பேசுவது எழுதுவது என்று எதுவானாலும் மக்களைக் குழப்புவதை எப்போதும் குழப்பமின்றி செய்துவரும் நம்மவர் கமல் சில மாதங்களுக்கு ட்விட்டரில் இணைந்து தொடர்ந்து  ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளோடு ட்விட்டி ஃபாலோயர்களின் எள்ளலுக்கும் எகத்தாளத்துக்கும் ஆளானார். ‘அது என் மிஸ்டேக் அல்ல, கீ போர்ட் டேக்கிக்கொண்டது அப்படித்தான்’ என்று விளக்கம் அடித்தால் தமிழுக்கு அடிவயிறு கலக்கும் அளவுக்கு மீண்டும் சில பல மிஸ்டேக்ஸ்.

இந்நிலையில் இனி திருவாளர் விருமாண்டி அவ்வளவு தீவிரமாக ட்விட்டரில் நடமாடாமல் தமிழ்க்கொலைகளைத் தவிர்க்கப்போகிறார் என்ற ஆறுதல் செய்திகள் வந்திருக்கின்றன.

துவக்கத்தில் பேஸ்புக்கில் தனது தத்தக்கா புத்தக்கா கருத்துக்களைச் சொல்லி வந்த கமல் ஹாஸன், சமீபத்தில்தான் ட்விட்டர் பக்கம் வந்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி தேசிய கீதம் பாடி அவர் தனது ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கினார். கடந்த ஒரு மாதத்தில் அவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர ஆரம்பித்தனர். பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களை கமல் தொடர்ந்து எழுதி வந்தார். ஆனால் தனது கிண்டலர்களைக் காரணமாகச் சொல்லாமல் தற்போது புதிய பட வேலைகள் வந்துவிட்டதால் இனி தொடர்ந்து ட்விட்டரில் எழுத முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ரசிகர்கள் ஒரேயடியாக ஏங்கிப்போய்விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது, அதாவது வெகு சில சமயங்களில் அதாகப்பட்டது அவ்வப்போது ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்த்து தட்டிப்பார்ப்பாராம் கமல்.

Related Images: