“இளையராஜாவுக்கு துரோகம் செய்த விஜய் டி.வி.“ -பிரதாப் போத்தன்

“நான் மிகவும் நேசிக்கும் இளையராஜாவுக்கு விழா நடத்துகிறேன் என்று அவருக்கு துரோகம் செய்துவிட்டது விஜய் டி.வி` என்று தனது முகநூல் பக்கத்தில் புலம்பித்தள்ளியுள்ளார் இயக்குநர் பிரதாப் போத்தன். இதோ அவரது பதிவு…

“ஏகப்பட்ட அழைப்புகள், நான் இயக்குநர்கள் குழுவிலும் , நடிகர்கள் குழுவிலும் இருப்பதாகத் தெரிவித்தார்கள். நானும் அதை நம்பி போனேன். ஏனெனில் இளையராஜாவின் சிறந்த பாடல்கள் சில என்னை வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு இயக்குநராக அவர் எனக்குத் தந்ததெல்லாம் சிறந்த பாடல்கள்தான். இதுவரை சரியில்லாத பாடல்களை அவர் என் படங்களுக்குக் கொடுத்ததே இல்லை. கடைசியாக நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த யாத்ரா மொழி, மற்றும் வரவிருக்கும் ஒரு மலையாளம் படம் என அனைத்திலும் மிக நல்ல பாடல்கள். சரி, இந்த விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வருவோம். சீக்கிரம் போய்விடலாம், அப்போதுதான் மேஸ்ட்ரோ இளையராஜாவின் ஆசியைப் பெற முடியும் என நினைத்து வந்து சேர்ந்தேன்.

ஆனால் ஒரு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியைப் போன்றே மிக அமெச்சூர்த்தனமாக ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருந்தது விஜய் டிவி. என்னுடைய பாடல்கள் எதுவும் அங்கே அரங்கேற்றப்படவில்லை. கௌதம் மேனனின் பாடல்கள் வரிசையில் மட்டும் என் இனிய பொன் நிலாவே, மற்றும் கோடைகாலக் காற்றே பாடல்கள் பாடப்பட்டன. பிறகு இயக்குநர்கள் வரிசையிலும் நான் அழைக்கப்படவில்லை. எனக்கு அது பெரிதாக பாதிக்கவில்லை. காரணம் எனது சர்க்கரை அளவு அதிகமானதால் இயற்கை அழைப்பு. அதனால் எழுந்து சென்றுவிட்டு வந்தால் அப்போதும் இயக்குநர்கள் விடாமல் தொணதொணத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு நடிகைகள் பேச்சு.. அவை எல்லாம் கமலின் வருகையை பிரகடனப்படுத்தவே நடந்தன. எல்லாம் முடிந்து ‘லார்ட் ஆஃப் தி ரிங்’ பாணியில் காத்திருந்தமைக்கு விருந்தாக சுமார் 11 மணியளவில் மணிரத்னத்தின் ‘கீதாஞ்சலி’ பட ஓ பிரியா, பிரியா பாடல் பாடப்பட்டது. அப்போது நான் கிளம்ப ஆயத்தமானேன். அந்நேரம் நிகழ்ச்சியின் பொறுப்பாளரான பெண் ஒருவர் வந்து அடுத்து நீங்கள்தான். மலையாள நடிகர்கள் சார்பாக நீங்களும், ஜெயராமும் மேடையேறவேண்டும் எனக் கூறினார். ஒரு நடிகராக மலையாளத்தில் அவர் பாடலுக்கு நான் நடித்ததில்லை. இயக்குநராக நான் அவருடன் மலையாளத்தில் ஒரு படம் இயக்கியிருக்கிறேன். நான் எப்படி மலையாள படவுலகம் சார்பில்? என்று கேட்டால், அந்தப் பெண் கறாராக நீங்கள் இருந்தே ஆக வேண்டும் நடிகர்கள் வரிசையில் கண்டிப்பாகப் பேச வேண்டும் என அடம் பிடித்தார். நான் முடியாது என்று கிளம்பிவிட்டேன்.

இந்த விஜய் டிவியின் எப்போதுமான தங்கள் பாணி அட்டூழியங்களால் ருபெர்ட் முர்டொக்கின் (ஸ்டார் டிவியின் நிறுவனர்) பெயரைக் கெடுக்கிறார்கள். ஒரு மேஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் விதம் இதுவல்ல. நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான நிகழ்ச்சி இது தான்,” என பிரதாப் போத்தன் எழுதியுள்ளார்.