ்த்தப்பட வேண்டும், அதற்காக எப்படி மக்கள் திரட்டப்பட வேண்டும் என்பதறிவோம்.

விசாரணைத் திரைப்படமோ போலிசு எனப்படுவர்கள் இந்த உலகில் எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்கள், கொடூரமானவர்கள் என்று சித்தரித்து விட்டு இந்த காக்கி கிரிமினல்களை வைத்து இயக்கும் போலி ஜனநாயக அமைப்பின் கொடூரத்தை மறைக்கிறது. அல்லது பேச மறுக்கிறது.

William-Booth-c1900

இரட்சணிய சேனையை ஆரம்பித்த வில்லியம் பூத்!

அமைப்பின் நெருக்கடிக்கு தீர்வு புரட்சியா, சீர்திருத்தமா?

கவேதான் தி இந்து அரவிந்தன், காவல் துறை அதிகாரிகளின் மனசாட்சியை, இந்தத் திரைப்படம் தொட்டு எழுப்புமா என்று ஏங்குகிறார். இந்த ஏங்குதலும் பிரார்த்தனையும் வரலாறு நெடுகிலும் ஏராளமாய் தினுசு தினுசாய் இறைந்து கிடக்கின்றன.

Salvation Army எனப்படும் இரட்சனிய சேனை(கிறித்தவ மதத்தின் தொண்டு நிறுவனம்)-யின் நிறுவனர் வில்லியம் பூத்தும், கம்யூனிசத்தின் பேராசானாகிய காரல் மார்க்ஸும் 1849-ம் ஆண்டு வாக்கில்தான் இலண்டனுக்கு வந்தனர். ஒரு வட்டிக் கடையில் உதவியாளராக பணிபுரிந்த பூத், கடைக்கு வரும் ஏழைகளின் துயரக் கதைகளை தினசரி பார்க்கிறார். காரல் மார்க்ஸோ தனது குழந்தைகளின் துணிகளைக் கூட அடகு வைத்து ரொட்டியும், உருளைக் கிழங்குகளை வாங்கி குடும்பத்தின் பசி போக்கியவர். அந்த வகையில் ஏழ்மையை வாழ்ந்து அனுபவித்தவர்.

இந்த ஏழ்மைக்கு காரணம் மனிதனின் சித்தமல்ல, மதமும் அல்ல, அவன் கூட்டமாய் வாழும் சமூகத்தின் அமைப்பு முறையே, அந்த முதலாளித்துவ முறைதான் ஏழ்மையை சுரண்டல் மூலம் தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கிறது என்று மார்க்சியத்தின் தேவையை கண்டு சொன்னார் மார்க்ஸ். பிறகு மார்க்ஸ் மற்றும்

காரல் மார்க்ஸ்

காரல் மார்க்ஸ்

ஏங்கெல்ஸ்சின் தத்துவம் தொழிலாளி வர்க்கத்தைப் பற்றிக் கொண்டு இந்த உலகில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது. ஏழ்மைக்கு காரணம் மனிதனின் சித்தமே, தயாள குணம் குன்றிப் போனதே, அதை மதத்தின் மூலம் மீட்டெடுக்க ஏழைகளுக்கு நேரடியாக உதவேண்டும் என்று இரட்சணிய சேனையை ஆரம்பித்தார் பூத்.

ஒருவர் போராடக் கூறினார். மற்றொருவர் இரக்கத்தைக் கோரினார். ஒருவர் பகத் சிங், மற்றொருவர் காந்தி. அவர் நக்சலைட், இவர் வினோபாவே.

இன்று இலண்டன் கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு மத்தியில் அல்ட்ரா மாடர்னாக இருக்கும் இரட்சணிய சேனை அலுவலகமும், தொழிலாளிகளின் குடியிருப்பில் மார்க்சிய லெனினியக் குழுக்களின் அலுவலகங்களும் அந்தந்த பாரம்பரியங்களை பின் தொடர்கின்றன.

அமைப்பு முறையை சீர்திருத்தும் முயற்சிகளும், தூக்கி எறியும் முயற்சிகளும் இன்றும் தொடர்கின்றன. நாம் காவல் துறையின் மனசாட்சியை நோக்கி இரக்கத்தை கேட்க போகிறோமா, அதை இன்னமும் தூக்கி எறியாமல் சகித்துக் கொண்டிருக்கம் மக்களின் மனசாட்சியை உலுக்கப் போகிறோமா?

இதுதான் சரியான விசாரணை.

நன்றி. வினவு இணையதளம்.

Related Images: