சில படங்கள், அடுத்த சில வாரங்கள் வரை நம்மை சொல்லவொண்ணா துயரத்துக்கு ஆளாக்கும். மறு கருத்து எதற்கும் இடமின்றி ‘ஆகம்’ அவ்வகை படமே ஆகும். இப்ப விமர்சனம் எழுதும்போதுகூட டைரக்டரை நினைத்து விம்முது தேகம்.

முதல்ல கதைக்கு போவோம்.

இந்தியாவுல படிச்சுட்டு திறமையான இளைஞர்கள்லாம் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிட்டா இந்தியா என்னைக்குத்தான் வல்லரசு ஆகுறதுன்னு குட்டி குட்டி மேடைகள்ல வெட்டியா முழங்குற ஹீரோ. ஆனா அவரோட அண்ணனே அமெரிக்கா கிளம்புறாரு. அவரை அனுப்பி வைக்கிறது வெளிநாட்டு கைக்கூலிகளான ஒய்.ஜி.மகேந்திரனும், அவர் பையனும் ரியாஷ்கானும்.

இவங்க ரெண்டுபேரும் தான் படத்தோட வில்லனுக என்பது எவ்வளவு சலிப்பான செய்தியோ, அதைவிட சலிப்பான கதை என்பதால் மீதிக்கதையை எழுதி, பாவம் உங்களையும் கூறு போடவேண்டாம்.

இந்தக்கதையை எட்டு வருடமாக எட்டு எட்டாக வாழ்க்கையைப்பிரித்துக்கொண்டு எழுதினாராம் டைரக்டர் கம் டாக்டருமான விஜய் ஆனந்த் ஸ்ரீராம். டைட்டில் கார்டில் பெயர் போடும்போதே கதை,திரைக்கதை,எட்டுவருட ஆராய்ச்சி, உன் கதை இத்தோட முடிஞ்சாச்சி என்றுதான் போடுகிறார்.

சரி நாட்டுக்கு ஆதரவாக ஒரு கருத்து சொல்கிறார். அதை மனசு வெறுத்துப்போகிற அளவுக்கு சொல்லிவிட்டார் பாவம் என்று ஒதுக்கி விடமுடியாத அளவுக்கு, இந்த கருத்து படத்திலும் கண்ணும் கருத்துமாக மூன்று பார் பாடல்கள் வைத்து, வெளிநாட்டுக்காரிகளை அரைகுறைக்கும் இன்னும் குறைவாகக் காட்டி, மறைமுகமாக அந்நிய மோகத்தைத்தூண்டுகிறார்.

படத்தின் நாயகன் இர்பான். இதற்கு முந்தைய இவரது படங்களைப் பார்த்தபோது இந்தத் தம்பி இண்டஸ்ட்ரியில கொஞ்ச காலத்துக்கு இருப்பான் என்கிற நம்பிக்கையாவது இருந்தது.

படத்தின் இடைவேளை முடிந்து மீண்டும் அமரும்போது, நாமும் நடிகர் ஜெயபிரகாஷ் போலவே கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிடுவதால் இசை,படத்தொகுப்பு, ஒளிப்பதிவு சமாச்சாரங்கள் குறித்து எதுவும் மூளைக்குள் ஏறுவதில்லை.

படம் பார்க்கப்போய், எட்டுவருட ஆராய்ச்சியாள டைரக்டரின் புண்ணியத்தில் ஜடமாகித்திரும்புகிறோம்.

Related Images: