கும்பகோணத்து புராணம்… பாடல் பெற்ற தலங்களும் பாவப்பட்ட சனங்களும்!

புராணத்துக் கதை

ரே நாளில் 10 லட்சம் பக்தர்கள் தீர்த்தமாடி, பாவத்தின் ஓவர் லோடில் மகாமக் குளமே காவியாகி விட்டது. கடந்த பத்து நாட்களாக 45 லட்சம் பக்தர்கள், ‘பரம’ சாதுக்கள், நவீன செல்போன் அசரீரியுடன் ஆசி வழங்கிய அகோரிகள், நெய்யால் தொந்தி வளர்த்து பொய்யால் சமயம் வளர்த்து, ஊரான் வீட்டு கையால் கோயில் நிலத்தில் பக்தி வளர்த்து குலநாசம் செய்து சிவன் சொத்து சேர்த்த தகத்தாய மடாதிபதிகள், முற்றும் துறந்த சங்கராச்சாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அடியார்க்கும் அடியார்கள் என கும்பகோணமே குலுங்கிவிட்டதாக பூரிக்கின்றன ஊடகங்கள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட ஒன்பது நதிகளும் பரமசிவனிடத்தில் போய், “மக்கள் கொடிய பாவங்களைச் செய்துவிட்டு எங்களிடத்தில் மூழ்கி, பாவங்களை இறக்கிவிட்டு போய்விடுகிறார்கள், இதைப் போக்கிக் கொள்ள நாங்கள் என்ன செய்வது?” என்று முறையிட, பரிகாரமாக சிவன், “கும்பகோணத்தில் தென்கிழக்கு தீர்த்தமான மகாமக குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மாத மகாமக நாளன்று குளித்தீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்!’’ என்று கூறியதாகவும் எனவே அந்நாளில் போய்க் குளித்தால் சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி புண்ணியம் கிடைக்கும் என்று புராணம் எழுதி வைத்திருக்கிறது. பார்ப்பனீய கட்டுக் கதை இலாகா கம்பெனி.

பசித்த மானிடம் நாவலில்

“ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் குளத்தில் இறங்கி அழுக்கையும், சேறையும் கலக்கி அடக்க முடியாமல் அங்கே சிறுநீரையும் கழித்தால் புண்ணியம் வருமா? காலரா, மலேரியா வருமா?” என்று பெரியார் கேட்டால், நாத்திகர் புண்ணிய தீர்த்தத்தை இழிவுபடுத்துகிறார் என்பவர்கள் அந்த காலத்து மகாமக குளத்து யோக்கியதையை எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு தனது “பசித்த மானிடம்’’ என்ற நாவலில் கணேசன் என்ற கதாபாத்திரத்தின் நனவோடையாக இப்படி காட்டியிருப்பார். “இவன் நாற்பது வருசங்களுக்கு முன் பார்த்த குளம் இல்லை அது. பச்சைப் பசேலென்று பாசி பிடித்துக் கிடக்கும் முன்பெல்லாம். படிகளெல்லாம் வழுக்கும். காற்றில் பாசியும் அழுக்கும் ஒரு புறமாய் ஒதுங்கி அந்த மூலையிலிருந்து குடலைக் குழப்பும். நாற்றம் வீசும். படித்துறைகளில் எல்லாம் சாயம் தோய்த்த நூல் கத்தைகளைக் கயிறுகள் கட்டிக் காய வைத்திருப்பார்கள். அந்த நாற்றமும் வீசும். குளக்கரைகளை ஒட்டிப் பாவுகளைப் பெரிய பெரிய கடப்பாரைகளை நட்டு இழுத்துக் கட்டி நூல்களாய் இழையைப் பிரித்துவிட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தத் தொழிலாளர்களில் யானைக்கால் இல்லாத ஒருவரைக் கூடப் பார்க்க முடியாது. அந்த பாவுகளையும் காணவில்லை. தெருவும் சுத்தமாயிருந்தது.’’ பெரியார் பார்வையில் மக்களை பழிபாவத்திற்கு ஆளாக்கிய பார்ப்பனியத்தின் மீதான வெறுப்பு வெளிப்படுகிறது.

கரிச்சான் குஞ்சு பார்வையில் குளக்கரையைப் பயன்படுத்தும் வர்க்கத்தின் மீதான குமட்டலாக முடிந்து விடுகிறது. உண்மையில் உள்ளூர் வழக்கிலான மாமாங்குளத்தின் ‘கீர்த்தி’ தெரிந்து தீர்த்தமாடாத பாவப்பட்ட ஜென்மங்களில் ஒருவன் என்ற முறையில் குளத்தை பெரிதும் அசுத்தப்படுத்த வாய்ப்புள்ளவர்கள் குளக்கரையைச் சுற்றியுள்ள கரிச்சான் குஞ்சுவின் கணேசர்களே என்பதைப் பார்த்திருக்கிறேன். நாலுகட்டு, அஞ்சு கட்டு வீட்டுக்குள் இருந்து கொண்டு நாள் கிழமை என்று கட்டுகட்டாக தலைவாழைகளை கட்டிவிட்டு குளக்கரையில் வீசி எறிவதும், அதில் கும்பகோணத்து பன்றிகள் பாய்ந்து ஏமாறுவதும் குளக்கரையில் சிரார்த்தம், தர்ப்பணம் என்று பிண்டம் வைத்து குப்பை போடுவதுமாக நீர்நிலையை மாசுபடுத்திய போது எச்சிலையைப் போட்டு மாமாங்குளத்தை அசுத்தப்படுத்தாதே என்று நீர் நிலைக்கு குரல் கொடுத்தவர்கள் அந்தக் கால திராவிடர் கழகத்தினர்.

கும்பகோணத்தின் குளங்கள்

திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்துதான் அரசியலே நாசமாப் போச்சு என்ற பார்ப்பன வன்மத்தின் உளவியல்தான், இவாள்’ அசுத்தப்படுத்திய வரைக்கும் புனிதம் பேசியவர்கள் “கண்டவர்களும் வந்து மாமாங்குளத்து லட்சணமே போச்சு’’ என்று மக்களின் பயன்பாட்டில் மாசுப்பட்டபோது கருவினர். எனக்கு நினைவு தெரிந்து எண்பதுகள், எண்பத்தைந்து வரைக்கும் கூட மாமாங்குளம் மக்கள் பயன்பாட்டுக்காக தடையின்றி தான் இருந்தது. தேங்கிய நீரை வெளியேற்றுவது துப்புரவு செய்வது குளக்களை கால்வாய் சீரமைப்பு என்று எந்த பராமரிப்பையும் நகராட்சி நிர்வாகம் சீராக செய்யாதபோது பயன்படுத்துபவர்களால் பாதிப்பு என ஆகி பார்ப்பன புனிதம் மெல்ல மெல்ல வேலிகட்ட வைத்து வெறும் பாவம் கழுவும் குளமாகி விட்டது.

மகாமகக் குளத்தைவிட மக்களின் பயன்பாட்டுக்கு நெருக்கமாக பல குளங்கள் கும்பகோணத்தில் உண்டு. நால்ரோடு குளம், அன்னம்மா ஆஸ்பெட்டல் பக்கம் இருந்த குளம், செல்வம் தியேட்டர் பக்கமிருந்த குளம், ஆயி குளம், அம்மா சத்திரம் குளம், வளையப் பேட்டை குளம், தாராசுரம் சத்திரத்துக் குளம், ரயிலடி குளம், பேட்டை நாணயக்காரத் தெரு குளம், தாலுகா போலீஸ் ஸ்டேசன் குளம்… போன்றவைகள் எல்லாம் மக்கள் சரளமாக புழங்கிய குளங்கள். ஏழை உழைக்கும் மக்களுக்கு பசியாற கொட்டிக் கிழங்கும், குரவை மீனும் தந்த பல குளங்களுக்கு ஈடாகாது இந்த மகாமகக் குளம். ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோருக்கு அடைக்கலமாக இருந்த மாமாங்குளங்கரையை மதத்தின் பெயரால் தட்டிப் பறிக்கப்பட்டதைப் பார்க்கையில் உண்மையிலேயே அது பாவக்குளம்தான். தாராசுரத்திலிருந்து பட்டீஸ்வரம் போகும் சாலையில் ஒரு அய்யர் பண்ணை வீட்டில் குளம் வெட்டி, மீன் வளர்த்து வியாபாரம் செய்ததும் ஏனோ நினைவுக்கு வருகிறது. அது சரி குலத்துக்குதான் கோத்திரம், குளத்துக்கு இல்லை போலும்!

“செஞ்ச பாவத்த எல்லாம் குளத்துல தீர்த்திடலாம்னா எவனுக்காவது ஒழுக்கம் வருமா? பாவ காரியங்களைச் செய்யத் தயங்குவானா? தவறுவானா? மத்த நதிகளின் பாவம் மகாமக குளத்துல போகும்னா, மகாமக குளத்து பாவம் எங்க போய் போகும். அது எந்த தண்ணியில பாவத்த கழுவும்…’’ என்று பெரியார் தர்க்கவியலாக எழுப்பிய கேள்விகள் மூட நம்பிக்கை ஒழிப்பைத் தாண்டி மக்களின் பண்பாட்டு அக்கறை பற்றியது. கும்பகோணத்தை கோவில் நகரமாகவும், புண்ணிய ஷேத்திரமாகவும் மட்டும் அடையாளப்படுத்தும் பாவத்தை முதலில் கழுவ வேண்டும். எந்த மக்களின் பார்வையில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து ஊரின் முகம் மாறுபடுகிறது. ஆதிக்க சாதிகளின் பார்வையில் ஊர் இனிய முகமாக இருக்கலாம். அங்கே அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்டவர்களின் பார்வையில் அது பயம், கொடூரம்!

தி.ஜானகிராமனின் பார்வையில் கும்பகோணம்

பக்தி மார்க்கமாக இருந்தாலும் கூட அதையும் ஆரியப் பார்ப்பன சமஸ்கிருதமயமாக்கும் அடையாளத்தின் குறியீடாகத்தான் ’கும்பகோணம்’ என்ற பெயரே உள்ளது. பிரளய காலத்தில் அமிர்த கும்பம் மிதந்து வந்தபோது சிவபெருமான் அதை விழச் செய்த இடமாதலால் இது கும்பகோணம். தமிழில் குடமூக்கு என்று தலபுராணம் கதை அளக்கிறது. அவாளின் மணிக்கொடி மாமாக்களே கும்பகோணம் என்றவுடன் அமிழ்தம் ஓடியதாக மறந்தும் பேசுவதில்லை. தி. ஜானகிராமன் தனது ஆஸ்திரேலிய பயண அனுபவக் கட்டுரையில் “பொதுவாக வெள்ளை நாடுகளைப் பார்த்தால் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஜனங்கள் வாழ்கிற இடத்தில் ஒரு துப்புரவு, நறுவிசு பளிச்சென்ற தோற்றம் கும்பகோணம் போன்ற ஊர்களின் சாக்கடைகள் ஞாபகத்திற்கு வராமல் என்ன செய்யும்.’’ (அடுத்தவீடு ஐம்பது மைல் நூலில் தி.ஜா.ரா) “நவராத்திரிக் கூட்டம் நடமாடத் தொடங்கிவிட்டது. புசு புசுக்கும் புதுப்புடவைகளும், பாவாடைகளும், நடந்த வண்ணம் இருந்தன. கடந்து போகும் ஒவ்வொரு கும்பலும் கதம்ப மனத்தை வீசி வீசிப் போயிற்று. நவராத்திரி முடிவு நெருங்க நெருங்க, வீதியில் கூட்டமும் புதுமையும் பெருகிக் கொண்டிருந்தன. நாளை ஒன்பதாவது நாள். சரஸ்வதி பூசை கட்டுக்கடங்கா பூரிப்பாக ஊர் மலர்ந்து கொண்டிருக்கும். பாபநாசத்தில் என்ன இருக்கப் போகிறது? எப்போதும் போல் மங்கலும் இருளுமாக அழுது வடிந்து கொண்டிருக்கும் இந்தக் கோலாகலத்தில் கும்பகோணத்தை விட்டுப் போவதென்றால் மனசு வரவில்லை. என்ன செய்வது?’’ என்று மோகமுள் நாவலில் அக்கிரகாரத்து கும்பகோணத்தில் மகிழ்ந்த மனம் ஆஸ்திரேலியாவுக்கு போனவுடன் சாக்கடை கும்பகோணத்தை வெறுக்கிறது. சாக்கடையின் தயாரிப்பாளர்களே சாக்கடைக்கு முகம் சுழித்தால், அதை சுத்தம் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்ட சாதியினர்க்கு அந்த ஊர் எப்படி இருக்கும்?

ஒட்டச் சுரண்டி ஊரைப் பழித்தவுடன் இது ஊரா நியூயார்க் போல வருமா, நியூ ஜெர்சி போல வருமா என வளர்ச்சிக்குத் தாவி லௌகீக உபாசகர்கள் அடுத்தவர் மண்ணை ஆட்டையைப் போடுவதுடன், அதற்கு தன் நோக்கில் கதை கட்டுவது புராணம் எழுதுவது, என்பதுடன் பொருத்தமாக ஊர் பெயரையே வேர் மண் சொல்லையே வெட்டி எறிந்து ஆரியப் பெயராக்குவதையும் செய்வதுண்டு. அதன் வழியில் தான் கும்பகோணத்து தலபுராணமும், குடந்தை என்ற பெயரையே கும்பகோணமாக்கியதும். மயிலாடுதுறையை ‘மாயவரம்’ என்றும் திருமுதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்றும் திருகு வேலை செய்தது போல பெயரிலேயே புகுந்து கலக்கும்போது குளத்தை கலக்க எம்மாத்திரம்? கும்பகோணம் விசுவநாத கோவில் தேவாரப்பதிகத்தில் கூட “குடந்தை’’ என்றே வந்துள்ளது. திருமழிசையாழ்வார் பாசுரத்திலும் “கடந்த கால் பரவி காவிரிக்கரை குடந்தையும் கிடந்தவாறே எழுந்திருந்து பேசு வாழி கேசனே! என்று வருகிறது. பக்தியே ஆனாலும் சரி, சரக்கு என்னதாய் இருந்தாலும், படத்துக்கு தமிழில் பெயர் வச்சாலாவது போதும்! என்ற கோடம்பாக்கத்து சுதந்திரம் கூட ஆரியக் கற்பனையில் இல்லை.

கும்பகோண புராணம்

அவிழ்த்து விடப்படும் பெயர்களுக்கு மட்டுமல்ல, ஊரை பார்ப்பன அடையாளமாக்கும் கட்டுக் கதைகளுக்கும் சைவ வெள்ளாக் கூட்டணியே சாதிக் களத்தில் நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ன் தருண் விஜய்க்கு தமிழ் அடையாளம் கொடுக்கும் தமிழ் ஆழ்வார்கள் இப்போதும் இருக்கிறார்கள். பார்ப்பனர்களால் மட்டும் பார்ப்பனியம் உயிர் வாழ்வதில்லை என்பதற்கு கும்பகோண புராணமும் சான்றாக இருக்கிறது. வடமொழியில் புனைந்து விட்ட புராணத்தை தமிழ் மக்களுக்கு அடையாளமாக்க சைவ வெள்ளாளக் கூட்டணியின் கைங்கர்யத்தை புரிந்து கொள்ள “மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் உ.வே.சா எழுதியிருக்கும் இந்த நிகழ்வுகளைப் பாருங்கள்,’’ அக்காலத்தில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை என்பவரும், பல சைவப் பிரபுக்களும் கும்பகோண புராணத்தை இக்கவிஞர் தலைவரைக் கொண்டு தமிழ்ச் செய்யுளாக இயற்றுவிக்க வேண்டுமென்று எண்ணினார்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படி குரோதன வருஷம் (1865) இவர் திருவாவடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்று பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தை தம்முடைய இருப்பிடமாகக் கொண்டு பரிவாரங்களுடன் இருந்தார். கும்பகோண புராணத்தை வடமொழியிலிருந்து முதலில் தமிழில் வசனமாக மொழிபெயர்த்து வைத்துக் கொண்டார். அவ்வாறு மொழிபெயர்த்ததற்கு உதவியாயிருந்தவர்கள் ஸ்ரீ சங்கராச்சாரியர் மடத்து வித்வானாகிய மண்டபம் நாராயண சாஸ்திரிகள் முதலியவர்கள். பின்பு புராணத்தை இவர் செய்யுள் நடையாக இயற்ற ஆரம்பித்தார்… (பக்: 259, 5-ஆம் பதிப்பு 2014, டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம்) இப்படி பார்ப்பன வெள்ளாள கூட்டுக் கலவையுடன் கும்பகோணத்து புராணம் ரீ மேக் ஆனது. இதுவும் அவாளின் மேக் இன் இந்தியா தான்! எனவே கும்பகோணத்து தீர்த்தக் குளங்கள் சாதாரண தீர்த்தக் குளங்கள் அல்ல. வரலாற்றையும், மக்களையுமே ‘தீர்த்த குளங்கள்’.

என்னைக்கோ கும்பகோணத்தின் காபி ருசியிலேயே வளர்ந்த ஜீவராசிகளின் நாக்கு நீளத்தை நம்பி இன்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ‘கும்பகோணம் டிகிரி காபி’ என்று பெயரை வைத்தே ஏமாற்ற முடியுமென்றால், ‘கும்பகோணம்’ என்பதையே பிராண்ட் வேல்யூவாக ஆக்கியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தின் வெற்றிக்கு காரணம் பார்ப்பன ருசி, சூத்திர நாக்கு என்றால் மிகையில்லை. மடாதிபதிகளின் மகா சன்னிதானங்களின் கைங்கர்யம் மட்டுமல்ல, இலக்கிய சன்னிதானங்களும் கும்பகோணத்து காபி கடைகளையும், கோயில் தீர்த்தங்களையும், இசை, நாட்டியங்களையும் எழுதி உசுப்பேற்றினர். கும்பகோணத்து சீவல், திருவையாறு தாம்பூலம், தஞ்சாவூர் அசோகா என டிகிரி காபியில் மூழ்கி, தலைவாழை மேய்ந்து இலக்கிய எச்சில் ஒழுகினர். ஏதோ கும்பகோணம் என்றாலே கொண்டாட்டம், மகிழ்ச்சி, அழகு என்று இவர்கள் ஏற்றிவிட்ட பாவத்தை எந்த மாமாங்குளமும் தாங்காது!

சோழரின் ஆட்சியில்

கும்பகோணம் மட்டுமல்ல, தஞ்சை மாவட்டம் முழுக்கவும், தலம், மூர்த்தி, தீர்த்தம், மடம், ஆதினம் என்று சூழ்ந்திருந்த இடமெங்கும் பண்டைய சோழ மன்னர்களின் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட பிரம்ம தேயங்கள், மடம், கோவிலுக்கு வழங்கப்பட்ட இறையிலிகள் என்ற நிலங்களில் கொடூரமாக சுரண்டப்பட்ட கூலி விவசாயிகளின் மரண ஓலம்தான், கோவில் மணிகளைத் தாண்டி காதில் ஒலிக்கிறது. பிற்காலத்தில் தேசிகர், மூப்பனார், வாண்டையார், நாயுடுக்கள், வெள்ளாளர் என பண்ணையார்களின் கீழே கடுமையாக வேலை வாங்கி வாரம், குத்தகை என அளந்து கொடுத்துவிட்டு வற்றிய வயிரோடு, எதிர்த்துக் கேட்டால் சவுக்கடி வலிக்க, சாணிப்பால் ஊற்றி பட்டபாட்டை நினைத்தால் உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கு இவைகள் கோவில் நகரமாக இல்லை, ஆயுள் சிறையாக இருந்தது. தஞ்சை மாவட்டத்திலேயே இவர்களின் உழைப்பை உண்டு கொழுத்த இலக்கியவாதிகள், வேத வியாசகர்கள், தத்துவ போஷினிகள் யாராவது இந்த கொடூர பக்கங்களை கும்பகோணத்து பாவங்களாக காட்டியிருக்கிறார்களா? குறைந்தபட்சம் பட்டுநூல் நெசவாளர்களின் நடுத்தர வர்க்க இருப்பை பேசும் எம்.வி. வெங்கட்ராமை விட அக்கிரகாரத்து பாலியல் நெளிவு சுளிவுகளை அனுபவமாக்கித் தரும் தி.ஜா.ரா. வை அல்லவா திகட்டாத தெள்ளமுதாய் படையல் போடுகிறார்கள். இத்தகைய இலக்கிய பாவங்களும் சேர்ந்த கும்பகோணத்தின் உண்மை முகத்தை துல்லியமாக படம் பிடித்து காட்டுவார் தந்தை பெரியார். “சாதாரணமாக கும்பகோணம் ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ வேறு ஏதாவது வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத்தகுந்த விசேசம் பொருந்திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது… அதில் வசிக்கும் மக்களோ பெரும்பாலோர் பார்ப்பனர்களும், மேல்சாதி மிராசுதாரர்களுமாகும்.’’

“பார்ப்பனர்கள், மிராசுதாரர்கள் இரண்டு கூட்டமும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல் ஏழைகள், உழைப்பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலையே வாழ்த்து வருகிறார்கள். இதைத் தவிர மற்றபடி இந்த ஜில்லாவுக்கும் கும்பகோணத்துக்கும் வேறு உண்மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது…’’ (குடியரசு தலையங்கம் 12.2.1933) என்ன ஒரு துல்லியம் உழைக்கும் மக்களின் பார்வையில் உண்மையை போட்டுடைக்கிறார் பெரியார்.

மக்களாட்சி என்று சொல்லக்கூடிய காலத்திலேயே இதுதான் நிலைமை என்றால் மன்னராட்சியில் ஊர்களின் யோக்யதை எப்படி இருந்திருக்கும்? ‘இவர்களுடைய வடமொழிப் புலமையையும், சீலத்தையும் கண்டு மகிழ்வெய்திய பொதுமக்கள் அன்னோரின் நல்வாழ்வின் பொருட்டு ஊர்ப்பொது நிலங்களுள் சிலவற்றை வேதவிருத்தி, பட்டவிருத்தி, பாரத விருத்தி, புராண விருத்தி என்ற பெயர்களோடு இறையிலி நிலங்களாக அவர்கட்கு வழங்கிப் பெரிதும் ஆதரித்து வந்தனர் என்பது பல கல்வெட்டுகளால் நன்குணரக் கிடக்கின்றது. அன்றியும் திருக்கோயில்களில் நாள்தோறும் உச்சியம் போதில் பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு அரசர்களும், அரசியல் தலைவர்களும் பிற செல்வர்களும் நிவந்தங்கள் வழங்கியுள்ளமை அறியத்தக்கதாகும்’ என்று அறியத் தருகிறார். சி.வை. சதாசிவபண்டாரத்தார். (நூல்: பிற்கால சோழர் வரலாறு).

கூலி விவசாயிகளின் நிலை

பொதுமக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஒரு படி நெல் கூலி உயர்வாகக் கேட்டால் ஆளையே கொளுத்தும் ஆதிக்க கும்பல் தான் மக்களின் சொத்தை கோவிலின் பெயரால் பார்ப்பனர்களுக்கு தானம் செய்துள்ளது. நாகர்கோவில் அருகே உழைக்குடி விளை எனும் குடியானவர் கிராமம் உள்ளூர் அரசனால் கையகப்படுத்தப்பட்டு பார்வதிபுரம் என்று பெயரிடப்பட்டு பிராமண மையமாக மாற்றப்பட்டது. செலவுக்கு வளமானதும், பாரியதுமான நிலம் ஒதுக்கப்பட்டது என்கிறது கி.பி. 866-ன் பார்வதிபுரம் சாசனமும் கி.பி. 1125-ன் திருவல்லம் கோயில் சாசனமும். (தமிழ்நாட்டு வரலாறு, கே. ராஜய்யன்).

பார்ப்பன மேலாண்மைக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த மன்னர்கள் மக்களின் மீதோ, தலைவரி, கால்வரி, முலைவரி, முடிவரி, மீசைவரி, சாணார் வரி, வாள் வரி, தாலிவரி, தலைப்பாகை வரி, வெல்ல வரி, ஈழம் பச்சை, தென்னல் திருகு வரி, கூடை வரி, தகன வரி, மரண வரி என பிடுங்கி பெற்றுள்ளனர். (The Dravidian languages – A Social Historical Study, M. Imanuvel, Nagarcoil, 2002). இதுமட்டுமல்ல, திருவாலங்காட்டு வேதாரணி ஈசுவரர் கோவிலுள்ள மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு மடமொன்றின் நிலங்களில் பயிர் செய்ய ஆண், பெண் அடிமைகள் விற்கப்பட்டதை குறிப்பிடுகிறது. மக்களையே கோயிலுக்கும், பார்ப்பனர்களுக்கும் மடத்திற்கும் அடிமையாக்கியிருக்கிறது சோழப் பேரரசுகள்.

பழைய பாணியில் குலத்தையே ‘இசைவுத்திட்டாக’ எழுதி வாங்க முடியாததால் குளத்திலாவது போட்டு அமுக்குவோம் என்பதுதான் மகாமகத்தின் நீட்சி. அந்த காலம் மாதிரி ஓசியில் உழைப்பை வாங்க முடியாது பாவ புண்ணிய பயமுறுத்தல் காட்டி கையிலிருக்கும் காசையாவது உண்டியலில் சேர்க்கலாம், தட்டில் வாங்கலாம் என்று சந்தைப் பொருளாதாரத்திற்கேற்ற பார்ப்பன இறையிலிகள் தான் கோவில் திருவிழாக்கள்! மகாமங்கள்! தமிழ் மன்னர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு கோயிலைக் கட்டிய உழைக்கும் மக்களையே உள்ளே விடாமல் தூரத்தில் நின்று கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள் என்று உயரமான கோபுரங்களை கட்டுவித்து ‘கோபுர தரிசனம் பாவவிமோசனம்’ என்று பார்ப்பனர்களுக்கு செங்கோல் பிடித்து சுரண்டலின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துபவர்கள்தான் சோழ மன்னர்கள், உத்திராட்சயை உருட்டிய மடாதிபதிகளும், சூத்திர ஆதிக்கசாதி பண்ணைகளும், கோவில் நகரங்களின் கொடூர முகங்கள் இப்படிப்பட்ட இதை கோவிலின் பெயரால் அடையாளப்படுத்தி உயர்த்திப் பிடிப்பது நவீன ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் கட்டுப்படுத்தும் கலாச்சார உளவியலாகும்.

சீனிவாச ராவின் பார்வையில்

வரலாற்றில், அரசன், பார்ப்பனர், வெள்ளாளக் கூட்டணியின் அதிகாரம் மீது, கொடிய அடக்குமுறை மீது குகையிடிக்கலகம் செய்த இடங்கை, வலங்கை சண்டை வராதிருக்கத்தான் கோயில், சத்திரமும் கும்பகோணத்தில் பெருகின. அதுமட்டுமில்லாமல் தஞ்சை மாவட்டத்து விவசாயிகள் உழைத்து உருவாக்கும் உபரியை சுருட்டிக் கொள்ளவும் பாடல் பெற்ற தலங்கள் தேவைப்பட்டன. மக்களின் உழைப்பையும், உடமைகளையும் தட்டிப் பறித்து ஒட்ட உறிஞ்சிய வலி தெரியாமலிருக்க மடத்துல தின்னுக்க, சத்திரத்துல படுத்துக்க என வழிகாட்டப்பட்டது. அதிலும் சாதிக்கேற்ற நீதி நிலவியது. “மகாமகக் குள கீழக்கரை சிவன் கோவிலில் துவாதசிகளில் பலருக்கு சோறு போடுவார்கள். வெற்றிலைச் சீவலும், காலனா தட்சினையும் கொடுப்பார்கள். சத்திரா போஜனா மடா நித்திரா என்ற வசனமும் உண்டு… இரவில் கம்மென்று மோர் சாதமும் ஊறுகாயும், தினம் அம்மாமிக்கும் பாட்டிக்கும் பலகாரத்திற்காகச் செய்த இட்லி, தோசை, உப்புமா, பிடி கொழுக்கட்டை, அடை போடுவார்கள் வயிறு நிரம்பியது. வேறு கவலைகளும் தெரியவில்லை” என்று கரிச்சான் குஞ்சின் ‘பசித்த மானிடம்’ நாயகன் கணேசன் காட்டும் கும்பகோணம் வேறு, இது உறிஞ்சி வாழும் கும்பகோணம். உழைத்து வாழும் தஞ்சை மாவட்ட மக்கள் நிலையோ வேறு. 1947-இல் கம்யூனிச விவசாய சங்க தலைவர் தோழர் சீனிவாச ராவ் காட்டும் காட்சி இது.’’

கும்பகோணத்தைப் பொறுத்தவரை கோயில்கள் மட்டும் நிறைய அல்ல. கொசுக்களும் நிறைய. கொசுக்களின் நகரம் என்றும் சொல்லலாம். எண்பதுகளில் கூட யானைக்கால் நோயும், தொழுநோயும் கூட கோயில் நகரத்தின் திவ்ய தேச விசேசங்கள்! பாடல் பெற்ற தலங்களின் பகவான்களால் தீர்க்க முடியாத பெருவியாதியை தொழுநோயை முத்துபிள்ளை மண்டபத்தின் கிறித்துவ ஆஸ்பத்திரிதான். தடுத்தாட் கொண்டது. உலகின் பாவத்தை ஒழிக்கப் போவதாய் கனைக்கும் ஜகத்குரு என்ற சங்கரமடத்தால் ஒரு கொசுவைக் கூட ஒழிக்க முடியவில்லை. கொசு மருந்தடிக்கும் துப்புரவு தொழிலாளிகளைத்தான் மக்கள் தெய்வமாய்த் தேடினர்.பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதி திராவிட மக்களே, இவர்கள் நாள் முழுவதும் வேலை செய்தால், 1/2 மரக்கால் நெல்தான். அதாவது பட்டணம் படியில் ஒருபடி நெல்தான் அளந்து கொடுப்பார் மிராசுதார். சமீபத்தில் தான், இவர்களுக்கு கூலி உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு பண்ணையாளர் குடும்பம் முழுவதற்கும் வருசத்தில் மொத்த வரும்படி 160 முதல் 170 ரூபாய் வரை கிடைக்கிறது. இது குடும்பத்தின் மொத்த வருமானம் என்பதை மறந்து விடாதீர்கள்…)

பண்ணையாட்களும் அவர்களுடைய மனைவி மக்களும் நிலத்துடன் பிணைக்கப்பட்டு பிறப்பிலேயே அடிமைகளாக இருக்க வேண்டியுள்ளது. பண்ணையாட்களுக்கும் மற்ற விவசாயிகளுக்கும் தினம் ஒரு வேலைதான் சுடுசோறு கிடைக்கும். சுடுசோறு என்று சொல்லுவதை விட சுடுகஞ்சி என்று சொல்லுவதே பொருத்தம். பருப்பு இல்லாமல் சொத்தைக் கத்தரிக்காயைப் போட்டு, கழுநீர் தண்ணீர் போல தயாரித்திருப்பார்கள். அதற்கு சாம்பார் என்று பெயரிடப்பட்டிருக்கும். மற்ற இரண்டு வேலைகளிலும் பழைய கஞ்சியும், உப்பு போட்ட நீராகாரமும் தான், இறைச்சி வாங்க அவர்களுக்கு சக்தியில்லை. ஏன், மாதத்திற்கு ஒரு தடவை கருவாடு வாங்கக் கூட சக்தியில்லை. அப்படியிருக்க மாமிசத்தைப் பற்றி பேசுவானேன்! வருசத்தில் ஓரிரு தடவை தீபாவளியன்றாவது இறைச்சி சாப்பிட்டு விட்டால், அது அவர்களுக்கு ஆடம்பரமிக்க ஆர்ப்பாட்ட விருந்தாகும். மிராசுதார்கள் எங்களை சைவர்களாக்கி விட்டார்கள் என்று பண்ணையாட்கள் தமாஷாகச் சொல்வதுண்டு. ஆனால் இந்த தமாஷிற்குள்ளே எத்தகைய சோகத்தை உள்ளடங்கிக் கிடக்கிறதென்பதை நாமறிவோம்… (நூல்: தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? ப. சீனிவாசராவ்) ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளையும், குத்தகை விவசாயிகளையும் இப்படி சோகத்தில் தள்ளிதான் கோயில்கள் நடந்திருக்கின்றன. மடங்கள் சைவத்தை நெய்யால் உருக்குகின்றன. உழைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் வியர்வை சிந்துவதை நிறுத்தியிருந்தால் கும்பகோணத்தின் அமிர்த கலசத்தோடு கோயில் பார்ப்பன, சைவ மடங்களின் கும்பியும் சேர்ந்து நாறிப் போயிருக்கும்.

கோபுரங்களின் மறைப்பை விலக்கிப் பார்த்தால் தான் ஊரின் உண்மை வரலாறு தெரியவரும். ‘‘வருக தெள்ளமுதே, வருக செங்கரும்பே, வருக செந்தாமை மகளே, வருக பொற்கொம்பே..’’ என சாரங்கபாணி கோமளவல்லித் தாயாருக்கு கோட்டையின் கோமளவல்லி ரேஞ்சுக்கு தலபுராணத்தில் கட் அவுட் வைத்த பார்ப்பன சைவ பரிவாரம் ஊரை வாழவைக்கும் உழைக்கும் மக்களைப் பாடாதது வியப்பில்லை. கோபுரங்கள் மறைத்த உண்மைகள் அவைகள்.

இப்போது நினைத்தாலும் குடந்தையின் அதன் சுற்றுப்புறங்களின் கள வரலாறு உண்மையான தல வரலாற்றை என்னுள் அலைஅலையாக எழுப்புகிறது. கும்பகோணத்தைப் பற்றிப் பேசினால் அந்தகால ‘சூத்திர நாக்கு: பார்ப்பன ருசிகளுக்கு’ பஞ்சமி அய்யர் காபி கிளப்பும் பொற்றாமரைப் பகுதி கொழுந்து வெற்றிலையும் நினைவுக்கு வருகிறது. ஆனால் பஞ்சமி அய்யர் காபி கிளப்புகள் போல பல கடைகளுக்கு பால் கொண்டுவர சூரியன் விழிக்கும் முன்னே கண் விழித்து 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் சுற்றளவில் பம்பப்படையூர், பட்டீசுவரம், முளையூர், கொள்கை, கோவிந்தகுடி போன்ற ஊர்களிலிருந்து சைக்கிளில் பால்கேனைக் கட்டிக் கொண்டு விலா எலும்பு வியர்த்து வடிய தடதடவென்று குலுங்கும் சாலைகளில் வைக்கோல் பிரியால் பால்கேனை மூடி சட்டையின் மேல் பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெஞ்சுக் காற்று சூடேறி விரையும் பால் வியாபாரிகளின் சைக்கிள் மணி காதுகளில் ஒலிக்கிறது. இந்த சைக்கிள் மணி இல்லையேது ஏது கோயில் மணி! அபிசேகம்!

