’படங்கள் இயக்குவது ஒருபுறம் இருந்தாலும், இனி பிற இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்கிறார் களஞ்சியம்

இயக்குனர் மு.களஞ்சியம் பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம்காட்டு, மிட்டாமிராசு, கருங்காலி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.

கருங்காலி படத்தில் நடிகை அஞ்சலியோடு இணைந்து எதிர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இயக்குனர் ஷங்கர், கே.வி.ஆனந்த் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணகுமாரின் ‘களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுத் துறை அதிகாரியாக நடித்தார்.

அடுத்ததாக கதிரவன் என்கிற புதிய இயக்குனரின் ‘கோடைமழை’ என்கிற படத்தில் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ளார்.

கோடை மழை ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கோடைமழை  படத்தில் மு.களஞ்சியம் வெள்ளத்துரை என்கிற கதாபாத்திரத்தில், நடிகை பிரியாங்காவின்  அண்ணனாக வாழ்ந்திருக்கிறார்…

கம்பீரமான தோற்றமும், முறைப்பான நடை, உடை, பாவனையும் வெள்ளத்துரை கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.

படம் பார்த்த அனைவரும் மு.களஞ்சியத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள்.  இதைத்தொடர்ந்து அவருக்கு நடிகராக படங்கள் குவிய ஆரம்பித்துள்ளன.

கோடைமழை படத்தை பிரத்தியேகமாக பார்த்த நடிகர் விஜய் சேதுபதி “தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகச்சிறந்த நடிகன் கிடைத்துள்ளார், இயக்குனர் மு,களஞ்சியத்திற்கு போலிஸ் கெட்-அப் சரியாக பொருந்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்துக்காரனாவே மாறி வாழ்ந்திருக்கிறார்’’ என்று மனம் விட்டு பாராட்டினார்.

கோடை மழை திரைபடத்தை தொடர்ந்து மு.களஞ்சியம் ‘முந்திரிக்காடு’ என்கிற, புது முகங்கள் நடிக்கிற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடித்த பகுதிகள் முக்கால் வாசி முடிக்கப்பட்டு, மீதிப்பகுதிகளை முடிக்கக் காத்திருக்கிறார்.

‘அரசியல் ரீதியாக சீமானுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு நடிகராக எனக்கு சீமான் மிகச்சிறந்த ஒத்துழைப்பைத் தந்தார். தேர்தல் முடிந்ததும் அவர் பகுதிக்கான படப்பிடிப்பு தொடங்கும்’ என்கிறார் களஞ்சியம்.

Related Images: