‘மீன் குழம்பு சாப்பிடுவதற்காகவே ஷூட்டிங் வந்த கமல்’

நடிகர் பிரபு வீட்டில் சமைக்கப்பட்ட மீன் குழம்பை ஒரு பிடி பிடிப்பதற்காகவே இன்று கமல் ஒரு படப்பிடிப்பில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க கலந்துகொண்டார்.

இஷான் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமரர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமார் மகனுமான துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அவரது மனைவி அபிராமி துஷ்யந்த் தயாரிக்கும் படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

பிரபு, நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். கமல்ஹாசன், பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் இணைந்து நடிக்கும் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டு வருகின்றன.

தனது கவுரவ தோற்றக் காட்சிகளில் நடிக்க இன்று ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்திருக்கும் கமலை கவுரவிக்க மண்பானையில் சமைக்கப்பட்ட உணவை வழங்கினார்களாம்.

இப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அமுதேஷ்வர் இயக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஜே.லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும், கலையை எம்.பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை எஸ்.ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை ஆர்.எஸ்.சிவாஜியும் கவனிக்கிறார்கள். ஊடகத் தொடர்பு – டைமண்ட் பாபு.