வாழை மட்டையில் வாகாக மடித்து காம்புகள் கணக்கு வெளியே தெரியும்படி கிழியாமல் மடித்து வெற்றிலைகளை அடுக்கி, தன்முகம் வியர்வையால் கழுவி வெற்றிலையில் தண்ணீர் தெளித்து வெற்றிலை நரம்புகளுக்கு விரல் நரம்பால் உயிரோட்டம் பாய்ச்சும் பெரும்பகுதியான அந்த இசுலாமியத் தொழிலாளர்கள் இல்லையென்றால் கும்பகோணத்து வெற்றிலைக்கு உயிர் ஏது?

சக்கரைப் படித்துறையும், காவிரித் தீர்த்தமும் புனிதம் என்று கை நனைப்பவர்களைப் பார்த்து காவிரியே நகைக்கும். அதே காவிரி பாலக்கரையில் ஊர் உறங்கும் நேரத்திலும், முட்டைக்கோசு, பீட்ரூட், வெங்காய மூட்டைகளை இறக்கி, முழு நிலாவையும் ஒரு மூட்டையாக காவிரியில் இறக்கியது போல நீரில் நிலா களைந்து வியர்த்த உடலை நினைக்கிறானே, அந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் கை பட்டே காவிரி புனிதமடையும்.

பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சையின் போதெல்லாம் எங்கள் ஊரான தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலுக்கு அமைதியாக இருக்கும் என்று படிக்கப் போனதுண்டு. ஆனால் மண்டபங்களின் வவ்வால் வாடையும் சோழப் பேரரசின் அந்தப் பிரம்மாண்ட தனிமையின் மர்மமும், பேசத் துடிக்கும் சில கற்சிலைகளின் துயரமும் என்னை அங்கே இருக்க விட்டதில்லை. பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும். தம்பி போய் படிப்பா! என்று அவர்களின் அக்கறையைத் தாண்டி அவர்கள் குடும்பம் குடும்பமாக ஈடுபடும் வேலை கவனிக்க வைக்கும். சோழப் பேரரசின் ஐராதீஸ்வரர் கோயிலைச் சுற்றி அந்த ஏழைப் பேரரசுக் குடும்பங்கள் நாள் முழுக்க முகுது தண்டு முறிய உழைக்கும் காட்சிகள் புளிய மரங்களின் நிழல் எங்கும் விரியும். தொலைவிலிருந்து பார்த்தால் அவர்களின் ரத்த நாளங்களையே எடுத்து உலர வைத்தது போல இருக்கும். கும்பகோணம், தாராசுரம், திருபுவனம், அம்மாசத்திரம் என்று சுற்றுப்புறங்களில் உடம்பும் ஒரு நூலாக வெளியும் இவர்களின் அன்றைய அலுப்புக்கு மருந்து ஆனை மார்க் சுருட்டும், எம்.ஜி.ஆர். சினிமாவும்தான். “இந்தக் கஷ்டத்திலும் எத்தன புள்ள பாரு” என்று அவர்களைப் பார்த்து சிலர் கருவுவது உண்டு. உழைப்பிற்கு எண்ணற்ற கைகள் தேவைப்படும் அவர்களின் வாழ்க்கைச் சூழலை அறியாத திண்ணைப் பேச்சு கும்பகோணங்கள் அது! நூல் விரிக்கும் அளவுக்குக் கூட வீடு இல்லாததால் வெளியே நூல், சாயம் பார்ப்பதும் வீடுகளுக்குள் பெருங்குடும்பமாக அவர்கள் மடித்துப் படுத்துக் கொள்வதுமான அந்தத் தொழிலாளிகள் இல்லாவிடில் சாமிகளுக்கு ஏது சரிகைப் பட்டு! மாமிகளுக்கு ஏது மடிசார் கட்டு!தலைச்சுமை வியாபாரிகள் தயாராகி தேனீர் கடையில் நிற்கையில், அத்தனைப் பேர் கணக்கையும், தலையாட்டி மனதில் வாங்கி, ‘தர்’ என்ற ஓசையோடு கீழிருக்கும் தகரக் குவளையில் தலைக்கு மேலே தூக்கிய தகரக் குவளையில் வளைத்து ஊற்றும்போது, திடீரென ஒரு நிமிடம் தேநீர் செடி அசைவது போல தெரியும்.

உழைப்பின் உன்னதத்தை விடியல் சூரியனும் வேடிக்கைப் பார்க்கும். தாராசுரத்திலிருந்து நான் கல்லூரிக்கு நடந்து போகையில் போகிற வழியெங்கும் எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளிகள் குடம், அடிக்கும் ஓசை உழைப்பின் ஓசையாய் என்னுள் இறங்கும். அந்த நேரம் நாம் என்ன வாக்கியம் நினைக்கிறோமோ அதையே அடிக்கணக்கில் திரும்பச் சொல்வது போல அது ஒரு உணர்வைத் தருவதுண்டு. அதை உழைப்பின் ரிதம் என்பதா? எந்த இலக்கியங்களும் சொல்லித் தராத வர்க்கத்தின் பாடலை அது என்னுள் விதைத்தது. பாத்திரம் தயாரிக்கும் அந்த உழைப்பாளிகளின் மூச்சோடு வெளிவரும் வெப்பக் காற்றும், பல பேர் சேர்ந்து ஒரே இடத்தில் தகடுகளைத் தட்டும் ஓசையும் தான் ஊரின் உயிர் துடிப்பு. கரி படிந்த முகத்தோடு அன்றாடம் வேலை முடிந்து வருகையில், பக்கத்து குடியிருப்பில் இருந்த எனக்கு கடலை பக்கோடா வாங்கி வரும் அவரை கரி ‘மாமா’ என்றே அழைத்திருக்கிறேன். சிறு தொழில்களை வாழவைத்த இந்தத் தொழிலாளர்களின் கைகள்தான் குடந்தையை உருவாக்கியவை!

