கட்டி உருளும் ரித்திக், கங்கனா ரணாவத்

’தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவியுடன் டூயட் பாடிய கங்கனா ரணாவத் தனது முன்னாள் காதலரான ரித்திக் ரோஷனுடன் தொடர்ந்து கட்டு உருண்டு வருகிறார். இவர்களது மோதல்தான் தற்போதைக்கு பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

கங்கனாவும், ரித்திக் ரோஷனும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் பரவின. இதனால் ரித்திக் ரோஷனுக்கும், அவரது மனைவி சூசனுக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் சமீபகாலமாக ரித்திக் ரோஷன், கங்கனா இடையே சுமுக உறவு இல்லை. காதலில் பிளவு ஏற்பட்டது. கங்கனா ரணாவத் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ரித்திக் ரோஷன் பேசி வருவதாக தகவல்கள் வந்தன. சமூக வலைத்தளங்களிலும் இதனை அவர் பரப்பி வருவதாக பேசப்பட்டது.

இது கங்கனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ‘எனது முன்னாள் காதலர் ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார். என்று கேள்வி விடுத்தார். இது ரித்திக் ரோஷனை கோபப்படுத்தியது. கங்கனாவுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார்.

அதில், ‘கங்கனாவின் பேட்டி எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் இருவரும் காதலித்ததுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு ஏன் கங்கனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரக்கூடாது?’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து கங்கனாவும் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். ‘நான் உங்களைத்தான் சொன்னேன் என்று நீங்கள் எப்படி நினைக்கலாம்’ என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வக்கீல் நோட்டீஸ் சண்டை இந்தி நடிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை இந்த பிரச்சினையில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த ரித்திக் ரோஷன் முதல் தடவையாக தனது பக்கத்தில் உள்ள நியாயத்தை விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

‘‘நான் இதுவரை வாய் மூடி இருந்தேன். ஆனால் எனது கவுரவத்துக்கும், குடும்பத்தினர் கவுரவத்துக்கும் தற்போது பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் எனது பெயரை யாரோ போலியாக பயன்படுத்தி அந்த நடிகைபற்றி தவறான கருத்தை பதிவு செய்து இருந்தனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்.

பிரபலமானவர்களுக்கு தனிப்பட்ட சொந்த விஷயங்கள் இருக்கிறது. அது பொதுவான விவாதத்துக்கு வரும்போது சர்ச்சையாகி விடுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று ஒருவரை பார்த்து சொல்வது எவ்வளவு மோசமான விஷயம் என்பது எனக்கு தெரியும் அலட்சியமாக ஒருவரை பார்த்து மனநோயாளி என்று இழிவுபடுத்தி பேசக்கூடிய நபர் நான் இல்லை. எல்லோரையும் மதிப்பவன். தற்போது எனது கவுரவத்தை பாதுகாக்க அந்த நடிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். சட்டப்படி இதனை அணுகுவேன்’’.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.