தமிழின் ஒரே பெண் எழுத்தாளர் விடை பெற்றார்…

கொற்றவை

வணக்கம் தோழர்களே,

இச்சமூகத்தில் என்னை நான் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்வது என்று வருந்தும் நிலைக்கு இன்று நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். இதுவரை நான் எத்தனையோ விதமான விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அதை துணிவுடன் ஒற்றை ஆளாக நின்றே எதிர்கொண்டும் உள்ளேன். நான் சொன்ன எந்த கருத்திலிருந்தும் – அது என்னுடைய அறிவிற்கும் – சமூக மாற்றத்திற்கும் சரியானதே என்று கருதிய எந்த கருத்திலிருந்தும் நான் பின்வாங்கியதில்லை. ஆனால் விமர்சனம் என்பது வேறு அவதூறு என்பது வேறு. அதிலும் சாதிய மனோபாவம் கொண்டவள் எனும் அவதூறு என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. ஏனென்றால் இந்த முற்போக்கு மற்றும் மார்க்சிய தத்துவார்த்த அறிவு கிடைப்பதற்கு முன்னரே கூட சாதி என்றால் என்னவென்று தெரியாத ஒரு சூழலில்தான் நான் வளர்ந்தேன்.  ஆனால் இன்று, அதாவது நிர்மலா என்ற பெண் கொற்றவையாக மாறிய பின்னர் – இந்த சமூகம் எத்தனை அநீதிகள் நிறைந்ததாக இருக்கிறது எனும் உண்மையை உணர்ந்த பின்னர் மனம் பொறுக்காமல் சமூக மாற்றத்திற்காகப் பங்களிக்க வேண்டும் எனும் உறுதிப்பாட்டோடு எழுதத் தொடங்கினேன். அதன் பின்னர் சில களப்பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.

ஆனால் வன்மம் பிடித்த அடையாள அரசியலின் முன் எதுவும் பயனற்று போய்விட்டது.

இனி கொற்றவையாகிய நான் முகநூலில் மட்டுமின்றி. வேறு எந்தத் தளங்களிலும் எழுதப் போவதில்லை. செயல்படப் போவதில்லை.

என்னுடைய இந்த முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படும் என்பதை நான் அறிவேன். (அதற்கும் சேர்த்து) சொல்ல எதுவுமில்லை என்னிடம்…

என் முடிவு தவறானது, உணர்ச்சிவயப்பட்ட முடிவு என்றெல்லாம் கருதி என் மீது அன்பு கொண்டவர்கள் என்னிடம் ஏதும் பேசவோ, தொடர்புகொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை ஆதரவாக இருந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

வாழ்க போலி தலித் அடையாள அரசியல்!

சாதி… இது தாழ்த்தப்பட்டோரை மட்டும் ஒடுக்குவதில்லை.