தாராசுரத்தில் எம்.எஸ். ஸ்டாலின் என்ற R.I.M.P ஒரு டாக்டர் இருந்தார். அனுபவ வைத்தியர். அவர் தி.க.காரர் பெரியார் படம், புத்தகங்களை வருபவர்கள் பார்வையில் படும்படி வைத்திருப்பார். பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகங்களைத் தாண்டி மக்களின் கண்களுக்கு புத்தகங்களைக் காட்டியது அந்தப் பகுதியில் அவர்தான். பார்ப்பனியம் பூஜைகளையும், விபூதியையும் காட்டி புத்தகங்களை மறைத்த காலத்தில் ஊரில் அவர் மட்டுமின்றி பல முடிதிருத்தும் கடைகளில் பெரியார் நூல்கள் மூளையைத் திருத்தும். இவர்களின் பங்களிப்பு விளம்பரமில்லாத சமூகத் தொண்டு. பார்ப்பனர்களும், மடாதிபதிகளும் தீபாராதனைகளைக் காட்டி கண்ணைக் கட்டும் காலத்தில் கண்களைத் திறந்த இவர்கள் அல்லவா கும்பகோணத்தின் குரு பரம்பரைகள்! அதுவும் மண்ணில் விளையாண்டு, சொறி சிரங்கு வந்தபோது ஸ்டாலினிடம் போக அவர் புண்ணைத் துடைக்கையில் அலறினேன். “ஏண்டா பல ஆண்டுகளாய் நம்ம மேல இருக்குற பார்ப்பன சிரங்கையே பொறுத்துகிட்டுருக்கோம், இந்த சொறிசிரங்கு எரியூதாடா? இத விட பெரிய எரிச்சல் அது, அதையே பொறுத்துக்கிட்டு இருக்கோம்! இது போயிடும், அத என்ன செய்ய போறோம்… ஹூம் சொல்லுடா?’’ என்று பேசிக் கொண்டே மருந்து போட்டு, மாத்திரை கொடுத்தது நினைவுக்கு வந்து போகிறது. அது மட்டுமல்ல ஊசி போடும்போது ஆ… என்று சிலர் கத்தும்போது, ஏண்டா! அத்தன ஊசியக் குத்திக்கிட்டு காவடி போட்டுக்கிட்டுப் போற இப்ப கத்துற? என்று இடித்துரைப்பார்! இதில் வியப்பு என்னவென்றால் அவர் தி.க. நாத்திகர், பகுத்தறிவுவாதி, பகுதி மக்களுக்கோ அவர் கைராசி டாக்டர்.

பார்ப்பன இந்துவெறியை பல்லக்கில் ஏற்றி நம் தோள்களை முறிக்கும் தொலைநோக்குத் திட்டத்தில் ஒன்றுதான் மகாமகத்துக்கு வடக்கிலிருந்து அகோரிகளை அழைத்துவருவது, துறவியர் மாநாடு நடத்துவதெல்லாம், மெல்ல மெல்ல வடக்கே கும்பமேளா போல திருவிழாக்களை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆரிய பரிவாரத்தின் கைக்கருவிகளாக தீட்டிக் கொண்டு மக்களை இந்து மதவெறிக்குள் திரட்டுவது என்பதுதான் அவர்களின் திட்டம். சாதாரண மக்களின் கடவுள் நம்பிக்கையை மெல்ல மெல்ல இந்துமதவெறி நம்பிக்கையாக மாற்றும் காவியுலக பாவிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற உழைக்கும் வர்க்கத்தின் விசுவரூப எழுந்தருளை வேண்டி நிற்கிறது உலகம்!குருஸ்தலம், ராகுஸ்தலம், கேதுஸ்தலம் இப்படி கும்பகோணத்தை சுற்றி இருக்கும் பல ஊர்களும் விவசாயிகளின் வேலைக்களம்தான். இந்த விவசாயிகள், சிறு தொழிலாளிகள், வாகன ஓட்டுநர்கள், தெருவுக்கு கீரை கட்டு சுமக்கும் பெண்கள், பொற்றாமரைக்கும், மாமாங்குளத்திற்கும் காலரா வராமல் தடுக்கும் நகர சுத்தி தொழிலாளர்கள் இவர்கள்தான் உழைக்கும் கும்பகோணத்தின் தலைகள்! இவர்கள் இல்லாமல் இவர்களைப் பற்றி பேசாமல் என்னடா தலபுராணம்! இவர்களை அடிமைப்படுத்தும், சுரண்டும் சூழலை எதிர்க்காமல் ஊர் உருப்படுமா? எத்தனை மகாமகம் குளித்தாலும் பாவம் போகுமா? “சாமி கும்பிடுவதற்காக ஏன்? பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டுமா?’’ என்று பெரியார் கேட்ட கேள்வியில் எவ்வளவு நியாயமும், உண்மையும் இருக்கிறது. பெரியாராவது பகுத்தறிவுவாதி. பார்ப்பனர் காளமேகப் புலவரே, “தோளை முறித்ததுமன்றி, நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய்; நாளை இனியார் சுமப்பார். எந்நாளும் உன் கோயில் நாசந்தானே!’’ என கோயில் நாசமாய் போகட்டும் என்று குருக்களையும் பல்லக்கில் சுமந்ததை நொந்து பாடியுள்ளார்.

– துரை. சண்முகம்

— நன்றி. வினவு இணையதளம்.